பாடம் : 137 ஒருவரைப் புனிதப் போருக்காக குதிரையில் ஏற்றியனுப்பிய பிறகு குதிரை விற்கப்படுவதைக் கண்டால்...
3002. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி) (ஒருவரை) இறைவழியில் (போரிட) குதிரையொன்றில் ஏற்றி அனுப்பினார்கள். பிறகு, அது (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டார்கள். அதை வாங்க விரும்பி, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ('அதை வாங்கலாமா?' என்று) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள்' என்று கூறினார்கள்.
Book : 56
3003. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.
நான் ஒருவரை இறைவழியில் (போரிடுவதற்காக) குதிரையின் மீது ஏற்றி அனுப்பினேன். தன்னிடம் இருந்த அந்த குதிரையை அவர் விற்றார்... அல்லது வீணாக்க இருந்தார். அதை நான் வாங்கிக் கொள்ள விரும்பினேன். அதை அவர் மலிவான ஒரு விலைக்கு விற்று விடுவார் என்று நான் எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் (அதை வாங்கலாமா என்று ஆலோசனை) கேட்டேன். அவர்கள், 'அதை வாங்காதீர்கள்; அது ஒரு திர்ஹமுக்குக் கிடைப்பதாயிருந்தாலும் சரி! ஏனெனில், தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன்' என்று கூறினார்கள்.
Book :56
பாடம் : 138 தாய் தந்தையரின் அனுமதியுடன் அறப் போர் புரிவது.
3004. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாயும், தந்தையும் உயிருடனிருக்கின்றார்களா என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ஆம் (உயிருடனிருக்கின்றனர்) என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை) என்று கூறினார்கள்.
Book : 56
பாடம் : 139 ஒட்டகத்தின் கழுத்தில் மணி போன்றவற்றைத் தொங்க விடுவது.
3005. அபூ பஷீர் அல் அன்சாரி(ரலி) கூறினார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, 'எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்' என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ர்(ரஹ்), 'அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள்' என்று அபூ பஷீர்(ரலி) கூறினார் என எண்ணுகிறேன்' என்று கூறுகிறார்கள்.
Book : 56
பாடம் : 140 ஒருவர் (அறப் போருக்குச் செல்ல) தன் பெயரைப் பதிவு செய்து கொண்ட பின் அவரது மனைவி ஹஜ்ஜுக்குப் புறப்பட்டால் அல்லது ( போரில் கலந்து கொள்ள முடியாதபடி அவருக்கு) வேறு ஏதாவது (நியாயமான) காரணம் இருந்தால் அவர் போரில் கலந்து கொள்ளாமலிருக்க அனுமதியளிக் கப்படுமா?
3006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்' என்று கூறினார்கள்.
Book : 56
பாடம் : 141 ஒற்றர் (வேவு பார்த்துத் தகவல் தருபவர்) அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். (60:1)
3007. அலீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் 'ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), 'கடிதத்தை வெளியே எடு' என்று கூறினோம். அவள், 'என்னிடம் கடிதம் எதுவுமில்லை' என்று கூறினாள். நாங்கள், 'ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்' என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இவர் உங்களிடம் உண்மை பேசினார்' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, 'நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்' என்றார்கள்.
'என்ன (பலமான) அறிவிப்பாளர் தொடர் இது!' என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) (வியந்து) கூறினார்கள்.
Book : 56
பாடம் : 142 (போர்க்) கைதிகளுக்கு ஆடை அணிவிப்பது.
3008. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போரின்போது போர்க் கைதிகள் (கைது செய்யப்பட்டுக்) கொண்டு வரப்பட்டனர். (அப்போது எதிரணியில் இருந்த நபி(ஸல்) அவர்களின் பெரியதந்தை) அப்பாஸ்(ரலி) அவர்களும் (கைதியாகக்) கொண்டு வரப்பட்டார்கள். அவரிடம் அணிவதற்கு ஆடை எதுவும் இல்லாதிருந்தது. நபி(ஸல்) அவர்கள் ஒரு சட்டையைத் தேடினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபையின் சட்டை அவர்களுக்கு அளவில் பொருத்தமாக அமைந்திருப்பதைக் கண்டார்கள். அதையே அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அணிவித்தார்கள். இதன் காரணத்தால் தான் அப்துல்லாஹ் இப்னு உபை (இறந்த பின்பு அவனு)க்கு நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையைக் கழற்றி அணிவித்தார்கள்.
'அப்துல்லாஹ் இப்னு உபை, நபி(ஸல்) அவர்களுக்கு இந்த வகையில் ஓர் உபகாரம் செய்திருந்தான். நபி(ஸல்) அவர்கள் அதற்குப் பிரதியுபகாரம் செய்ய விரும்பினார்கள்' என்று அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.
Book : 56
பாடம் : 143 எவருடைய கரங்களில் ஒரு மனிதர் இஸ்லாத்தை ஏற்கின்றாரோ அவருடைய சிறப்பு.
3009. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, 'நாளை நான் ஒரு மனிதரிடம் இஸ்லாமியச் சேனையின் கொடியைக் கொடுப்பேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியைக் கொடுப்பான். அவர் (எத்தகையவர் எனில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்' என்றார்கள். மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் யாரிடம் கொடியைக் கொடுப்பார்கள்?' என்று தமக்குள் ('இன்னாரிடம் கொடுப்பார்கள்' என்று சிலரைக் குறிப்பிட்டுப்) பேசியபடி தங்கள் இரவைக் கழித்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் (இஸ்லாமியச் சேனையின்) கொடி தம் கரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டபடி காலை நேரத்தை அடைந்தனர். (காலை நேரம் வந்தவுடன்) 'அலீ எங்கே?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அலீ அவர்களுக்குக் கண் வலி' என்று சொல்லப்பட்டது. எனவே, (அலீ அவர்களை அழைத்து வரச் செய்து) நபி(ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரண்டு கண்களிலும் தம் எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக (வலி நீங்கிட) பிரார்த்தித்தார்கள். உடனே, அலீ அவர்கள் (அதற்கு முன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பது போன்று குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். 'அவர்கள் நம்மைப் போன்று (இறைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்' என்று அலீ அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அலீயே!) நிதானத்துடன் சென்று அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழையுங்கள். (இஸ்லாத்தை ஏற்பதால்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் மிக உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.
Book : 56
பாடம் : 144 சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட (போர்க்) கைதிகள்.
3010. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56
பாடம் : 145 வேதம் வழங்கப்பட்ட இரு சமுதாயத் தவர்(களான யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்)களிடையேயிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்களின் சிறப்பு.
3011. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேருடைய நற்செயலுக்குரிய பிரதிபலன் இரண்டு முறை அவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள்:
1. ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றிருந்து அவளுக்குக் கல்வி கற்றுத் தந்து, அதை அழகுறக் கற்றுத் தந்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை அழகுறச் கற்பித்து, அவளை (தானே) மணம் புரிந்தும் கொண்ட மனிதர், இவருக்கு (அதற்காக) இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
2. வேதம் வழங்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நம்பிக்கையாளர். (முந்தைய இறைத்தூதர் மீதும், முந்தைய வேதத்தின் மீதும்) நம்பிக்கை கொண்டிருந்த அவர், பிறகு நபி(ஸல்) அவர்களின் மீதும் நம்பிக்கை கொண்டாரெனில், இவருக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
3. அல்லாஹ்வின் உரிமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகிற அடிமை.
அறிவிப்பாளர் ஸாலிஹ் இப்னு ஹய்(ரஹ்) கூறினார்:
(இந்த நபிமொழியை எனக்கு அறிவித்த) ஷஅபீ (ரஹ்), 'எதையும் பகரமாகப் பெறாமலேயே இதை நான் உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். இதை விட எளிய விஷயங்களை அறிந்து கொள்ள சிலர் மதீனா வரை கூட சென்று கொண்டிருந்தார்கள்' என்று கூறினார்கள்.
Book : 56
பாடம் : 146 எதிரி நாட்டினரின் குழந்தைகளும் பிற மக்களும் (போரில் சிக்கிச்) சேத மடையும் (வாய்ப்பிருக்கும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?
3012. ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவித்தார்.
'அப்வா' என்னுமிடத்தில் அல்லது 'வத்தான்' என்னுமிடத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, 'இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்களின் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே' என்று பதிலளித்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள், '(பிரத்தியேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை' என்று கூற கேட்டிருக்கிறேன்.
Book : 56
3013. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(எதிரிகளுடைய) குழந்தைகள் தொடர்பாக ஸஅப் இப்னு ஜஸ்ஸமா(ரலி), அவர்கள், 'அக்குழந்தைகளும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் தாம்' என்று எமக்கு ஹதீஸ் அறிவித்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு தீனார்(ரஹ்) ஸுஹ்ரீ(ரஹ்) வாயிலாக, 'அக்குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களைச் சேர்ந்தவர்களே' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தெரிவித்து வந்தார்கள். ஆனால், ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டபோது, 'அந்தக் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே' என்றே கூறினார்கள்.
இதை சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) தெரிவிக்கிறார்கள்.
Book :56
பாடம் : 147 போரில் குழந்தைகளைக் கொல்வது கூடாது
3014. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
Book : 56
பாடம் : 148 போரில் பெண்களைக் கொல்வது கூடாது
3015. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.
Book : 56
பாடம் : 149 அல்லாஹ் கொடுக்கும் (நெருப்பு) வேதனையினால் எவரையும் வேதனை செய்யக் கூடாது.
3016. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
எங்களை ஒரு குழுவில் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அப்போது, 'இன்னாரையும் இன்னாரையும் நீங்கள் கண்டால் அவ்விருவரையும் நெருப்பால் எரித்து விடுங்கள்' என்று உத்தரவிட்டார்கள். பிறகு, நாங்கள் புறப்பட முனைந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்னாரையும் இன்னாரையும் எரித்து விடுங்கள்' என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நெருப்பினால் (உயிர்களை) வேதனை செய்யக் கூடாது. எனவே, அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களைக் கொன்று விடுங்கள்' என்று கூறினார்கள்.
Book : 56
3017. அலீ(ரலி) ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், 'நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அளிக்கிற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவரைக் கொன்று விடுங்கள்' என்று சொன்னதுபோல் நான் அவர்களைக் கொன்று விட்டிருப்பேன்' என்றார்கள்' என இக்ரிமா(ரஹ்) கூறினார்.
Book :56
பாடம் : 152 இணை வைப்பவன் ஒரு முஸ்லிமை எரித்துவிட்டால் (அதற்கு பதிலாக அவனை எரிக்கலாமா
3018. அனஸ்(ரலி) அறிவித்தார்.
'உக்ல்' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. எனவே, அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை' என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின நிராகரித்துவிட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்டபடி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள் 'உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் அவர்களின் கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) 'ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்துவிட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பாளர் அபூ கிலாபா(ரஹ்) கூறினார்கள்:
அவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள்; பூமியில் குழப்பதை விளைவிக்க முயன்றார்கள். (அதனால்தான், அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)
Book : 56
பாடம் : 153
3019. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே' என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56
பாடம் : 154 வீடுகளையும் பேரீச்ச மரங்களையும் எரித்தல்.
3020. ஜரீர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
Book : 56
3021. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
Book :56