பாடம் : 148 போரில் பெண்களைக் கொல்வது கூடாது
3015. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.
Book : 56
பாடம் : 149 அல்லாஹ் கொடுக்கும் (நெருப்பு) வேதனையினால் எவரையும் வேதனை செய்யக் கூடாது.
3016. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
எங்களை ஒரு குழுவில் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அப்போது, 'இன்னாரையும் இன்னாரையும் நீங்கள் கண்டால் அவ்விருவரையும் நெருப்பால் எரித்து விடுங்கள்' என்று உத்தரவிட்டார்கள். பிறகு, நாங்கள் புறப்பட முனைந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்னாரையும் இன்னாரையும் எரித்து விடுங்கள்' என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நெருப்பினால் (உயிர்களை) வேதனை செய்யக் கூடாது. எனவே, அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களைக் கொன்று விடுங்கள்' என்று கூறினார்கள்.
Book : 56
3017. அலீ(ரலி) ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், 'நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அளிக்கிற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவரைக் கொன்று விடுங்கள்' என்று சொன்னதுபோல் நான் அவர்களைக் கொன்று விட்டிருப்பேன்' என்றார்கள்' என இக்ரிமா(ரஹ்) கூறினார்.
Book :56
பாடம் : 152 இணை வைப்பவன் ஒரு முஸ்லிமை எரித்துவிட்டால் (அதற்கு பதிலாக அவனை எரிக்கலாமா
3018. அனஸ்(ரலி) அறிவித்தார்.
'உக்ல்' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. எனவே, அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை' என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின நிராகரித்துவிட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்டபடி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள் 'உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் அவர்களின் கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) 'ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்துவிட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பாளர் அபூ கிலாபா(ரஹ்) கூறினார்கள்:
அவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள்; பூமியில் குழப்பதை விளைவிக்க முயன்றார்கள். (அதனால்தான், அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)
Book : 56
பாடம் : 153
3019. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே' என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56
பாடம் : 154 வீடுகளையும் பேரீச்ச மரங்களையும் எரித்தல்.
3020. ஜரீர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
Book : 56
3021. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
Book :56
பாடம் : 155 இணைவைப்பவர் தூங்கிக் கொண்டி ருக்கும் போது அவரைக் கொல்வது.
3022. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர்களின் தலைவனான) அபூ ராஃபிஉவிடம் அவனைக் கொல்வதற்காக அனுப்பினார்கள். அவர்களில் ஒருவர் சென்று அவர்களின் கோட்டைக்குள் நுழைந்தார். அவர் கூறுகிறார்: நான் அவர்களின் வாகனப் பிராணிகளைக் கட்டி வைக்கும் (தொழுவம் போன்ற) இடத்தில் நுழைந்தேன். பிறகு அவர்கள், தங்கள் கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நான் அதைத் தேடுபவனைப் போல் (பாசாங்கு) காட்டிக் கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கழுதையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். (பிறகு திரும்பி) கோட்டைக்குள் நுழைந்தார்கள். நானும் நுழைந்தேன். கோட்டைத் கதவை இரவில் மூடிவிட்டார்கள். (அதன்) சாவிகளை (கோட்டைச் சுவரிலிருந்த) ஒரு மாடத்தில் வைத்தார்கள். அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்து விட்டேன். பிறகு அபூ ராஃபிஉவிடம் சென்று, 'அபூ ராஃபிஉவே!' என்று அழைத்தேன். அவன் எனக்கு பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட்டான். உடனே, நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். பிறகு, (அவனைக்) காப்பாற்ற வந்தவனைப் போல் மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, 'அபூ ராஃபிஉவே!' என்று என் குரலை மாற்றிக் கொண்டு அவனை அழைத்தேன். அவன், 'உனக்கென்ன நேர்ந்தது? உன் தாய்க்குக் கேடுண்டாகட்டும்' என்று சொன்னான். நான், 'உனக்கு என்ன ஆயிற்று?' என்று கேட்டேன். அவன், 'என்னிடம் யார் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எவனோ என்னைத் தாக்கிவிட்டான்' என்று கூறினான். உடனே, நான் அவனுடைய வயிற்றில் என் வாளை வைத்து அழுத்தினேன். அது (அவனுடைய வயிற்றுக்குள் சென்று) அவனுடைய எலும்பில் இடித்தது. பிறகு, நான் (எப்படி வெளியேறுவது என்ற) திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களின் ஏணி ஒன்றின் வழியாக இறங்குவதற்காக வந்தேன். அப்போது கீழே விழுந்து என் கால் சுளுக்கிக் கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று, '(அவனுடைய மரணத்தையறிந்து அவனுடைய வீட்டார்) ஒப்பாரி வைத்து ஓலமிடும் சத்தத்தைக் கேட்காதவரை நான் இங்கிருந்து போக மாட்டேன்' என்று கூறினேன். ஹிஜாஸ் மாநிலத்தவரின் (பெரும்) வியாபாரியான அபூ ராஃபிஉ (உடைய மரணத்து)க்காக அவனுடைய வீட்டார் எழுப்பிய ஒப்பாரி ஓலங்களைச் கேட்கும் வரை அந்த இடத்தைவிட்டு நான் செல்லவில்லை. பிறகு, நான் என் உள்ளத்தில் உறுத்தும் வேதனை எதுவுமின்றி எழுந்தேன். இறுதியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தோம்.
Book : 56
3023. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி) அவனுடைய வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்றுவிட்டார்கள்.
Book :56
பாடம் : 156 எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள் என்னும் நபிமொழி.
3024. உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) அறிவித்தார்.
நான் உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) ஹரூரிய்யாவுக்குப் புறப்பட்டபோது கடிதம் எழுதியிருந்தார்கள். அதை நான் படித்துக் காட்டினேன்.
அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாள்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை போர்க் களத்தில் இறங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
Book : 56
3025. பிறகு, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, 'எதிரிகளைப் (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாக்கும்படி கேளுங்கள். (வேறு வழியின்றி போர்க்களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். மேலும், 'சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது' என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். பிறகு, 'இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! (குலங்கள் அனைத்தும் சேர்ந்து திரட்டி வந்துள்ள) படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே! இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
மூஸா(ரஹ்) கூறினார்:
'நான் உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களிடம் எழுத்தராக இருந்தேன். அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களின் கடிதம் வந்தது. அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எதிரியை (போர்க்களத்தில்) சந்திக்க விரும்பாதீர்கள்' என்றார்கள் என்றிருந்தது' என சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள்.
Book :56
3026. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :56
பாடம் : 157 போர்என்பது சூழ்ச்சியாகும்.
3027. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் (போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56
3028. (தொடர்ந்து அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.)
மேலும், நபி(ஸல்) அவர்கள் போரை 'சூழ்ச்சி' என்று குறிப்பிட்டார்கள்.
Book :56
3029. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் போரை 'சூழ்ச்சி' என்று குறிப்பிட்டார்கள்.
Book :56
3030. நபி(ஸல்) கூறினார்கள்:
போர் என்பது சூழ்ச்சியாகும்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :56
பாடம் : 158 போரில் பொய் சொல்வது.
3031. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தாயராயிருப்பவர்) யார்? (என்று கேட்டுவிட்டு) ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் துன்பம் கொடுத்துவிட்டான்' என்றார்கள. முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்துவிட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தருமம் (செய்யும்படி) கேட்டார்' என்று (நபி(ஸல்) அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் சலிப்படைவீர்கள்' என்று கூறினான். அதற்கு முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)' என்று (சலிப்பாகக் கூறுவது போல்) சொன்னார்கள். இவ்வாறு, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்தவுடன் அவனைக் கொன்றுவிட்டார்கள்.
Book : 56
பாடம் : 159 அலட்சியமாக இருக்கும் நிலையில் எதிரிகளை திடீரெனத் தாக்கிக் கொல்வது.
3032. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வது யார்?' என்று கேட்டார்கள். முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், 'அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'அனுமதியளித்து விட்டேன்' என்று பதிலளித்தார்கள்.
Book : 56
பாடம் : 160 இவனால் தீங்கு நேரும் என்று அஞ்சப்படும் மனிதனிடம் எச்சரிக்கை உணர்வுடனும், தந்திரத்துடனும் நடந்து கொள்வது.
3033. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் உபை இப்னு கஅப்(ரலி) வந்து கொண்டிருக்க, இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே, அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் அவனைப் பார்க்க நுழைந்தபோது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக் கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவனாக ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டாள். உடனே, 'ஸாஃபியே! இதோ முஹம்மத்!' என்று கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்துவிட்டான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படையாகப் பேசியிருப்பான்' என்றார்கள்.
Book : 56
பாடம் : 161 போரில் ரஜ்ஸ் எனும் (ஒரு யாப்பு வகைப்) பாடலைப் பாடுதல் மற்றும் அகழ் தோண்டும் போது (பாடிக் கொண்டே) குரலை உயர்த்துதல். இது பற்றி நபி (ஸல்) அவர் களிடமிருந்து சஹ்ல் (ரலி) அவர்களும் அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.141 இது பற்றியே சலமா பின் அக்வஃ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களுடைய முன்னாள் அடிமையான யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்களும் அறிவிக் கிறார்கள்.142
3034. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அகழ்ப் போரின்போது, (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை (கொட்டுமிடத்திற்கு) எடுத்துச் செல்பவர்களாகக் கண்டேன். எந்த அளவுக்கென்றால் அந்த மண், அவர்களின் மார்பின் முடியை மறைத்து விட்டிருந்தது... மேலும், நபி(ஸல்) அவர்கள் அதிகமான முடியுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களின் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்:
இறைவா! நீ (கொடுத்த நேர்வழி) இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தருமமும் செய்திருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். எனவே, எங்களின் மீது அமைதியை இறக்கியருள். நாங்கள் போர்க்களத்தில் எதிரியைச் சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து. பகைவர்கள் எங்களின் மீது வரம்பு மீறி அநீதியிழைத்துவிட்டார்கள். அவர்கள் எங்களைச் சோதிக்க விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.
இதை நபி(ஸல்) அவர்கள் உரத்த குரலுடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.
Book : 56