பாடம் : 29 கிண்ணங்களில் அருந்துவது
5636. உம்முல் ஃபள்ல்(ரலி) கூறியாவது:
(ஹஜ்ஜின்போது) நபி(ஸல்) அவர்கள் 'அரஃபா' (துல்ஹஜ்9ஆம்) நாளில் நோன்பு நோற்றிருந்தார்களா என மக்கள் சந்தேகப்பட்டனர். எனவே, அவர்களிடம் பால் கிண்ணம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் பரும்னார்கள்.54
Book : 74
பாடம் : 30 நபி (ஸல்) அவர்களின் கிண்ணத்திலும் அவர்களின் பாத்திரங்களிலும் அருந்துவது. அபூபுர்தா ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பருகிய கிண்ணத்தில் உங்களுக்கு நான் பருகத் தரட்டுமா என்று கேட்டார்கள்.55
5637. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பனூ சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். 56
நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் முன்னே சென்று 'பனூ சாஇதா' குலத்தாரின் சமுதாயக் கூடத்தில் அமர்ந்தார்கள். பிறகு 'எங்களுக்குப் பருக (ஏதேனும்) கொடுங்கள். சஹ்லே!' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குப் புகட்டினேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்:
ஸஹ்ல்(ரலி) அந்தக் கிண்ணத்தை எங்களுக்காக வெளியே எடுக்க அதில் நாங்கள் பரும்னோம். பிறகு உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.
Book : 74
5638. ஆஸிம் அல்அஹ்வல்(ரஹ்) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களின் கிண்ணம் ஒன்றை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கண்டேன். அது பிளந்து விட்டிருந்தது. அதை அவர்கள் வெள்ளியால் ஒட்டவைத்தார்கள். அது ஒரு வகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்ட அகலமான உயர்ரகக் கிண்ணமாகும். அனஸ்(ரலி), 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இந்தக் கிண்ணத்தில் இத்தனை இத்தனை முறைகளைவிட அதிகமாகப் பருகக் கொடுத்துள்ளேன்' என்று கூறினார்கள்.57
முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) கூறினார்.
அந்தக் கிண்ணத்தில் இரும்பு வளையம் ஒன்றிருந்தது. அனஸ்(ரலி) அதனிடத்தில் தங்க வளையம் அல்லது வெள்ளி வளையம் ஒன்றை வைக்க விரும்பினார்கள். அப்போது அபூ தல்ஹா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த எதையும் நீங்கள் மாற்றாதீர்கள்' என்று (அனஸ்(ரலி) அவர்களிடம்) கூற, அனஸ்(ரலி) அதை (மாற்றாமல்)விட்டுவிட்டார்கள்.
Book :74
பாடம் : 31 வளம் (பரக்கத்) மிக்கத் தண்ணீரும் அதை அருந்துவதும்.
5639. ஜாபிர்(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது அஸ்ர் தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது மிச்சமிருந்த சிறிதுத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை. அது ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்டு நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அதில் தம் கையை நுழைத்துத் தம் விரல்களை விரித்தார்கள். பிறகு அவர்கள், 'அங்கசுத்தி (உளூ) செய்பவர்களே! தண்ணீரிடம் வாருங்கள். இந்த வளம் (பரக்கத்) அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும்' என அழைத்தார்கள். அவர்களின் விரல்களுக்கிடையே இருந்து தண்ணீர் பீறிட்டுப் பாய்வதை கண்டேன் மக்கள் (அதில்) அங்க சத்தி செய்து அதை அருந்தவும் செய்தார்கள். நான் அதை வயிறு நிரம்ப அருந்துவதில் குறை வைக்கவில்லை. ஏனெனில், அது வளம் (பரக்கத்) மிக்கது என நான் அறிந்திருந்தேன்.
அறிவிப்பாளர் சாலிம்(ரஹ்) கூறினார்:
நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்?' என்று கேட்க, 'நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்' என்று கூறினார்கள்.
இதே ஹதீஸ் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றில் ஜாபிர்(ரலி), 'நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தோம்' என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
Book : 74

பாடம் : 1 நோய் (பாவங்களுக்கு) ஒரு பரிகாரம் என்பது குறித்து வந்துள்ளவை. அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு தீமையைப் புரிகின்றவர் அதற்குரிய தண்டனை வழங்கப்பெறுவார். (4:123)2
5640. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை.
இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 75
5641. & 5642. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
Book :75
5643. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.3
இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :75
5644. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :75
5645. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :75
பாடம் : 2 கடுமையான நோய்
5646. ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 75
5647. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். 'தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (இறைத்தூதர் அவர்களே!), தங்களுக்கு இதனால் இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள்.
Book :75
பாடம் : 3 மக்களிலேயே கடுமையான (சத்திய) சோதனைக்குள்ளானோர் இறைத்தூதர்கள் ஆவர். அடுத்து (அவர்களைப் போன்ற) சிறந்தவர்கள். பிறகு (அவர்களைப் போன்ற) சிறந்தவர்கள்.5
5648. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்' என்று கூறினார்கள்.
நான், '(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத்தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை' என்று கூறினார்கள்.
Book : 75
பாடம் : 4 நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரிப்பது அவசியமாகும்.6
5649. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள்.
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.7
Book : 75
5650. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைக் (கடை பிடிக்கும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள்: (ஆண்கள்) தங்கமோதிரம், சாதாரணப்பட்டு, அலங்காரப் பட்டு தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும், பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, மென்பட்டுத் திண்டு (மீஸரா) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றம் எங்களுக்குத் தடை விதித்தார்கள். ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்லும் படியும் நோயாளியை நலம் விசாரிக்கும் படியும் சலாமைப் பரப்பும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.8
Book :75
பாடம் : 5 மயக்கமுற்றவரை நலம் விசாரிப்பது9
5651. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை உடல் நலம் விசாரிக்க நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்தே என்னிடம் வந்தார்கள். அப்போது நான் மயக்கம் அடைந்திருக்கக் கண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அங்கே (என் முன்னே) நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தில் விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. இறுதியில் வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான இறைவசனம் அருளப்பட்டது.10
Book : 75
பாடம் : 6 வ-ப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்குரிய சிறப்பு.
5652. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்
இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
...அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்
நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.11
Book : 75
பாடம் : 7 கண்பார்வை இழந்தவருக்குரிய சிறப்பு
5653. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: நான் என் அடியானை, அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருட்களை(ப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.
('அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருள்கள்' என்பது) அவரின் இரண்டு கண்களைக் குறிக்கும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 75
பாடம் : 8 பெண்கள், (நோயுற்ற) ஆண்களை நலம் விசாரிப்பது. உம்முத் தர்தா (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சேர்ந்த அன்சாரி களில் ஒருவரை (அவர் நோய்வாய்ப்பட் டிருந்த போது) நலம் விசாரிக்கச் சென்றார்கள்.
5654. ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிலால்(ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, 'என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே எப்படியிருக்கிறீர்கள்?' என்று (நலம்) விசாரிப்பேன். அபூ பக்ர்(ரலி) தமக்குக் காய்ச்சல் காணும்போது (பின்வரும் கவிதையைக்) கூறுவார்கள்.
காலை
வாழ்த்துக் கூறப்பெற்ற
நிலையில்
ஒவ்வொரு மனிதனும்
தம் குடும்பத்தாரோடு
காலைப் பொழுதை அடைகிறான்..
(ஆனால்,)
மரணம் - அவன் செருப்பு வாரைவிட
மிக அருகில் இருக்கிறது (என்பது
அவனுக்குத் தெரிவதில்லை).
பிலால்(ரலி) காய்ச்சல்விட்டதும்,
'இத்கிர்' (நறுமணப்) புல்லும்
'ஜலீல்' கூரைப் புல்லும்
என்னைச் சூழ்ந்திருக்க...
(மக்காவின்) பள்ளத்தாக்கில்
ஓர் இராப் பொழுதையேனும்
நான் கழிப்பேனா...?
'மிஜன்னா' எனும்
(மக்காவின் இனிப்புச் சுனை) நீரை
ஒரு நாள் ஒரு பொழுதாவது
நான் பருகுவேனா...?
(மக்கா நகரின்)
ஷாமா, தஃபீல் மலைகள்
(இனி எப்போதேனும்)
எனக்குத் தென்படுமா...?
என்று (கவிதை) கூறுவார்கள்.
உடனே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்கள் இருவருடைய நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல், அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இறைவா! மேலும் இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! அதன் (அளவைகளான) 'ஸாஉ', 'முத்(து)' ஆகியவற்றில் (-எங்கள் உணவில்) எங்களுக்கு நீ சுபிட்சத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை இடம் பெயரச் செய்து அதை 'ஜுஹ்ஃபா' எனுமிடத்தில் (குடி) அமர்த்திவிடுவாயாக' என்று பிரார்த்தனை செய்தார்கள்.12
Book : 75
பாடம் : 9 குழந்தைகளை நலம் விசாரித்தல்
5655. உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களின் புதல்வியார் (ஸைனப்(ரலி) அவர்கள் தங்களின் மகள் (அல்லது மகன்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், எனவே அங்கு வந்து சேர வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் நானும் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களும் இருந்தோம். உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இருந்ததாகவே நாங்கள் கருதுகிறோம். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் புதல்விக்கு சலாம் (முகமன்) சொல்லி அனுப்பியதோடு, 'அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, நன்மையை எதிர்பார்ப்பாயாக் பொறுமையைக் கைக்கொள்வாயாக' எனக் கூறியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாக வரவேண்டுமென மீண்டும்) கூறியனுப்பினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம்.
(தம் புதல்வியின் வீட்டுக்குச் சென்ற) நபி(ஸல்) அவர்களின் மடியில் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த குழந்தை கிடத்தப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்களின் இரண்டு கண்களும் நீர் சொரிந்தன. உடனே அவர்களிடம் ஸஅத் இப்னு உபாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்களே!)' என்று கேட்டார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்' என்று கூறினார்கள்.13
Book : 75