5870. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) குமிழும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது.
இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :77
பாடம் : 49 இரும்பு மோதிரம்
5871. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-)வே வந்துள்ளேன்' என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுக் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள்.
அவர் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருப்பதைக் கண்ட ஒருவர் '(இறைத்தூதர் அவர்களே!) இவர் தங்களுக்குத் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துத் தாருங்கள் என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இவருக்கு மஹ்ராக - மணக் கொடையாகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா?' என்றார். நபி(ஸல்) அவர்கள், '(ஏதேனும் கிடைக்குமா என்று) பார்' என்றார்கள். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பிவந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'போய்த் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே' என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, 'இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் இரும்பு மோதிரம் கூடக் கிடைக்கவில்லை' என்றார்.
அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டு கூட இருக்கவில்லை. அந்த மனிதர், 'என்னுடைய கீழங்கியை அவளுக்கு நான் மணக் கொடையாக வழங்குகிறேன்' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய கீழங்கியா? அதை இவள் அணிந்தால் அதிலிருந்து உம் மீது ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்துகொண்டால் அதிலிருந்து இவள் மீது ஏதும் இருக்காது' என்றார்கள். உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்துகொண்டார். பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரச்சொல்ல அவரும் அழைத்து வரப்பட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது?' என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்து வைத்தேன்' என்றார்கள்.83
Book : 77
பாடம் : 50 மோதிரத்தில் இலச்சினை (சின்னம்) பதித்தல்
5872. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அரபியரல்லாதவர்களான (ரோம் நாட்டைச் சேர்ந்த) 'ஒரு குழுவினருக்கு' அல்லது 'மக்களில் சிலருக்கு'க் கடிதம் எழுத விரும்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், 'அரபியரல்லாதோர் முத்திரையுள்ள கடிதத்தையோ ஏற்றுக் கொள்வார்கள்' என்று சொல்லப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள். இப்போதும் நான் 'நபி(ஸல்) அவர்களின் விரலில்' அல்லது 'அவர்களின் கையில்' அந்த மோதிரம் மின்னியதைப் பார்ப்பது போன்றுள்ளது.
Book : 77
5873. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர்(ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர்(ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான்(ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது 'அரீஸ்' எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது.84
Book :77
பாடம் : 51 சுண்டு விரலில் மோதிரம் அணிதல்
5874. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, 'நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் ('முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். எனவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்' என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கிறேன்.85
Book : 77
பாடம் : 52 முத்திரை பதிப்பதற்காக, அல்லது வேதக் காரர்கள் முதலானோருக்கு மடல் வரைவதற் காக மோதிரம் தயாரித்(து அணி)தல்.86
5875. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது அவர்களிடம், 'தங்கள் கடிதம் முத்திரையிடப்படாமலிருந்தால் அதை ரோமர்கள் ஒருபோதும் படிக்கமாட்டார்கள்' என்று கூறப்பட்டது.
எனவே, நபி(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. நான் அவர்களின் கையில் (பிரகாசித்த) அதன் வெண்மையை (இப்போதும்) பார்ப்பது போன்று உள்ளது.87
Book : 77
பாடம் : 53 மோதிரக் குமிழை உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்துகொள்வது.
5876. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தம் உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்தார்கள். மக்களும் (அவ்வாறே) தங்க மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'நான் அதைச் செய்திருந்தேன். ஆனால் அதை நான் இனி அணியமாட்டேன்' என்று கூறிவிட்டு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மக்களும் எறிந்துவிட்டனர்.88
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஜுவைரிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) அவர்கள் (நபி(ஸல்) அவர்கள் மோதிரத்தைத்) தம் வலக் கையில் அணிந்துகொண்டார்கள்' என்று சொன்னதாகவே எண்ணுகிறேன்.
Book : 77
பாடம் : 54 'எனது மோதிரத்தின் இலச்சினை போன்று வேறு யாரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்'என நபி (ஸல்) அவர்கள் கூறியது.
5877. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள். மேலும், 'நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என இலச்சினை பொறித்துள்ளேன். எனவே, வேறு யாரும் அதைப் போன்று இலச்சினை பொறிக்க வேண்டாம்' என்று கூறினார்கள்.89
Book : 77
பாடம் : 55 மோதிரத்தில் மூன்று வரிகளில் இலச்சினை பொறிக்கலாமா?
5878. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) அவர்கள் கலீஃபா (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அவர்கள் (ஸகாத்தின் அளவை விளக்கி) எனக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போது (அதில் காணப்பட்ட) மோதிர (முத்திரையின்) இலச்சினை மூன்று வரிகள் கொண்டதாயிருந்தது. 'முஹம்மது' என்பது ஒரு வரியிலும், 'ரசூல்' என்பது ஒரு வரியிலும், 'அல்லாஹ்' என்பது ஒரு வரியிலும் இருந்தது.
Book : 77
5879. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் மோதிரம் (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கரத்திலேயே இருந்தது. அவர்களுக்குப் பின் அபூ பக்ர்(ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் அபூ பக்ரின்) கரத்தில் இருந்தது. அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின் உமர்(ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் உமரின்) கரத்தில் இருந்தது. உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வந்தபோது அவர்கள் (ஒருமுறை) அரீஸ் எனும் கிணற்றின் (விளிம்பின்) மீது அமர்ந்திருந்தபோது (ஏதோ சிந்தனையில் தம்மையறியாமல்) மோதிரத்தைக் கழற்றுவதும் அணிவதுமாக இருந்தார்கள். அப்போது அது (தவறி கிணற்றுக்குள்) விழுந்துவிட்டது. (அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக) உஸ்மான்(ரலி) அவர்களுடன் நாங்கள் மூன்று நாள்கள் (அங்கு) போய்வந்து கொண்டிருந்தோம். பிறகு, கிணற்று நீரை இரைத்து(த் தூர்வாரி)ப் பார்த்தார்கள். அப்போதும் அது எங்களுக்குக் கிடைக்கவில்லை.90
Book :77
பாடம் : 56 பெண்கள் மோதிரம் அணிவது ஆயிஷா (ரலி) அவர்கள் தங்க மோதிரங்களை அணிந்திருந்தார்கள்.
5880. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் (நோன்புப்) பெருநாளி(ன் தொழுகையி)ல் கலந்து கொண்டேன். அவர்கள் (அன்று) உரையாற்றுவதற்கு முன்பாகத் தொழுதார்கள்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
'பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் (தம்) மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால்(ரலி) அவர்களின் துணியில் போடலானார்கள்' என்று இப்னு வஹ்ப்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.91
Book : 77
பாடம் : 57 பெண்கள் கழுத்தணிகளையும் நறுமண மாலைகளையும் அணிதல். இது (சந்தன மாலை போன்ற) நறுமண மாலைகளைக் குறிக்கும்.
5881. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பெருநாளில் (தொழுகைத் திடலுக்குப்) புறப்பட்டுவந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் (தொழுகை எதுவும்) தொழவில்லை. பிறகு பெண்களிடம் வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காதணிகளையும் நறுமண மாலைகளையும் (கழற்றி) தர்மமாகத் தந்தார்கள்.
Book : 77
பாடம் : 58 கழுத்து மாலைகளை இரவல் வாங்குதல்
5882. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(என்னிடமிருந்து) அஸ்மா(ரலி) அவர்களின் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தொலைந்து போய்விட்டது. நபி(ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் சென்றபோது) தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் அங்கசுத்தி (உளூ) செய்யத் தண்ணீர் இல்லை. (அந்த இடத்தில்) அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவுமில்லை. அங்கசுத்தி (உளூ) செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். இந்த விஷயத்தை அவர்கள் (திரும்பி வந்து) நபி(ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். அப்போது அல்லாஹ் 'தயம்மும்' (செய்து கொள்ள அனுமதி வழங்கும்) வசனத்தை அருளினான்.
இப்னு நுமைர்(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஓர் அறிவிப்பில், 'அந்தக் கழுத்து மாலையை நான் (என் சகோதரி) அஸ்மாவிடமிருந்து இரவல் வாங்கியிருந்தேன்' என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார் என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.92
Book : 77
பாடம் : 59 பெண்கள் கம்மல் அணிவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி பெண்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் காதுகளையும் கழுத்துகளையும் நோக்கி (அவற்றிலுள்ள நகைகளைக் கழற்றித் தர கைகளைக் கொண்டு) சென்றதை நான் கண்டேன்.93
5883. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(நோன்புப்) பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை. பிறகு பிலால்(ரலி) அவர்களுடன் பெண்களிடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே, ஒரு பெண் தன்னுடைய கம்மலை(க் கழற்றி)ப் போடலானார்.
Book : 77
பாடம் : 60 குழந்தைகளுக்கான நறுமண மாலைகள்
5884. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் ('பனூ கைனுகா' கடைவீதியில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா(ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) 'பொடிப் பையன் எங்கே?' என்று மும்முறை கேட்டார்கள். பிறகு 'அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களின் புதல்வர் ஹஸன்(ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தபடி நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நபி(ஸல்) அவர்கள் இப்படித் தம் கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹஸன்(ரலி) அவர்களும் இவ்வாறு தம் கையை விரித்த படி (நபி(ஸல்) அவர்களை அணைத்திட) அவர்களை நோக்கி வந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஹஸன்(ரலி) அவர்களை அணைத்துக்கொண்டு, 'இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக!' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படிப் பிரார்த்தனை செய்த பிறகு அலீயின் புதல்வர் ஹஸன்(ரலி) அவர்களை விட வேறெவரும் எனக்கு அதிகப் பிரியமானவராக இருக்கவில்லை.94
Book : 77
பாடம் : 61 பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களும் ஆண்களைப் போல ஒப்பனை செய்துகொள்ளும் பெண்களும்.
5885. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 77
பாடம் : 62 பெண்களைப் போன்று நடந்துகொள் பவர்(களான அலி)களை வீட்டிலிருந்து வெளியேற்றுதல்.
5886. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், 'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்' என்றார்கள். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர்(ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.95
Book : 77
5887. (நபியவர்களுடைய துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
என் வீட்டில் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் இருந்தபோது நபி(ஸல்) அவர்களும் அங்கு இருந்தார்கள். அப்போது அந்த அலி, என் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம் 'அப்துல்லாஹ்வே! நாளை உங்களுக்கு தாயிஃப் நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றியளித்தால் ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன். (அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு (சதைமடிப்புகளுட)னும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள், '(அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வரவேண்டாம்' என்றார்கள்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
அவளுடைய வயிற்றுச் சதையின் நான்கு மடிப்புகளின் காரணத்தால் 'முன்பக்கம் நான்கு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்' என்று அந்த அலி சொன்னார். அந்த நான்கு மடிப்புகளின் ஓரங்கள் இரண்டு புறங்களிலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக காட்சி தருவதால் 'பின்பக்கம் எட்டு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்' என்று கூறினார்.96
'தரஃப்' (ஓரம்) எனும் சொல் ஆண்பாலாயினும், அது வெளிப்படையாகக் குறிப்பிடாததால் 'அர்பஉ' (நான்கு), 'ஸமான்' (எட்டு) ஆகிய எண்கள் (இலக்கண விதிக்கு மாறாக) ஆண்பாலாகவே (மூலத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளன.
Book :77
பாடம் : 63 மீசையைக் கத்தரிப்பது இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது சருமத்தின் வெண்மை தெரிகின்ற அளவிற்குத் தமது மீசையை ஒட்ட நறுக்குவது வழக்கம். மீசைக்கும் தாடிக்கும் இடையிலுள்ள (குறுந்தாடி) முடிகளை அகற்றிவிடுவார்கள்.
5888. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும்.97
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 77
5889. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :77