6931. அபூ ஸலமா(ரஹ்) மற்றும் அதாஉ இப்னு யஸார்(ரஹ்) ஆகியோர் அறிவித்தார்கள்:
நாங்கள் இருவரும் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களிடம் சென்று 'ஹரூரிய்யாக் கூட்டத்தார் (காரிஜிய்யாக்கள்) பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஏதேனும் செவியேற்றுள்ளீர்களா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் ஹரூரிய்யாக்கள் என்றால் யாரென்று எனக்குத் தெரியாது. (ஆனால்,) நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டுள்ளேன் என்றார்கள்:
இந்தச் சமுதாயத்திற்கிடையே ஒரு கூட்டத்தார் கிளம்புவர். -(சமுதாயத்திற்கிடையே என்று கூறினார்களே தவிர,) இந்தச் சமுதாயத்திலிருந்து என்று கூறவில்லை- அவர்களின் தொழுகையுடன் உங்களின் தொழுகையை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையை அற்பமானதாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு கலை கட்டியிருக்கும்.) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் 'தொண்டையை' அல்லது 'தொண்டைக் குழியை'த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் தைக்கின்ற) அம்பு (உடலின்) மறுபுறம் வெளிப்பாட்டு) சென்றுவிடுவதைப் போன்று இந்த மார்க்கத்தைவிட்டு அவர்கள் வெளியேறிவிடுவார்கள். அம்பெய்தவர் அந்த அம்பை; அதன் முனையை; அதன் (முனையைப் பொருத்தப்பயன்படும்) நாணைப் பார்ப்பார். அவர் (இவ்வாறு) சந்தேகப்பட்டு நாண் பொருத்தப்படும் இடம் வரை, அவற்றில் இரத்தம் ஏதேனும் பட்டுள்ளதா? என்று பார்ப்பார். (ஆனால், எந்த அடையாளமும் இராது.)18
Book :88
6932. முஹம்மத் இப்னு ஸைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(என் பாட்டனார்) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்கள் ('காரிஜிய்யாக்கள்') குறித்துக் கூறியபோது, '(வில்லில் இருந்து புறப்பட்ட) அம்பு வேட்டைப் பிராணியின் உடலில் இருந்து வெளியேறுவதைப் போன்று இவர்கள் இஸ்லாத்தைவிட்டும் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் செல்வார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்' என்று கூறினார்கள்.
Book :88
பாடம் : 7 (இதயங்களிடையே) நெருக்கத்தை ஏற்படுத்தவும் தம்மைவிட்டு மக்கள் விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் காரிஜிய்யாக்களைக்கூட ஒருவர் கொல்லாமல் விட்டுவிடுவது.
6933. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
(அலீ(ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து அனுப்பியிருந்த தங்கக் கட்டியை) நபி(ஸல்) அவர்கள் (மக்களில் சிலருக்குப்) பங்கிட்டுக் கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த 'அப்துல்லாஹ் இப்னு தில் குவைஸிரா' என்பவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுதான். (இறைத்தூதராகிய) நானே நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் வேறு யார் தாம் நீதியுடன் நடந்துகொள்ளப் போகிறார்கள்?' என்று கேட்டார்கள். (அப்போது அங்கிருந்த) உமர்(ரலி) அவர்கள், 'என்னை விடுங்கள்; இவர் கழுத்தை நான் வெட்டிவிடுகிறேன்' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவரைவிட்விடுங்கள். இவருக்குத் தோழர்கள் சிலர் உள்ளனர். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும் அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களின் தொழுகையையும் உங்களின் நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கின்றதா? என்று) அம்பின் இறகு கூர்ந்து பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் முனை பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக்கிடைக்காது. பிறகு அம்பின் நாண் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. அம்பானது, சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்திக் கொண்டிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு (கறுப்பு நிற) மனிதராவார். அவரின் 'இரண்டு கரங்களில்' அல்லது 'இரண்டு மார்பகங்களில்' ஒன்று 'பெண்ணின் கொங்கை போன்று' அல்லது 'துடிக்கும் இறைச்சித் துண்டு போன்று' இருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்' என்றார்கள்.
நான் இந்த நபிமொழியை நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாரை (நஹ்ரான் எனுமிடத்தில்) அலீ(ரலி) அவர்கள் கொன்றார்கள். அப்போது நானும் அலீ(ரலி) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதன் அலீ(ரலி) அவர்கள் முன்னிலையில்) கொண்டு வரப்பட்டான். நபி(ஸல்) அவர்கள் அறிவித்த வர்ணனையின்படியே அவன் இருந்தான். அவன் விஷயத்தில் தான் 9:58 வது இறைவசனம் அருளப்பெற்றது என்றும் உறுதி கூறுகிறேன்.19
Book : 88
6934. யுசைர் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களிடம், 'காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி(ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
Book :88
பாடம் : 8 ஒரே வாதத்தை முன்வைத்து இரு குழுவினர் தம்மிடையே போரிட்டுக்கொள்ளாத வரை (உலக) முடிவுநாள் வராது எனும் நபிமொழி
6935. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரே வாதத்தை முன்வைக்கும் இரண்டு குழுவினர் தம்மிடையே போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவுநாள் வராது.20
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.21
Book : 88
பாடம் : 9 (தமது செயலுக்குத்) தகுந்த விளக்கம் அளிப்போர் குறித்து வந்துள்ளவை.22
6936. உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) அவர்கள் 'அல்ஃபுர்கான்' எனும் (குர்ஆன்) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது, எனக்கு இறைத்தூதர்(ஸல்) ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக் கொண்டிருந்தார். உடனே தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும் வரை காத்திருந்தேன். (அவர் தொழுது முடித்த) பிறகு 'அவரின் மேல் துண்டை' அல்லது 'என்னுடைய மேல் துண்டைக்' கழுத்தில் போட்டுப் பிடித்து, 'இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர் 'இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் எனக்கு ஓதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். 'நீர் பொய் சொல்லிவிட்டீர். அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் ஓதிய இந்த அத்தியாயத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வேறு விதமாக) எனக்கு ஓதிக் காட்டினார்கள்' என்றேன்.
பிறகு அவரை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இழுத்துக் கொண்டு சென்று 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எனக்கு ஓதிக்காட்டாத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். தாங்கள் எனக்கு 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை (வேறு விதமாக)ச் சொல்லிக் கொடுத்தீர்கள்' என்று கூறினேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உமரே! இவரை விடுங்கள்' என்று கூறிவிட்டு, 'ஹிஷாமே! நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியதைப் போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இப்படித்தான் (இந்த ) அருளப்பெற்றது' என்று கூறினார்கள். பிறகு (என்னை நோக்கி) 'உமரே! நீங்கள் ஓதுங்கள்' என்றார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் 'இப்படித்தான் (இந்த ) அருளப்பெற்றது. நிச்சயமாக இந்தக் குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது. எனவே, உங்களுக்கு அதில் எது சுலபமானதோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.23
Book : 88
6937. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
'யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு' எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் 'எங்களில் யார் தாம் தமக்குத்தாமே அநீதியிழைக்காதவர்?' என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கிற அர்த்தமில்லை. லுக்மான் அவர்கள் தம் புதல்வருக்குக் கூறியதைப் போன்றே இங்கு பொருள்கொள்ளவேண்டும். 'என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! நிச்சயமாக! இணை கற்பிப்பதே மிகப்பெரும் அநீதியாகும்' என்று கூறினார். (திருக்குர்ஆன் 31:13)24
Book :88
6938. இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னுடைய இல்லத்தில் தொழுமிடம்) அமைத்துக் கொடுப்பதற்காக) என்னிடம் (நண்)பகலில் வந்தார்கள். (அப்பகுதி மக்களில் கணிசமானோர் அங்கு குழுமிவிட்டனர்.) அப்போது ஒருவர், 'மாலிக் இப்னு துக்ஷுன் எங்கே? (அவர் மட்டும் நபியவர்களைச் சந்திக்க வரவில்லையே!)' என்று கேட்டதற்கு எங்களில் ஒருவர், 'மாலிக் இப்னு துக்ஷுன் ஒரு முனாஃபிக் (நயவஞ்சகர்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (எனவேதான் அவர் நபியைக் காண இங்கு வரவில்லை)' என்று கூறினார். அதைக் கேட்ட நபிஸல்) அவர்கள், 'அவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறுவதை நீங்கள் செவியேற்கவில்லையா?' என்று கேட்டார்கள். அந்த மனிதர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'மறுமை நாளில் எந்த அடியார் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' எனும் (ஏகத்துவ) வாக்கியத்துடன் செல்கிறவரின் மீது இறைவன் நரகத்தை தடை செய்யாதிருப்பதில்லை' என்றார்கள்.25
Book :88
6939. ஸஅத் இப்னு உபைதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(உஸ்மான்(ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான) அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் (அலீ(ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான) ஹிப்பான் இப்னு அதிய்யா அவர்களிடம் சர்ச்சையிட்டுக் கொண்டு, 'உங்கள் தோழர் அலீ அவர்களுக்கு இரத்தம் சிந்தச் செய்யும் துணிவைக் கொடுத்து எது? என்று நான் உறுதிபட அறிவேன்' என்று கூறினார்கள். ஹிப்பான் அவர்கள், 'தந்தையற்றுப் போவாய்! (அலீ அவர்களுக்குத் துணிவைத் தந்த) அந்த விஷயம் எது?' என்று கேட்டார்கள். அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள், 'அது ஒரு சம்பவம். அதனை அலீ(ரலி) அவர்களே கூற கேட்டுள்ளேன்' என்றார்கள். ஹிப்பான் அவர்கள், 'என்ன சம்பவம் அது?' என்று கேட்க, (பின்வருமாறு) அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள் கூறினார்கள்:
(அலீ(ரலி) கூறினார்:)
குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களையும் அபூ மர்ஸத்(ரலி) அவர்களையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் 'ரவ்ளத்து ஹாஜ்' எனும் இடம் வரை செல்லுங்கள். -இவ்வாறு 'ஹாஜ்' என்றே அபூ அவானா(ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸலமா கூறுகிறார்கள். (மற்ற அறிவிப்புகளில் 'ரவ்ளத்து காக்' என வந்துள்ளது) அங்கு ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (மக்காவிலிருக்கும்) இணை வைப்பாளர்களுக்கு எழுதிய (நம்முடைய இரகசிய திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்றிருக்கும். அதை (அவளிடமிருந்து கைப்பற்றி) என்னிடம் கொண்டு வாருங்கள்' என்று கூறி அனுப்பினார்கள். உடனே நாங்கள் எங்கள் குதிரைகளின் மீதேறிச் சென்றோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட அந்த இடத்தில் தன்னுடைய ஒட்டகம் ஒன்றின் மீது அவள் செல்வதைக் கண்டோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொள்வதற்காக) மக்காவாசிகளை நோக்கிப் புறப்படவிருப்பது தொடர்பாக ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (அக்கடிதத்தில்) மக்காவாசிகளுக்கு எழுதியிருந்தார். நாங்கள் (அவளிடம்), 'உன்னிடம் உள்ள அந்தக் கடிதம் எங்கே?' என்று கேட்டோம். அவள், 'என்னிடம் கடிதம் எதுவுமில்லை' என்று சொன்னாள். உடனே நாங்கள் அவள் அமர்ந்திருந்த அந்த ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அவளிருந்த சிவிகைக்குள் (கடிதத்தைத்) தேடினோம். (அதில்) எதுவும் கிடைக்கவில்லை. அப்போது என் சகாக்கள் இருவரும் 'இவளிடம் எந்தக் கடிதத்தையும் நம்மால் காணமுடியவில்லையே' என்றார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று திட்டவட்டமாக நாம் அறிந்துள்ளோம்' என்று கூறிவிட்டு, சத்தியம் செய்வதற்கு தகுதிபெற்ற (இறை)வன் மீது ஆணையிட்டு, 'ஒன்று நீயாக அதை வெளியே எடுக்க வேண்டும். அல்லது நான் உன்னை (சோதனையிடுவதற்காக உன்னுடைய ஆடையைக்) கழற்ற வேண்டியிருக்கும்' என்று சொன்னேன். இதைக் கேட்ட அவள் தன்னுடைய இடுப்பை நோக்கி(த் தன்னுடைய கையை)க் கொண்டு சென்றாள். அவள் (இடுப்பில்) ஒரு துணி கட்டியிருந்தாள். (அதற்குள்ளேயிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள். அந்தக் கடிதத்தை நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தோம். (பிறகு அதை நான் நபி(ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.)
அப்போது உமர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்' என்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஹாத்திபே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? (நான் இறைநம்பிக்கையைக் கைவிட்டுவிடவில்லை.) மாறாக, மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் ஏதேனும் செய்து அதற்குப் பரிகாரமாக அவர்கள் (அங்குள்ள பலவீனமான) என் உறவினர்களையும் என் செல்வங்களையும் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன்; தங்களின் (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர்களின் குடும்பத்தாரையும் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் அங்கு உள்ளனர்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இவர் உண்மை பேசினார். இவர் குறித்து நல்லதையே சொல்லுங்கள்' என்று கூறினார்கள். உமர்(ரலி) அவர்கள் மீண்டும் 'இறைத்தூதர் அவர்களே! இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர் இல்லையா? உங்களுக்கு என்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களிடம் 'நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். சொர்க்கத்தை உங்களுக்கு நான் உறுதியாக்கிவிட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம்' என்றார்கள்.
இதைக்கேட்ட உமர்(ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரில் மூழ்கின. அப்போது உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்றார்கள்.26
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: (அந்த இடத்தின் பெயர்) 'ரவ்ளத்து காக்' என்பதே சரியான தகவலாகும்.
ஆயினும், 'ரவ்ளத்து ஹாஜ்' என்றே அபூ அவானா கூறுகிறார். இது திரிபாகும். இது ஓர் இடத்தின் பெயராகும். ஹுஷைம் இப்னு பஷீர்(ரஹ்) அவர்கள் 'காக்' என்றே குறிப்பிடுகிறார்கள்.
Book :88

6940. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) தொழுகையில், 'இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ, ஸலமா இப்னு ஹிஷாம், வலீத் இப்னு வலீத் ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும் பகை கொண்ட) முளர் குலத்தார் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! யூசுஃப் (அலை) அவர்கள் காலத்தில் நீ அனுப்பிய (பஞ்சமான) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளை அனுப்புவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.2
Book :89
பாடம் : 1 இறைமறுப்பைவிட அடி, உயிரிழப்பு, அவமானம் ஆகியவற்றை ஒருவர் ஏற்பது.3
6941. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று இறைமறுப்பிற்குத் திரும்புவதை அவர் வெறுப்பது.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.4
Book : 89
6942. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(கூஃபா பள்ளிவாசலொன்றில் கூடியிருந்த மக்களிடம்) ஸயீத் இப்னு ஸைத்(ரலி) கூறினார்: நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக உமர் அவர்கள் என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டுள்ளேன். உஸ்மான்(ரலி) அவர்களுக்கு நீங்கள் செய்த (துரோகத்)தைக் கண்டு (மனம் தாளாமல்) 'உஹுத்' மலை தகர்ந்து போனால் அதுவும் சரியானதே!5
Book :89
6943. கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்' என்றார்கள்.6
Book :89
பாடம் : 2 பொருளாதார காரணங்களுக்காகவோ மற்ற காரணங்களுக்காகவோ ஒருவர் தம் சொத்துகளை விரும்பியோ விரும்பாமலோ விற்க வேண்டிய கட்டாயம் நேர்வது.
6944. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, 'யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்' என்று கூறினார்கள். உடனே நாங்கள் அவர்களுடன் புறப்பட்டுச் சென்று 'பைத்துல் மித்ராஸ்' எனுமிடத்தை அடைந்தோம். அங்கு நபி(ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, 'யூதர்களே! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (இவ்வுலகிலும் மறு உலகிலும்) நீங்கள் சாந்தி அடைவீர்கள்' என்று அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்கள். அதைக் கேட்ட யூதர்கள், 'அபுல் காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்' என்று கூறினார்கள். 'இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு மீண்டும் (இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்து) அவ்வாறே கூறினார்கள். அப்போதும் யூதர்கள், 'அபுல் காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்' என்று கூறினர். பிறகு மூன்றாம் முறையும் (அவ்வாறே) நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களை (இந்த ஊரிலிருந்து) நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் யார் தம் (அசையாச்) சொத்துக்கு பதிலாக ஏதேனும் (விலையைப்) பெற்றால் அச்சொத்தை அவர் விற்றுவிடட்டும். இல்லையேல், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்' என்றார்கள்.7
Book : 89
பாடம் : 3 நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டவரின் திருமணம் செல்லாது.8 அல்லாஹ் கூறுகின்றான்: தங்களது கற்பைப் பேணிக் காக்க விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வாழ்க்கை வசதிகளை நாடி, விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்கா தீர்கள்; அப்படி எவரேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (24:33)
6945. கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரிய்யா(ரலி) அறிவித்தார்.
கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்துவைத்த) அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.9
Book : 89
6946. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான், 'இறைத்தூதர் அவர்களே! பெண்களிடம் அவர்களின் திருமணம் தொடர்பாக யோசனை கேட்கப்படவேண்டுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்றார்கள். நான், 'அவ்வாறாயின் கன்னிப் பெண்ணிடம் யோசனை கேட்கப்படும்போது அவள் வெட்கப்பட்டுக்கொண்டு மெளனமாக இருப்பாளே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவளுடைய மெளனமே சம்மதமாகும்' என்றார்கள். 10
Book :89
பாடம் : 4 நிர்ப்பந்தத்தின் பேரில் ஒருவர் ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்யவோ அல்லது விற்கவோ செய்தால் அது செல்லாது. (இதுவே அனைவரது கருத்தாகும். ஆனால்,) சிலர் இவ்வாறு கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறுகிறார்கள்: (இவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டவரிடமிருந்து) வாங்கியவர் தாம் வாங்கிய அந்த அடிமை விஷயத்தில் ஏதேனும் நேர்த்திக்கடன் செய்வதாக எண்ணினாலோ, அவ்வாறே அந்த அடிமைக்குப் பின்விடுதலை'அளித்தாலோ அவரது எண்ணப்படி அது செல்லும்.11
6947. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் ஒருவர் (தமக்குச் சொந்தமான) ஓர் அடிமையை தம் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்தார். அப்போது அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறெந்தச் செல்வமும் இருக்கவில்லை. இந்த விஷயம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்கள், 'இந்த அடிமையை என்னிடமிருந்து விலைக்கு வாங்குபவர் யார்?' என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் இப்னு நஹ்ஹாம்(ரலி) அவர்கள் எண்ணூறு வெள்ளிக் காசுகள் (திர்ஹம்) கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். அந்த கிப்தீ(எம்ப்து) அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே இறந்துவிட்டான்.12
Book : 89
பாடம் : 5 (விதவைப் பெண்களை பலவந்தமாக மணப்பதும்) நிர்ப்பந்தங்களில் அடங்கும். (நிர்ப்பந்தம் என்பதைக் குறிக்க) இக்ராஹ், குர்ஹ், கர்ஹ் ஆகிய சொற்கள் (பயன்படுத்தப் படுகின்றன. இவை) அனைத்துக்கும் பொருள் ஒன்றே.
6948. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளே அவரின் மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களே இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணந்துகொள்ளவும் செய்வார்கள்; நினைத்தால் (வேறெவருக்காது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். நினைத்தால் மணமுடித்தக் கொடுக்க(ாமல் அப்படியேவிட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க)மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரைவிட (இறந்துவிட்ட கணவனின் வாரிசுகளான) அவர்கள் தாம் அவளின் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள்.
அப்போதுதான் இது தொடர்பாக 'இறைநம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று' எனும் (திருக்குர்ஆன் 04:19 வது) இறைவசனம் அருளப்பெற்றது.13
Book : 89
பாடம் : 6 ஒரு பெண் விபசாரம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டால் (அதாவது கற்பழிக்கப்பட்டால்) அவளுக்குத் தண்டனை கிடையாது. ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: எவரேனும் அந்தப் பெண்களை (விபசாரத்திற்காக) நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையு டையவனாகவும் இருக்கின்றான். (24:33)
6949. ஸஃபிய்யா பின்த் அபீ உபைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(என் கணவருடைய தந்தை கலீஃபா உமர்(ரலி) அவர்களின் காலத்தில்) அரசாங்க அடிமைகளில் ஒருவன் (ஆட்சியாளர் அதிகாரத்திற்குட்பட்ட) குமுஸ் நிதியிலுள்ள ஓர் அடிமைப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டான். எனவே, உமர்(ரலி) அவர்கள் அவனுக்கு (ஐம்பது) கசையடி கொடுத்து (ஆறு மாத காலத்திற்கு) அவனை நாடு கடத்தவும் செய்தார்கள். ஆனால், அந்த அடிமையினால் பலவந்தப்படுத்தப்பட்டாள் என்பதால் அந்த அடிமைப் பெண்ணுக்கு அவர்கள் கசையடி தண்டனை வழங்கவில்லை.
அடிமையல்லாத ஒருவன் கற்பழித்துவிட்ட கன்னியான அடிமைப் பெண் குறித்து ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: கன்னி கழியாதிருந்த அந்த அடிமைப் பெண்ணுக்குரிய விலையை நீதிபதி நிர்ணயி(த்து கன்னி கழிந்ததால் ஏற்பட்ட இழப்பீட்டைக் கற்பழித்தவனிடமிருந்து வசூலி)ப்பார். மேலும், கற்பழித்த) அவனுக்குக் கசையடி தண்டனை வழங்கப்படும். ஆனால், கன்னி கழிந்த அடிமைப் பெண்ணுக்கு இழப்பீடு ஏதும் வழங்க வேண்டுமன்று அறிஞர்களின் தீர்ப்புகளில் காணப்படவில்லை. ஆயினும், அவளைக் கற்பழித்தவனுக்குத் தண்டனை உண்டு.
Book : 89
6950. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் துணைவியாரான சாரா அவர்களுடன் தம் தாயகத்தைத் துறந்து சென்றார்கள். 'மன்னன் ஒருவன்' அல்லது கொடுங்கோலன் ஒருவன்' இருந்த ஓர் ஊருக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தார்கள். (இச்செய்தியறிந்த) அவன் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் ஆளனுப்பி '(உம்முடனிருக்கும்) அப்பெண்ணை என்னிடம் அனுப்பிவை' என்று கூறினான். (இப்ராஹீம்(அலை) அவர்களும் (வேறு வழியின்றி) அவ்வாறே சாரா அவர்களை அனுப்பிவைத்தார்கள். அவன் (தவறான எண்ணத்துடன்) சாரா அவர்களை நோக்கி எழுந்து வந்தான். சாரா அவர்கள் எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்து, தொழுதுவிட்டு, 'அல்லாஹ்வே நான் உன்னையும் உன்னுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிரு(ப்பது உண்மையாக இரு)ந்தால் இந்த நிராகரிப்பாளன் என்னை ஆட்கொள்ள விடாதே' என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவள் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களால் உதைத்துக் கொண்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.14
Book :89