தேடல்


557. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்ந்து அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் போன்றதேயாகும். தவ்ராத்திற்குரியவர்கள் தவ்ராத் வழங்கப்பட்டார்கள். நடுப்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தார்கள். (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு 'கீராத்' கூலி கொடுக்கப்பட்டார்கள். பின்னர் இஞ்ஜீல் உடையவர்கள் இஞ்ஜீல் வழங்கப்பட்டார்கள். அவர்கள் (நண்பகலிலிருந்து) அஸர் வரை வேலை செய்து அவர்களும் ஓய்ந்தார்கள். அவர்களும் ஒவ்வொரு 'கீராத்' கூலி வழங்கப்பட்டார்கள். பின்னர் நாம் குர்ஆன் வழங்கப்பட்டோம். (அஸரிலிருந்து) சூரியன் மறையும் வரை நாம் வேலை செய்தோம். இரண்டிரண்டு 'கீராத்' வழங்கப்பட்டோம்.
'எங்கள் இறைவா! இவர்களுக்கு மாத்திரம் இரண்டிரண்டு 'கீராத்'கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு 'கீராத்' வழங்கி இருக்கிறாய். நாங்கள் அவர்களை விடவும் அதிக அளவு அமல் செய்திருக்கிறோமே! என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் 'உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா?' என்று கேட்பான். அவர்கள் 'இல்லை' என்பர். 'அது என்னுடைய அருட்கொடை! நான் விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவேன்' என்று இறைவன் விடையளிப்பான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: கீராத்' என்பது உஹது மலையளவு தங்கம் என்று வேறு ஹதீஸ்களில் விளக்கம் கூறப்படுகிறது.)
Volume :1 Book :9
2125. அதா இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்.
நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. 'நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!' (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல்விட்டு விடுவார்! அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!' என பதிலளித்தார்கள்.
Volume :2 Book :34
3305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பனூஇஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவர்கள் சொன்னார்கள்.
இதை நான் கஅபுல் அஹ்பார்(ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?' என்று வினவினார்கள். நான், 'ஆம் (கேட்டேன்)' என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். 'நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)' என்று கேட்டேன்.
Volume :3 Book :59
3417. நபி(ஸல்) அவர்கள் கூறினார்
தாவூத்(அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது. தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார் செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச் சேணம் பூட்டப்படும் வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார். தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார்.
அத்தாஉ இப்னு யஸார்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :4 Book :60
3635. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) 'நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது' என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் 'விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'உன் கையை எடு' என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது' என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன்.
Volume :4 Book :61
4476. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, '(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)' என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, 'நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். 'நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்' என்று சொல்வார்கள்.
உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் - அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.
உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) 'உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், 'குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை' என்று சொல்வேன்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
உயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர்ஆனில் யாரைக் குறித்து), 'நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளானோ அவர்களையே 'குர்ஆன் தடுத்துவிட்டவர்கள்' எனும் சொற்றொடர் குறிக்கிறது.
இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த நபிமொழி வந்துள்ளது.
Volume :5 Book :65
4485. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'வேதக்காரர்கனை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்' (திருக்குர்ஆன் 02:136) என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
4556. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள் 'நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், '(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) 'ரஜ்கி' (சாகும்வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா?' என்று கேட்க, யூதர்கள், '(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை' என்று பதிலளித்தனர். உடனே, ( யூதமார்க்க அறிஞராயிருந்) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), யூதர்களிடம், 'பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்' என்று கூறினார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது). அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் 'ரஜ்கி' தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை இழுத்துவிட்டு, 'இது என்ன?' என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, 'இது ரஜ்முடைய வசனம்' என்று கூறினார்கள். எனவே, (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது.
அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவளின் மீது கவிழ்ந்து கொள்வதை பார்த்தேன்.
Volume :5 Book :65
4568. அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) அறிவித்தார்.
(மதீனா ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் தம் காவலரிடம் 'ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று, 'தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டுமென்று விரும்புகிற மனிதர் ஒவ்வொரு வரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட்ட வேண்டி வருமே!' என்று (நான் வினவியதாகக்) கேள்' என்று கூறினார். (அவ்வாறே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) 'உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி(ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக்கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்கப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவலி)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்' என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் 'நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது' என அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக் கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டபடவேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 03:187, 188) இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :5 Book :65
4736. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் சந்தித்துக்கொண்டபோது மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம், 'நீங்கள் தாம் மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா?' என்று கேட்டார்கள். ஆதம்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், 'அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்து தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?' என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் 'ஆம்' (கண்டேன்) என்றார்கள். இப்படி(ப் பேசி) மூஸா(அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(திருக்குர்ஆன் 20:39 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் யம்மு' எனும் சொல்லுக்குக் 'கடல்' என்று பொருள்.
Volume :5 Book :65