பக்கம் - 1 -


தொடக்கத்திலும் இறுதியிலும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இறையருளும் ஈடேற்றமும் உண்டாகுக!

உங்கள் கைகளில் தவழும் - இந்நூல் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகத்தை தங்களுக்கு முன் சமர்ப்பிக்கின்றோம்.

ஹிஜ்ரி 1396 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் (1976 மார்ச்) பாகிஸ்தானில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து உலகளாவிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், “ராபிததுல் ஆலமில் இஸ்லாமி” (Muslim World League) என்ற பெயரில் மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இஸ்லாமிய நிறுவனம் கீழ்கண்ட ஓர் அழகிய அறிவிப்பை வெளியிட்டது.

நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்வு செய்து, கட்டுரைகள் எழுதி ராபிதாவிடம் சமர்பிக்க வேண்டும். அவற்றுள் முதல் தரமாக தேர்வு செய்யப்படும் முதல் ஐந்து ஆய்வுகளுக்கு மொத்தம் 1,50,000 ஸவூதி ரியால்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். மேலும், எழுதப்படும் ஆய்வுகள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

1) ஆய்வுகள் முழுமையாக இருக்க வேண்டும். வரலாற்று நிகழ்வுகள், சம்பவங்கள் வரிசை கிரமமாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

2) மிக அழகிய முறையில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கும் இதற்கு முன் அது பிரசுரமாகி இருக்கக் கூடாது.

3) இந்த ஆய்வுக்குச் சான்றாக, அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்ட சிறிய பெரிய நூல்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.

4) ஆய்வாளர் தனது வாழ்க்கைக் குறிப்பையும், கல்வித் திறனையும், வேறு ஏதேனும் அவரது வெளியீடுகள் இருப்பின், அவற்றையும் தெளிவாகவும் விவரமாகவும் குறிப்பிட வேண்டும்.

5) அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ‘தட்டச்சு’ செய்து அனுப்புவது மிக ஏற்றமானது.

6) அரபி அல்லது அரபியல்லாத வழக்கிலுள்ள மொழிகளில் ஆய்வுகள் இருத்தல் வேண்டும்.

7) கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் ஹிஜ்ரி 1396 ரபிஉல் அவ்வல் முதல் ஹிஜ்ரி 1397 முஹர்ரம் வரை. (1976 மார்ச் முதல் 1977 ஜனவரி வரை.)

8) மக்காவிலுள்ள ‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி“ம்ன் தலைமைச் செயலகத்துக்கு மூடப்பட்ட உறையில் ஆய்வுக் கோர்வைகள் பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும்.

9) இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களின் குழு ஒன்று கோர்வைகளை ஆய்வு செய்து தேர்வு செய்யும்.

இவ்வாறு மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பையும் அதன் நிபந்தனைகளையும் ராபிதா வெளியிட்டவுடன் அறிஞர் பெருமக்கள் பேராவலுடன் பெரும் முயற்சி எடுத்து ஆய்வுகளை கோர்வை செய்து ராபிதாவுக்கு அனுப்பினர்.

பல மொழிகளில் மொத்தம் 1182 ஆய்வுகள் அனுப்பப்பட்டன. அவற்றுள் 183 ஆய்வுகள் மட்டுமே நிபந்தனைக்குட்பட்டு இருந்ததால் அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அவற்றை பரிசீலனை செய்ததில் ஐந்து ஆய்வுகள் முதல் தரம் வாய்ந்தவை என முடிவு செய்யப்பட்டு பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டன.

1) அறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் (முபாரக்பூர், உ.பி., இந்தியா) அவர்களின் (அரபி) ஆய்வு முதல் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 50,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

2) கலாநிதி மாஜித் அலீ கான் (புது டெல்லி, இந்தியா) அவர்களின் (ஆங்கில) ஆய்வு இரண்டாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 40,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

3) கலாநிதி நாஸீர் அஹ்மது நாசிர் (பாகிஸ்தான்) அவர்களின் (உர்து) ஆய்வு மூன்றாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 30,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

4) பேராசியர் ஹாமித் மஹ்மூது (எகிப்து) அவர்களின் (அரபி) ஆய்வு நான்காம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 20,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

5) பேராசியர் அப்துஸ்ஸலாம் ஹாஷிம் (ஸவூதி) அவர்களின் (அரபி) ஆய்வு ஐந்தாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 10,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

ஹிஜ்ரி 1398, ஷஃபான் மாதத்தில் (1978-ஜூலை) கராச்சியில் நடைபெற்ற “ஆசிய இஸ்லாமிய மாநாட்டில்” வெற்றி பெற்றவர்களின் பெயர்களை ராபிதா அறிவித்தது. மேலும், அதனை பல பத்திரிகைகளும் பிரசுரித்தன.

பரிசுகளை வழங்குவதற்காக சங்கைக்குரிய இளவரசர் ஸுஊது இப்னு அப்துல் முஹ்ஸின் அவர்கள் தலைமையில் மாபெரும் விழா ஒன்று மக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, வெற்றி பெற்றவர்களுக்கு ஹிஜ்ரி 1399, ரபீஉல் அவ்வல் பிறை 12 சனிக்கிழமை காலையில் பரிசுகளை வழங்கி இளவரசர் சிறப்பித்தார்.

நூலின் இப்பின்னணியை தெரிந்து கொண்டால் இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நூல் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இந்நூலுக்கு ஆசிரியர் வைத்த பெயர் “அர்ரஹீக்குல் மக்தூம்” என்பதாகும். “முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம்” என்பது அதன் அர்த்தம். அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைந்த உயர்ந்தோருக்கு இவ்வகை மது சுவர்க்கத்தில் வழங்கப்படும் என்று அல்குர்ஆனில் (83 : 25) கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, படிப்பவருக்கு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்பதால், நபியவர்களைப் பற்றிய தனது நூலுக்கு உவமை அடிப்படையில் இந்தப் பெயரை ஆசிரியர் சூட்டியுள்ளார். அதையே நாம் சுருக்கமாக இந்நூலின் தமிழாக்கத்திற்கு “ரஹீக்” என்று பெயரிட்டுள்ளோம்.

தாருல் ஹுதாவின் ஊழியர்களான நாங்கள் இந்நூலைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகழ்ச்சிகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.

இம்மொழியாக்கப் பணியில் பெரிதும் உதவியும் ஒத்துழைப்பும் நல்கிய சகோதரர்களையும் இந்நூல் வெளிவர உதவிய நண்பர்கள் அனைவரையும் உங்கள் துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் இவர்களுக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் என்றென்றும் நல்லருள் புரிவானாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது பொருத்தத்தை வழங்குவானாக!

இந்நூலில் குறைகள், தவறுகள் ஏதும் இருப்பின் அவற்றை மறுபதிப்பில் சரிசெய்து கொள்ள ஏதுவாக சுட்டிக் காட்டுமாறு வாசக அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அதற்காக அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

தாருல் ஹுதா மேன்மேலும் பல நல்ல நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும் என அல்லாஹ்விடம் தாங்கள் மறவாமல் இறைஞ்ச வேண்டும் என்ற அன்பான கோரிக்கையை முன் வைக்கிறோம்.

அகிலத்தாரின் ஒரே இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டாகுக! ஆமீன்!!

குறிப்பு: இந்நூலின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) பிறப்பதற்கு முந்திய வரலாற்றைப் பற்றி சற்று விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது சில வாசகர்களுக்கு சடைவாகத் தோன்றினால், அவர்கள் நூலின் அடுத்த பகுதிக்குச் சென்று விடவும். அதில் தான் நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்குப் பிந்திய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மிக ஆதாரத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது.

அ. உமர் ஷரீஃப்
(குர்ஆன் மற்றும் நபிமொழி பணியாளன்)
தாருல் ஹுதா
சென்னை - 1.