பக்கம் - 14 -
2) கி.மு. 620லிருந்து கி.மு. 115 வரை

யமன் நாட்டு அரசாட்சி இக்காலக்கட்டத்தில் ‘ஸபா’ என அழைக்கப்பட்டது. இக்காலத்தில் ஆட்சி செய்தவர்கள் ‘மக்ப்’ என்ற தங்களது புனைப் பெயரைத் தவிர்த்து விட்டார்கள். அதன் ஆட்சியாளர்களை ஸபா மன்னர்கள் என அழைக்கப்பட்டது. ‘ஸிர்வா’ என்ற நகருக்கு பதிலாக ‘மஃரப்’ என்ற நகரை தங்களது தலைநகராக்கிக் கொண்டனர். மஃரப் நகரத்தின் சிதைந்த கட்டடங்கள் ‘ஸன்ஆ’ நகரின் கிழக்கே 192 கிலோ மீட்டர் தொலைவில் இன்றும் காணப்படுகின்றன.

3) கி.மு. 115லிருந்து கி.பி. 300 வரை

இக்காலக்கட்டத்தில் அந்நாடு ‘முதலாம் ஹிம்யரிய்யா அரசு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஏனெனில், ஹிம்யர் குலத்தவர் ஸபாவை வெற்றி கொண்டு தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். முன்பு அந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் ‘ஸபா’ அரசர்கள் மற்றும் ‘தூரைதான்’ அரசர்களென அழைக்கப்பட்டனர். இம்மன்னர்கள் ‘மஃரப்“க்கு பதிலாக ரைதான் என்பதை தங்களது தலைநகராக அமைத்துக் கொண்டனர். ரைதான் நகருக்கு ‘ளிஃபார்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. அந்நகரின் சிதைவுகள் ‘யர்யம்“க்கு சமீபமாக மதூர் எனும் மலையின் அருகாமையில் காணப்படுகின்றன. இக்காலத்தில்தான் ஸபா அரசுக்கு அழிவும் வீழ்ச்சியும் ஆரம்பமாயின. அவர்களின் வணிகங்களும் நசிந்தன.

அதற்குரிய காரணங்களாவன: 1) ‘நிப்த்’ இனத்தவர் ஹிஜாஸின் வடபகுதியில் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர். 2) ரோமர்கள் மிஸ்ர் (எகிப்து), ஷாம் (சிரியா) மற்றும் ஹிஜாஸின் வடபகுதியை ஒட்டியுள்ள நகரங்களில் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தி யமன் நாட்டு அரசர்களின் வியாபாரத்திற்கான கடல்மார்க்கத்தையும் அடைத்து விட்டனர். 3) அவர்களது கோத்திரங்களுக்குள் சண்டை சச்சரவுகள் தோன்றின. ஆக, இம்மூன்று காரணங்களால் அவர்களது ஆட்சி வீழ்ச்சி கண்டது. மேலும், கஹ்தான் வமிசத்தவர்கள் யமன் நாட்டை துறந்து தூரமான நாடுகளில் குடிபெயர்ந்தனர்.

4) கி.பி. 300லிருந்து இஸ்லாம் நுழையும்வரை

இக்காலக்கட்டத்தில் அந்நாடு ‘இரண்டாம் ஹிம்யரிய்யா அரசு’ என அழைக்கப்பட்டது. அப்போது ஆட்சி செய்தவர்கள் ஸபஃ, தூரைதான், ஹழர மவ்த், யம்னுத் அரசர்கள் என அழைக்கப்பட்டனர். இக்காலத்தில் உள்நாட்டு குழப்பங்கள், குடும்பச் சண்டைகள், புரட்சிகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. அதன் காரணமாக அவர்களது அரசாட்சி முடிவுக்கு வந்தது. இக்காலத்தில் ரோமர்கள் ‘அத்ன்’ நகரைக் கைப்பற்றினர். ஹம்தான் மற்றும் ஹிம்யர் குலத்தவடையே இருந்த போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு ரோமர்களின் உதவியுடன் ஹபஷியர்கள் முதன் முதலாக கி.பி. 340ல் யமன் நாட்டை கைப்பற்றினர். இவர்களின் ஆட்சி கி.பி. 378 வரை நீடித்தது. அதற்குப்பின் அந்நாடு ஹபஷியர்களின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமடைந்தது. கி.பி. 450 அல்லது 451ல் மாபெரும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு அவர்களது நகரங்கள் பெருத்த சேதம் அடைந்ததால், நகரங்களைத் துறந்து பல இடங்களுக்குச் சென்று குடியேறினர். இவ்வெள்ளப் பிரளயத்தை ‘சைலுல் அரிம்’ என மேன்மைமிகு குர்ஆன் கூறுகிறது.

கி.பி. 523ம் ஆண்டில் யமன் நாட்டை ஆட்சி செய்த ‘தூ நுவாஸ்’ என்ற யூதக் கொடுங்கோலன் நஜ்ரான் வாழ் கிருஸ்துவர்கள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்தான். அவர்களை பலவந்தமாக கிருஸ்துவ மதத்திலிருந்து மாற்றிட முனைந்தான். அவர்கள் மறுத்ததன் காரணமாக பெரும் அகழ்களைத் தோண்டி நெருப்புக் குண்டத்தை வளர்த்து, அதனுள் அவர்களை வீசி எறிந்தான். இது குறித்து அல்லாஹ் தனது அருள்மறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: