பக்கம் - 178 -
வீட்டிலிருந்து குகை வரை

நபித்துவத்தின் 14ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் பிறை 27 இரவில், அதாவது கி.பி. 622 செப்டம்பர் 12 அல்லது 13ல் நபி (ஸல்) தனது வீட்டை விட்டு வெளியேறி உயிராலும், பொருளாலும் தனக்கு மிகுந்த உதவி ஒத்தாசை செய்து வந்த, தனது தோழரான அபூபக்ர் (ரழி) வீட்டிற்கு வந்தார்கள். பின்பு, இருவரும் வீட்டின் பின்வாசல் வழியாகப் புறப்பட்டனர். விடியற்காலை உதயமாவதற்குள் மக்காவை விட்டு வெளியேறிவிடத் துரிதமாகப் பயணித்தனர்.

குறைஷிகள் தங்களை மிக மும்முரமாகத் தேட முயற்சிப்பார்கள் பொதுவாக மக்காவிலிருந்து வடக்கு நோக்கிய மதீனாவின் பாதையைத்தான் கண்காணிப்பார்கள் என்பதால் முற்றிலும் அந்த பாதைக்கு எதிர் திசையிலுள்ள மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிய தெற்கு திசையின் பாதையில் சென்றார்கள். இவ்வாறு ஐந்து மைல் நடந்ததற்குப் பின் அங்குள்ள ‘ஸவ்ர்’ மலையை சென்றடைந்தார்கள். இது ஏறுவதற்குக் கடினமான, பெரிய பாறைகளைக் கொண்ட உயரமான மலையாகும். இதனால் நபி (ஸல்) அவர்களின் பாதங்கள் காயமடைந்தன. (எதிரிகள் தங்களின் பாத அடிகளைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக குதிகால்களின் மீது நீண்ட நேரம் நடந்து வந்ததால்தான் நபி (ஸல்) அவர்களின் கால்கள் காயமடைந்தன என்றும் சிலர் கூறுகின்றனர்.) காரணம் எதுவாயினும் சரியே! மலையில் நபி (ஸல்) அவர்களால் ஏற இயலவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரழி) சுமந்து கொண்டு மலையின் உச்சியிலுள்ள குகைக்குச் சென்றார்கள். அக்குகைக்கு வரலாற்றில் ‘ஸவ்ர் குகை’ என்று கூறுகின்றனர்.

இருவரும் குகைக்குள்

நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழரும் குகையை அடைந்தபோது “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உள்ளே நுழையக் கூடாது. நான்தான் முதலில் நுழைவேன். அதில் ஏதாவது தீங்குகள் இருப்பின் அதனால் பாதிப்பு எனக்கு ஏற்படட்டும், உங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது” என்று அபூபக்ர் (ரழி) கூறி, உள்ளே நுழைந்தார்கள். அக்குகையைச் சுத்தம் செய்து அதிலிருந்த ஓட்டைகளில் ஓர் ஓட்டையைத் தனது கீழாடையின் ஒரு பகுதியைக் கிழித்து அடைத்துவிட்டு மற்ற இரண்டு ஓட்டைகளை தனது கால்களைக் கொண்டு அடைத்துக் கொண்டார்கள். பின்பு, நபி (ஸல்) அவர்களை உள்ளே அழைக்கவே அவர்கள் உள்ளே நுழைந்து அபூபக்ரின் மடியில் தனது தலையை வைத்துத் தூங்கி விட்டார்கள். சிறிது நேரத்தில் அபூபக்ர் (ரழி) காலில் ஏதோவொன்று தீண்டிவிடவே வலியினால் வேதனையடைந்த அவர்கள், ‘நபி (ஸல்) விழித்துக் கொள்வார்களே!’ என்ற பயத்தில் அசையாமல் இருந்து விட்டார்கள். எனினும், வலியின் வேதனையால் அவர்களின் கண்களில் இருந்து கசிந்த நீர், நபி (ஸல்) அவர்களின் முகத்தை நனைத்தது. விழித்துப் பார்த்த நபி (ஸல்) “அபூபக்ரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது” என்று கேட்டார்கள். “என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை ஏதோ தீண்டிவிட்டது” என்று அவர்கள் கூறவே நபி (ஸல்) தங்களது உமிழ்நீரை அவ்விடத்தில் தடவ அவர்களது வலி தூரமானது. (ரஜீன், மிஷ்காத்)

இருவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று இரவுகள் குகையில் தங்கியிருந்தனர். (ஃபத்ஹுல் பாரி)