பக்கம் - 186 -
7) ‘பத்தன் ஃம்’ என்ற இடத்தில் ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஜுபைர் (ரழி) அவர்களையும், அவர்களுடன் இருந்த மற்ற முஸ்லிம் வியாபாரிகளையும் சந்தித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ருக்கும் வெண்மையான ஆடைகளை ஜுபைர் அணிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)  
‘குபா’வில்

நபித்துவத்தின் 14 வது ஆண்டு, அதாவது ஹிஜ்ராவின் முதல் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகல் கி.பி. 622 செப்டம்பர் 23ல் நபி (ஸல்) குபா வந்திறங்கினார்கள். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

உர்வா இப்னு ஜுபைர் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) மக்காவிலிருந்து வெளியேறிவிட்ட செய்தியை மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் கேட்டவுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் மதீனாவிற்கு வெளியில் உள்ள ‘ஹர்ரா“” என்ற இடத்திற்கு வந்து காத்திருப்பார்கள். மதிய வெயில் கடுமையானவுடன் மீண்டும் மதீனாவிற்கு வந்து விடுவார்கள். ஒருநாள் மிக நீண்ட நேரம் எதிர்பார்த்திருந்து விட்டு மதீனாவுக்குத் திரும்பினார்கள். அது சமயம், யூதர்களில் ஒருவன் ஏதோ ஒன்றைப் பார்ப்பதற்காக தனது கோட்டை மீது ஏறினான். நபி (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் வெண்மையான ஆடை அணிந்து வருவதைப் பார்த்தவுடன் “ஓ அரபுகளே! நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பாக்கியம் இதோ வருகிறது!” என்று உயர்ந்த சப்தத்தில் கூறினான். இதைக் கேட்டவுடன் முஸ்லிம்கள் தங்களின் ஆயுதங்களைப் பாய்ந்து எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை வரவேற்க ‘ஹர்ரா’ நோக்கி ஓடினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: மக்கள் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடுவதாலும், வரவேற்கும் உற்சாகத்தில் குரலை உயர்த்திப் பேசுவதாலும், ஏதோ ஒன்று வேகமாக விழுந்தது போன்ற பலத்த சப்தம் கேட்டது. அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம் வசிக்கும் பகுதியிலிருந்து தக்பீர் முழக்கம் (அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற சப்தம்) விண்ணைப் பிளந்தது. நபி (ஸல்) அவர்களுடைய வருகையின் மகிழ்ச்சியால் முஸ்லிம்கள் தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைந்தனர். வாழ்த்துக் கூறி சூழ்ந்து நின்று “வருக! வருக!” என வரவேற்றனர். நபி (ஸல்) அமைதி தவழ வந்து கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில்,

நிச்சயமாக அல்லாஹ் அவரைப் பாதுகாப்பவனாக இருக்கின்றான். அன்றி, ஜிப்ரயீலும், நம்பிக்கையாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) வானவர்களும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 66:4)

என்ற வசனம் இறங்கியது.

உர்வா இப்னு ஜுபைர் கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களை வரவேற்றபோது அவர்கள் மக்களுடன் வலது புறமாக சென்று அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாருடன் தங்கினார்கள். அது ரபீவுல் அவ்வல் மாதத்தின் முதல் திங்கட்கிழமையாகும். நபி (ஸல்) அமைதியாக அமர்ந்து கொள்ளவே அபூபக்ர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டார்கள். அன்சாரிகளில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திராதவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறுவதற்காக வந்தபோது அபூபக்ரை நபியென நினைத்து அவருக்கு ஸலாம் கூறிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மீது வெயில் படவே அபூபக்ர் தன்னுடைய போர்வையால் நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் தந்தார்கள். அப்போதுதான் நபி (ஸல்) யார்? என்பதை மக்கள் விளங்கிக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)