பக்கம் - 20 -
நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலம் நபி ஈஸா (அலை) அவர்களது பிறப்புக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாகும். ஜுர்ஹும் கோத்திரத்தினர் ஏறக்குறைய இரண்டாயிரத்து நூறு ஆண்டுகள் மக்காவில் வசித்து அதனை ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர்.

குஜாஆவினர் மக்காவைக் கைப்பற்றிய பிறகு பக்ர் கோத்திரத்தாரை இணைத்துக் கொள்ளாமல் தனியாகவே தங்களது ஆட்சியை நிறுவிக் கொண்டனர். எனினும், பக்ர் கோத்திரத்தை சேர்ந்த முழர் குடும்பத்தாருக்கு மட்டும் மூன்று பொறுப்புகள் கிட்டின.

முதலாவது: ஹஜ்ஜுக்கு வருபவர்களை அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கு அழைத்து வருவது மற்றும் ஹஜ்ஜின் கடைசி தினமான 13வது நாளன்று மினாவிலிருந்து பயணமாவதற்கு அனுமதியளித்தல்.

இப்பொறுப்புகள் இல்யாஸ் இப்னு முழர் வமிசத்தில் அல் கவ்ஸ் இப்னு முர்ரா குடும்பத்தாருக்குக் கிட்டின. இவர்கள் ‘ஸூஃபா’ என அழைக்கப்பட்டனர். இவர்களது சிறப்பு என்னவெனில், ஸூஃபாவைச் சேர்ந்த ஒருவர் அகபாவில் கல் எறியாதவரை வேறு யாரும் எறியமாட்டார்கள். மக்கள் கல்லெறிந்து முடித்து மினாவிலிருந்து வெளியேறுவதாயிருந்தால் கணவாயின் இருபுறங்களையும் ஸூஃபாவினர் மூடிவிடுவார்கள். அவர்கள் முதலில் வெளியேறிச் சென்ற பிறகே மற்றவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். ஸூஃபாவினர் இறந்துவிட்ட பிறகு தமீம் கிளையைச் சேர்ந்த ஸஅது இப்னு ஜைது மனாத் குடும்பத்தினருக்கு இப்பொறுப்பு கிடைத்தது.

இரண்டாவது: துல்ஹஜ் பிறையின் 10ஆம் நாள் முஜ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு மக்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு அத்வான் குடும்பத்தார்களிடம் இருந்தது.

மூன்றாவது: (போர் புரிய தடை செய்யப்பட்ட) புனித மாதங்களை சூழ்நிலைக்கேற்ப முன் பின்னாக மாற்றிக் கொள்ளும் அதிகாரம், ‘ஃபுகைம் இப்னு அதீ’ என்ற கினானா குடும்பத்தாரிடம் இருந்தது. (இப்னு ஹிஷாம்)

குஜாஆவினரின் ஆதிக்கம் மக்காவில் முன்னூறு ஆண்டுகள் இருந்தது. (யாகூத், ஃபத்ஹுல் பாரி)

இவர்களின் காலத்தில் அத்னான் வமிசத்தைச் சேர்ந்தவர்கள் நஜ்த், இராக், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்று குடியேறினர். மக்காவில் குறைஷியைச் சேர்ந்த சில குடும்பத்தார்கள் மட்டும் ஆங்காங்கே பிரிந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு மக்கா மற்றும் புனித கஅபாவின் அதிகாரம் எதுவும் இருக்கவில்லை. இந்நிலையில் ‘குஸய் இப்னு கிலாப்’ என்பவர் குறைஷியர்களில் தோன்றினார். (இப்னு ஹிஷாம்)

குஸய்யின் சுருக்கமான வரலாறு

‘குஸய்யின்’ சிறு வயதிலேயே அவரது தந்தை மரணமாகிவிட்டார். அவரது தாயை உத்ரா குடும்பத்தைச் சேர்ந்த ‘ரபீஆ இப்னு ஹராம்’ என்பவர் மணமுடித்தார். அவர் தனது மனைவியையும் குஸய்யையும் ஷாம் நாட்டிலுள்ள தனது ஊருக்கு அழைத்து வந்தார். குஸய் வாலிபராகி மக்கா திரும்பினார். அந்நேரத்தில் மக்காவின் நிர்வாகியாக குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்த ‘ஹுலைல் இப்னு ஹப்ஷிய்யா’ என்பவர் இருந்தார். ஹுலைலின் மகள் ‘ஹுப்பா’ என்பவரை குஸய் மணமுடித்தார். (இப்னு ஹிஷாம்)