பக்கம் - 219 -
போர் சம்பந்தமான இறைவசனங்களின் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது பெரிய போர் சமீபத்தில் நடக்கப்போகிறது, அதன் முடிவில் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் முஸ்லிம்களுக்கே கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். பாருங்கள்! எவ்வாறு முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். “மக்கா இணைவைப்பாளர்கள் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றியது போன்று நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள்” என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். (பார்க்க மேற்கூறப்பட்டுள்ள அல்குர்ஆன் 2:191).

மேலும், வெற்றி பெற்ற ராணுவத்தினர் கைதிகளிடம் எந்த முறையில் நடந்துகொள்ள வேண்டுமென்ற சட்டங்களை மேற்கூறப்பட்ட வசனங்களில் அல்லாஹ் எவ்வாறு விவரித்திருக்கின்றான் என்பதைப் பாருங்கள். ஆக, இவை அனைத்தும் முஸ்லிம்களுக்குத்தான் இறுதியில் வெற்றி கிடைக்கும் என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும் முஸ்லிம்களின் ஒவ்வொரு வீரரும் அல்லாஹ்வின் பாதையில் தனது வீரத்தை வெளிப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக இந்த நற்செய்திகளை அல்லாஹ் (உடனே வெளிப்படுத்தாமல்) சற்று மறைத்தே வைத்தான்.

இந்த நாட்களில்தான் ஹிஜ்ரி 2, ஷஅபான் மாதம் (கி.பி. 624 பிப்ரவயில்) அல்லாஹ் ‘பைதுல் முகத்தஸின்’ திசையிலிருந்து கஅபாவின் பக்கம் கிப்லாவை மாற்றிக் கொள்ளுங்கள் என கட்டளையிட்டான். இதன் விளைவு, பிளவுகளை உண்டாக்க வேண்டுமென்பதற்காக முஸ்லிம்களின் அணியிற்குள் புகுந்து கொண்ட நயவஞ்சகர்களும் நம்பிக்கையில் பலவீன மானவர்களும் முஸ்லிம்களை விட்டு விலகி, தங்களது பழைய கொள்கைக்கே திரும்பிச் சென்றனர். மோசடிக்காரர்கள் மற்றும் துரோகம் செய்பவர்களை விட்டும் முஸ்லிம்களின் அணி தூய்மை அடைந்தது.

கிப்லா மாற்றப்பட்டதால் ஏற்பட்ட பெரிய பலன் இதுவே ஆகும். மேலும், கிப்லா மாற்றப்பட்டதில் ஒரு நுட்பமான அறிவிப்பும் இருக்கலாம். அதாவது, முஸ்லிம்கள் தங்களது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறார்கள். இந்தத் தொடக்கம், முஸ்லிம்கள் தங்களின் கிப்லாவைக் கைப்பற்றுவது கொண்டு முடிவுபெறும் சத்தியத்திலிருக்கும் ஒரு சமுதாயத்தின் கிப்லா எதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த சமுதாயம் அந்த கிப்லாவை எதிரிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஒரு நாள் விடுவித்தே தீரும் என்பதை உணர்த்தும் ஒரு நுட்பமான சுட்டிக்காட்டலும் கிப்லா மாற்றப்பட்டதில் இருக்கலாம்.

இதுபோன்ற கட்டளைகளினாலும், சங்கைமிகு குர்ஆன் வசனங்களின் சுட்டிக் காட்டுதலினாலும். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வேண்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயர்த்துவதற்காக தீர்வான ஒரு போரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் உற்சாகமும் அக்கால முஸ்லிம்களிடம் மேலோங்கியிருந்தது.