பக்கம் - 23 -
5) ஹாஜிகளின் தாகம் தீர்த்தல்

தொட்டிகளில் நீரை நிரப்பி அதில் உலர்ந்த திராட்சை மற்றும் பேரீத்தம் பழங்களைப் போட்டு சுவையூட்டி அந்த மதுரமான நீரை மக்கா வருபவர்களுக்கு குஸய் குடிக்க வழங்குவார்.

6) ஹாஜிகளுக்கு விருந்தளித்தல்

குறைஷியர்களிடம் ஹஜ்ஜுடைய காலங்களில் வரி வசூலித்து அதன்மூலம் ஹாஜிகளுக்கு குஸய் விருந்தோம்பல் புரிவார். இவ்விருந்தில் வசதியற்ற ஹஜ் பயணிகள் கலந்துகொள்வார்கள். (இப்னு ஹிஷாம், யஃகூபி)

இவை அனைத்தும் குஸய்ம்க்கு அமைந்திருந்த சிறப்புகளாகும். அவரது பிள்ளைகளில் அப்துத்தார் என்பவர் மூத்தவராக இருந்தார். ஆனால், அவரை விட இளையவரான அப்து மனாஃப் மக்களிடையே மிகுந்த செல்வாக்கும் மரியாதையும் உடையவராகத் திகழ்ந்தார். இது அப்துத்தாருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்துத்தாரை குஸய் அழைத்து “மக்கள் உன்னைவிட உனது சகோதரனை எவ்வளவுதான் உயர்வாக்கினாலும் நான் உன்னையே அவர்களுக்குத் தலைவராக்குவேன்” என்று கூறி தன்னிடமுள்ள அனைத்து சிறப்புகளையும் பொறுப்புகளையும் அப்துத்தாருக்கே தரவேண்டுமென உயில் எழுதினார். குஸய்யின் எந்த முடிவுக்கும் மக்கள் மாறுசெய்ய மாட்டார்கள். அவர் வாழும்போதும், மரணத்துக்குப் பின்னும் அவரது கட்டளையைப் பின்பற்றுவதே மார்க்கம் என அனைவரும் கருதினர்.

அவரது மரணத்திற்குப் பின் அவரது பிள்ளைகள் தந்தை செய்த மரணநேர கட்டளைப்படி எவ்வித கருத்து வேறுபாடுமின்றி பொறுப்புகளை நிறைவேற்றினர். அப்து மனாஃபின் மரணத்திற்குப் பிறகு அவரது பிள்ளைகள் தங்களின் தந்தையின் சகோதரர் அப்துத் தாருடைய பிள்ளைகளுடன் மேற்கூறப்பட்ட பொறுப்புகளை பெறுவதில் சச்சரவு செய்தனர். இதனால் குறைஷியர்கள் இரண்டாகப் பிரிந்து சண்டைக்கு ஆயத்தமாயினர். எனினும், போரைத் தவிர்த்து சமாதானம் செய்துகொள்ள அனைவரும் விரும்பி தங்களுக்குள் அந்த பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டனர். ஹாஜிகளுக்கு நீர் புகட்டுவது, அவர்களுக்கு விருந்தளிப்பது மற்றும் பயணம் செல்லும் குழுவினருக்கு தலைமை வகிப்பது என மூன்று பொறுப்புகள் அப்து மனாஃபின் மக்களுக்குக் கிட்டின. தாருந் நத்வாவிற்கு தலைமை வகிப்பது, கொடி பிடிப்பது மற்றும் கஅபாவை பராமரிப்பது ஆகிய பொறுப்புகள் அப்துத்தாருடைய மக்களுக்குக் கிடைத்தன.

தாருந் நத்வாவின் தலைமைத்துவம் மட்டும் இரு பிரிவினருக்கும் பொதுவாக இருந்தது என்றும் சிலர் கூறுகின்றனர்.

பிறகு அப்து மனாஃபுடைய மக்கள் சீட்டு குலுக்கிப் போட்டு தங்களுக்குக் கிடைத்த பொறுப்புகளை தங்கள் குடும்பங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அதன் அடிப்படையில் ஹாஜிகளுக்கு நீர் புகட்டுதல் மற்றும் அவர்களுக்கு விருந்தளிக்கும் பொறுப்புகள் ஹாஷிமுக்கு கிடைத்தன. வியாபாரக் குழுவினருக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு அப்து ஷம்ஸுக்கு கிட்டியது. ஹாஷிம் தனது பொறுப்புகளை வாழ்நாள் முழுவதும் சிறப்பாக நிறைவேற்றினார். அவரது மரணத்திற்குப் பின் அவரது சகோதரர் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் பொறுப்பேற்றார். முத்தலிபின் மரணத்திற்குப் பிறகு ஹாஷிமுடைய மகன் அப்துல் முத்தலிப் பொறுப்பேற்றார். இந்த அப்துல் முத்தலிப் தான் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் ஆவார். அப்துல் முத்தலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது பிள்ளைகள் பொறுப்புகளை நிறைவேற்றினர். இறுதியில் மக்கா, முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்தபோது அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அப்பொறுப்புகள் கிட்டின.