பக்கம் - 258 -
யூதர்களின் சூழ்ச்சிக்கு உதாரணம்

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: “ஷாஸ் இப்னு கைஸ்’ என்ற வயது முதிர்ந்த யூதன் ஒருவன் இருந்தான். அவன் முஸ்லிம்கள் மீது கடினமான பொறாமையும் குரோதமும் கொண்டிருந்தான். அன்சாரிகளில் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி ஓரிடத்தில் பேசியதைப் பார்த்தான்.. இவ்வளவு ஒற்றுமையாகவும் அன்பாகவும் இஸ்லாமின் அடிப்படையில் இவர்கள் ஒன்றுகூடி இருந்ததை அவனால் பொறுக்க முடியவில்லை. “இவ்வூரில் கைலா கூட்டத்தினர் அதாவது அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கிளையினர் ஒற்றுமையாகி விட்டனர். இவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மால் இங்கு தங்க முடியாது” என்று கூறி தன்னுடன் இருந்த யூத வாலிபனிடம் “நீ சென்று அவர்களுடன் உட்கார்ந்து கொள். பிறகு புஆஸ் போரைப் பற்றியும் அதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சியையும் அவர்களுக்கு நினைவூட்டு, போர் சமயத்தில் அவர்கள் தங்களுக்குள் கூறிய கவிதைகளை அவர்களுக்குப் பாடிக்காட்டு” என்று கூறினான்.

ஷாஸ் கூறியவாறே அவனும் செய்தான். நல்ல பலன் கிடைத்தது. இரு கூட்டத்தினரும் தத்தம் பெருமையைப் பற்றி பேச ஆரம்பித்தனர். இரு கூட்டத்திலிருந்தும் இருவர் மண்டியிட்டு வாய்ச் சண்டை போட, அதில் ஒருவர் நீங்கள் நாடினால் அந்தப் போரை இப்போதும் நாம் அப்படியே தொடங்கலாம் என்றார். மற்றவன் கூட்டத்தினர் “வாருங்கள்! மதீனாவிற்கு வெளியில் ஹர்ராவில் சென்று நாம் சண்டையிடுவோம். ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியவாறு ஹர்ராவை நோக்கிக் கிளம்பினர். இரு கூட்டத்தினரும் கோபத்தால் பொங்கி எழுந்தனர். அவர்களுக்குள் கடுமையான சண்டை நடக்க நெருங்கி விட்டது.

இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் தங்களுடன் இருந்த முஹாஜிர் தோழர்களை அழைத்துக் கொண்டு அன்சாரிகளிடம் விரைந்தார்கள். அவர்களை நோக்கி முஸ்லிம்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே அறியாமைக் கால வாதங்களை நீங்கள் செய்து கொள்கிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாமின் பக்கம் நேர்வழி காட்டினான் அதன் மூலம் உங்களைக் கண்ணியப்படுத்தினான் உங்களை விட்டு அறியாமைக்கால விஷயங்களை அகற்றி இருக்கின்றான் இறைநிராகரிப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்து இருக்கின்றான் உள்ளங்களுக்கு மத்தியில் அன்பை ஏற்படுத்தி இருக்கின்றான். இதற்கு பின்புமா நீங்கள் சண்டை செய்து கொள்கிறீர்கள்?” என்று அறிவுரை கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் உருக்கமான உரையைக் கேட்ட அம்மக்கள் தங்களின் இச்செயலை ஷைத்தானின் ஊசலாட்டமே எனவும் தங்கள் எதிரியின் சூழ்ச்சியுமே எனவும் புரிந்து கொண்டு அழுதனர். அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினர் ஒருவர் மற்றவரைக் கட்டித் தழுவினார். பின்பு நபி (ஸல்) அவர்களுடன் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர். அல்லாஹ்வின் எதிரி ‘ஷாஸ் இப்னு கைஸ்” உடைய சூழ்ச்சியிலிருந்து முஸ்லிம்களை அல்லாஹ் இவ்வாறு பாதுகாத்தான். (இப்னு ஹிஷாம்)