பக்கம் - 261 -
முற்றுகையிடுதல் - சரணடைதல் - நாடுகடத்தல்

இனியும் பொறுமைகாப்பது உசிதமல்ல என்பதால் நபி (ஸல்) அவர்கள் கைனுகாவினர் மீது போர் தொடுக்க முடிவு செய்தார்கள். மதீனாவில் அபூ லுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைத் தனது பிரதிநிதியாக நியமித்து விட்டு கைனுகாவனரிடம் புறப்பட்டார்கள். முஸ்லிம்களுக்குரிய கொடியை ஹம்ஜா (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள். கைனுகா கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களை பார்த்தவுடன் கோட்டைகளுக்குள் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். அவர்களை நபி (ஸல்) முற்றுகையிட்டார்கள். இந்த முற்றுகை ஹிஜ்ரி 2, ஷவ்வால் 15 சனிக்கிழமை தொடங்கி 15 இரவுகள் (துல்கஅதா முதல் பிறை வரை) தொடர்ந்தது. அல்லாஹ் அந்த யூதர்களின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தினான். அவர்கள் அனைவரும் தங்கள் விஷயத்திலும் தங்களின் சொத்து, பெண்கள், பிள்ளைகள் விஷயத்திலும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு இணங்குவதாய் கூறி, கோட்டைகளை விட்டு வெளியே வந்தனர். நபி (ஸல்) அம்மக்களின் கரங்களைக் கட்ட உத்தரவிட்டார்கள்.

இந்நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை தனது நயவஞ்சகத் தன்மைக்கேற்ப செயல்பட்டான். நபி (ஸல்) அவர்களிடம் யூதர்களை மன்னிக்க வேண்டுமென்று வற்புறுத்தினான். “முஹம்மதே! என்னுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட இவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினான். (பனூ கைனுகா, கஸ்ரஜ் இனத்தவன் நண்பர்களாக இருந்தார்கள்.) இப்னு உபை தனது இக்கூற்றை பலமுறை திரும்பக் கூறியும் நபி (ஸல்) அதைப் புறக்கணித்தார்கள். அவன் நபி (ஸல்) அவர்களின் சட்டைப் பைக்குள் கையை நுழைத்துக் கொண்டு, அவர்களை வற்புறுத்தினான். நபி (ஸல்) அவர்கள் அவனிடம் “என்னை விட்டுவிடு” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்தில் ஏற்பட்ட கோபத்தின் மாறுதலை நபித் தோழர்கள் உணர்ந்தார்கள். மீண்டும் “உனக்கென்ன நேர்ந்தது! என்னை விட்டுவிடு” என்று நபி (ஸல்) கூறினார்கள். ஆனால், அந்நயவஞ்சகன் தனது பிடிவாதத்தைத் தொடர்ந்தவனாக “இவர்களில் கவச ஆடை அணியாத நானூறு நபர்கள், கவச ஆடை அணிந்த முந்நூறு நபர்கள் இவர்களெல்லாம் என்னைப் பாதுகாத்தவர்கள். இந்த அனைவரையும் ஒரே பொழுதில் நீர் வெட்டி சாய்த்து விடுவீரோ! எனது நண்பர்கள் விஷயத்தில் நீர் அழகிய முறையில் நடந்து கொள்ளாதவரை நான் உம்மை விடமாட்டேன். பின்னால் பிரச்சனைகள் ஏற்படுவது பற்றி இப்போதே நான் அஞ்சுகிறேன்” என்று கூறினான்.

இப்னு உபை தன்னை முஸ்லிம் என்று கூறி ஒரு மாதம்தான் ஆகியிருந்தும் அவனிடம் நபி (ஸல்) மிக அழகிய முறையில் நடந்து, அவன் கேட்டக் கோரிக்கைக்கிணங்க யூதர்கள் அனைவரையும் விடுதலை செய்து மதீனாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அனைத்து யூதர்களும் ஷாமுக்குச் சென்றனர். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவர்களில் அதிகமானவர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஒன்று சேர்க்கும் பொறுப்பை முஹம்மது இப்னு மஸ்லாமாவிடம் வழங்கினார்கள். அவர்களுடைய பொருட்களில் இருந்து மூன்று வில்களையும், இரண்டு கவச ஆடைகளையும், மூன்று வாட்களையும், மூன்று ஈட்டிகளையும் தனக்கென எடுத்த பிறகு, ஐந்தில் ஒன்றை அல்லாஹ்விற்காக ஒதுக்கினார்கள். மற்ற அனைத்தையும் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)