பக்கம் - 267 -
தங்களின் தலைவன் கொல்லப்பட்டதை அறிந்த யூதர்களின் உள்ளங்களில் பயம் குடியேறியது. சுமூகமான நடவடிக்கை பலன் தராதபோது பலத்தைப் பயன்படுத்துவதற்கும் நபி (ஸல்) தயங்க மாட்டார்கள் என்று அறிந்தனர். எனவே, தங்களது தலைவர் கொல்லப் பட்டதற்காக கூச்சல், குழப்பம் ஏதுமின்றி அமைதியைக் கடைப்பிடித்தனர். முஸ்லிம்களுக்கு பணிந்து அவர்களுடன் செய்த ஒப்பந்தங்களை நிறைவேற்றி வாழ்ந்தனர். ஆக, சீறிக்கொண்டிருந்த விஷப் பாம்புகள் பொந்துகளுக்குள் விரைந்து சென்று பதுங்கிக் கொண்டன.

இவ்வாறு சில காலம் உள்ளூர் குழப்பங்களை விட்டு நிம்மதி பெற்றதை அடுத்து மதீனாவுக்கு வெளியிலிருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள நபி (ஸல்) தயாரானார்கள்.

கைனுகா இன யூதர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள், ஸவீக், தீஅம்ர் தாக்குதல்கள் மற்றும் கஅப் இப்னு அஷ்ரஃபின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகிவற்றின் மூலம் முஸ்லிம்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவ்வப்போது ஏற்பட்டு வந்த உள்நாட்டு பிரச்சனைகளிலிருந்தும், சிரமங்களிலிருந்தும் விடுதலை அடைந்தனர்.

‘பஹ்ரான்’ போர்

இந்நிகழ்ச்சி ஒரு போர் ஒத்திகையாக இருந்தது. அதாவது, குறைஷிகளை எச்சரிப்பதற்காக ஹிஜ்ரி 3, ரபீவுல் ஆகிர் மாதம் முந்நூறு வீரர்களுடன் மக்காவிற்கு அருகில் உள்ள ‘ஃபுர்வு’ என்ற இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் ‘பஹ்ரான்’ என்ற இடத்திற்கு வந்து “ரபீவுல் ஆகிர், ஜுமாதா அல்ஊலா” ஆகிய இருமாதங்கள் நபி (ஸல்) தங்கினார்கள். ஆனால், அங்கு சண்டை ஏதும் நிகழவில்லை. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

ஜைதுப்னு ஹாஸாம் படைப் பிரிவு

பின்னால் வரும் உஹுத் போருக்குமுன் முஸ்லிம்கள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் இதுவே மிக வெற்றி பெற்றதாக அமைந்தது. இது ஹிஜ்ரி 3 ஜுமாதல் ஆகிராவில் நடைபெற்றது.

இதன் விவரமாவது: குறைஷிகள் பத்ர் போரினால் அளவிலா கவலையிலும் துக்கத்திலும் இருந்தனர். இந்நிலைமையில் அவர்கள் ஷாமுக்குச் செல்லும் வியாபாரப் பயணத்தின் கோடை காலம் நெருங்கியது. இப்பயணத்தை எப்படி பாதுகாப்புடன் மேற்கொள்வது என்ற மற்றொரு கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டது.

குறைஷிகள் இந்த ஆண்டு ஷாமுக்குச் செல்லும் வியாபாரக் குழுவின் தலைமைத்துவத்திற்கு ஸஃப்வான் இப்னு உமையாவைத் தேர்ந்தெடுத்தனர். முஹம்மதும், அவரது தோழர்களும் நமது வியாபார மார்க்கங்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கி விட்டனர். அவருடைய தோழர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரது தோழர்கள் எப்போதும் கடற்கரைப் பகுதியை கண்காணித்து வருகிறார்கள். கடற்கரைப் பகுதியில் உள்ளவர்கள் முஹம்மதுடன் உடன்படிக்கை செய்து கொண்டதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் அவருடைய மார்க்கத்தையும் ஏற்று இருக்கின்றனர். எனவே, நாம் எந்த வழியில் செல்வதென்றே புரியவில்லை. வியாபாரத்திற்குச் செல்லாமல் மக்காவிலேயே தங்கிக் கொண்டால் நமது முதலீடும் அழிந்து விடும். நமது வியாபாரம் கோடை காலத்தில் ஷாம் தேசத்தையும் குளிர் காலத்தில் ஹபஷாவையுமே சார்ந்துள்ளது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.