பக்கம் - 272 -
தற்காப்புத் திட்டத்தை ஆலோசித்தல்

இஸ்லாமியப் படையின் ஒற்றர்கள், குறைஷி ராணுவத்தினரின் நிலைகளை அவ்வப்போது நபியவர்களுக்கு அனுப்பியவாறு இருந்தனர். இறுதியாக, எதிரிகள் எங்கு முகாம் அமைத்துள்ளனர் என்பது வரையுள்ள செய்திகள் ஒவ்வொன்றையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது மேல்மட்ட ராணுவ ஆலோசனை சபையை நபி (ஸல்) அவர்கள் ஒன்று கூட்டி, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளைப் பரிமாறிக் கொண்டதுடன், தான் கண்ட ஒரு கனவையும் அவர்களுக்குக் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நல்ல கனவு ஒன்றைக் கண்டேன். சில மாடுகள் அறுக்கப்படுகின்றன. எனது வாளின் நுனியில் ஓர் ஓட்டை ஏற்படுவதைப் பார்த்தேன். உறுதிமிக்க பாதுகாப்புடைய கவச ஆடையில் எனது கையை நான் நுழைத்துக் கொள்வதாகவும் பார்த்தேன்” என்று கூறி, “மாடுகள் அறுக்கப்படுவதின் பொருள் தங்களது தோழர்களில் சிலர் கொல்லப்படுவார்கள். வாளில் ஏற்பட்ட ஓட்டையின் கருத்து தனது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்படுவார். உருக்குச் சட்டை என்பது மதீனாவாகும்” என்று விளக்கம் கூறினார்கள்.

பின்பு நபி (ஸல்) அவர்கள் தங்களது அபிப்ராயத்தைத் தோழர்களிடத்தில் கூறினார்கள். அதாவது: “மதீனாவை விட்டு நாம் வெளியேறாமல், மதீனாவுக்குள் இருந்து கொண்டே நம்மை பாதுகாத்துக் கொள்வோம். குறைஷிகள் தங்களின் ராணுவ முகாம்களிலேயே தங்கியிருந்தால் எவ்விதப் பலனையும் அடையமாட்டார்கள். அவர்கள் தங்குவது அவர்களுக்கே தீங்காக அமையும். அவர்கள் மதீனாவுக்குள் நுழைய முயன்றால் முஸ்லிம்கள் தெரு முனைகளிலிருந்து அவர்களை எதிர்க்க வேண்டும். பெண்கள் வீட்டுக்கு மேலிருந்து தாக்க வேண்டும்.”

நபி (ஸல்) அவர்கள் கூறிய இது உண்மையில் சரியான அபிப்ராயமாகவும் இருந்தது.

நயவஞ்சகர்களின் தலைவனான இப்னு உபை நபி (ஸல்) அவர்களின் இக்கருத்தையே ஆமோதித்தான். அவன் கஸ்ரஜ் வமிசத்தவர்களின் முக்கிய பிரமுகர்களில் ஒருவன் என்ற அடிப்படையில் இச்சபையில் கலந்திருந்தான். ராணுவ ரீதியாக நபி (ஸல்) அவர்களின் கருத்துதான் மிகச் சரியானது என்பதற்காக இப்னு உபை இக்கருத்துடன் ஒத்துப் போகவில்லை. மாறாக, அப்போதுதான் எவருக்கும் தெரியாமல் போரிலிருந்து நழுவிவிட இயலும் என்பதற்காகவே இந்த ஆலோசனையை அவன் ஆமோதித்தான்.

முஸ்லிம்கள் முன்னிலையில் முதல் முறையாக அவனும், அவனது தோழர்களும் இழிவடைய வேண்டும் அவர்களது நிராகரிப்பையும், நயவஞ்சகத்தனத்தையும் மறைத்திருந்த திரை அவர்களை விட்டு அகன்றிட வேண்டும் இது நாள் வரை தங்களது சட்டை பைக்குள் ஊடுருவி இருந்த விஷப் பாம்புகளை முஸ்லிம்கள் தங்களுக்கு சிரமமான இந்நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் முடிவை மாற்றி அமைத்தான்.

பத்ரில் கலக்காத நபித்தோழர்களிலும் மற்ற நபித்தோழர்களிலும் சிறப்புமிக்க ஒரு குழுவினர் ‘மதீனாவை விட்டு வெளியேறி போர் புரிவதற்கு’ நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசனைக் கூறி, அதை வலியுறுத்தவும் செய்தனர். அவர்களில் சிலர் இப்படியும் கூறினர்: “அல்லாஹ்வின் தூதரே! இந்நாளுக்காக அல்லாஹ்விடம் நாங்கள் பிரார்த்தனை செய்து வந்ததுடன், இப்படி ஒரு நாளை சந்திக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தோம். அல்லாஹ் அந்நாளை எங்களுக்கு அருளி இருக்கிறான். புறப்படுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. எதிரியை நோக்கிப் புறப்படுங்கள். நாம் அவர்களைப் பார்த்து பயந்து கோழையாகி விட்டதால்தான் மதீனாவை விட்டு வெளியேற வில்லை என்று அவர்கள் எண்ணிவிடக் கூடாது!”