பக்கம் - 273 -
இவ்வாறு வீரமாக பேசிய நபித்தோழர்களில் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிபும் ஒருவர். இவர் பத்ர் போரில் கலந்துகொண்டு போற்றத்தக்க அளவில் பங்காற்றினார். இவர் நபி (ஸல்) அவர்களிடம் “உங்கள் மீது வேதத்தை இறக்கிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மதீனாவுக்கு வெளியில் அந்த எதிரிகளை எனது வாளால் வெட்டி வீழ்த்தாத வரை எந்த உணவும் சாப்பிட மாட்டேன்” என்று சத்தியம் செய்தார். (ஸீரத்துல் ஹல்பிய்யா)

உணர்ச்சிமிக்க இந்த வீரர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் தங்களது எண்ணத்தை விட்டுக் கொடுத்தார்கள். மதீனாவை விட்டு வெளியேறி எதிரிகளைத் திறந்த மைதானத்தில் சந்திக்கலாம் என்ற முடிவு உறுதியானது.

படையை திரட்டுதல் - போர்க்களம் புறப்படுதல்
அன்று வெள்ளிக்கிழமை. ஜுமுஆ தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு நல்லுபதேசம் செய்து உறுதியாகவும் நிலையாகவும் இருக்கும்படி கட்டளையிட்டார்கள். உங்களது பொறுமைக்கு அல்லாஹ்வின் நல்லுதவி நிச்சயம் கிடைக்கும் என்று அறிவித்தார்கள். எதிரியைச் சந்திக்க தயாராகும்படி முஸ்லிம்களைப் பணித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் உரையைக் கேட்டு முஸ்லிம்கள் மிகவும் மகிழ்ந்தனர். அன்று நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்ளுக்கு அஸர் தொழுகையையும் தொழ வைத்தார்கள். மதீனாவில் உள்ளவர்களும் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உள்ளவர்களும் பெருமளவில் குழுமியிருந்தனர். தொழ வைத்ததற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் தங்கள் இல்லத்திற்குச் சென்றார்கள். அவர்களுடன் அபூபக்ர், உமர் (ரழி) ஆகியோர் சென்று நபி (ஸல்) அவர்களுக்குத் தலைப்பாகை அணிவித்து மற்ற ஆடைகளையும் அணிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முழுமையான ஆயுதங்களுடனும் இரண்டு கவச ஆடைகளுடனும் வாளைக் கழுத்தில் தொங்கவிட்டவர்களாக முஸ்லிம்களுக்கு முன் தோன்றினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வருகையை எதிர்பார்த்திருந்த மக்களிடம் ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களும், உஸைத் இப்னு ஹுழைர் (ரழி) அவர்களும் “மதீனாவிலிருந்து வெளியேறிதான் போர் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களை நீங்கள் நிர்பந்தித்து விட்டீர்கள். எனவே, உங்களது அபிப்ராயத்தை விட்டுவிட்டு அதிகாரத்தை நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று கூறினார்கள். இதனால் அந்த மக்கள் தங்களின் செயல்களுக்காக வருந்தினர். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு மாறு செய்வது எங்களுக்கு உசிதமல்ல. நீங்கள் விரும்பியதையே, அதாவது மதீனாவில் தங்குவதுதான் உங்களுக்கு விருப்ப மானது என்றால் அதையே நீங்கள் செய்யுங்கள்” என்று மக்கள் கூறினார்கள். ஆனால் நபி (ஸல்), “ஓர் இறைத்தூதர் தனது கவச ஆடையை அணிந்தால், அதன் பிறகு அல்லாஹ் அவருக்கும் அவருடைய எதிரிகளுக்கும் மத்தியில் தீர்ப்பளிக்கும் வரை அதைக் கழற்றுவது அவருக்கு ஆகுமானதல்ல” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, முஸ்னது அஹ்மது, ஸுனன் நஸாம்)

நபி (ஸல்) தனது படையை மூன்று பிரிவாக அமைத்தார்கள்:

1) முஹாஜிர்களின் பிரிவு: இப்பிரிவுக்குரிய கொடியை முஸ்அப் இப்னு உமைர் அல் அப்தரீயிடம் கொடுத்தார்கள். (முஹாஜிர்கள் - மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய முஸ்லிம்கள்)

2) அன்சாரிகளில் அவ்ஸ் கூட்டத்தினரின் பிரிவு: இப்பிரிவுக்குரிய கொடியை உஸைத் இப்னு ஹுளைடம் கொடுத்தார்கள். (அன்ஸாரிகள் - இஸ்லாமை ஏற்ற மதீனாவாசிகள்.)

3) அன்சாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தினரின் பிரிவு: இப்பிரிவுக்குரிய கொடியை ஹுபாப் இப்னு முன்திடம் கொடுத்தார்கள்.

படையில் 1,000 வீரர்கள் இருந்தார்கள். அவர்களில் 100 நபர்கள் கவச ஆடை அணிந்திருந்தனர். அவர்களில் குதிரை வீரர் எவரும் இருக்கவில்லை. (ஃபத்ஹுல் பாரி)