பக்கம் - 274 -
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தொழுகை நடத்துவதற்கு அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நியமித்தார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களின் ஆணைக்கிணங்க இஸ்லாமியப் படை மதீனாவின் வடக்கு நோக்கிப் புறப்பட்டது. ஸஅது இப்னு உபாதா, ஸஅது இப்னு முஆத் ஆகியோர் கவச ஆடை அணிந்து, நபி (ஸல்) அவர்களுக்கு முன் நடந்து சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் ராணுவம் ‘ஸன்யத்துல் வதா’ என்ற இடத்தைக் கடந்தபோது, தனது படையிலிருந்து சற்று விலகி வந்து கொண்டிருக்கும் நன்கு ஆயுதம் தத்த ஒரு படையை நபியவர்கள் பார்த்தார்கள். நபியவர்கள் “நம்முடன் வரும் இந்தப் படை யாருடையது?” என்று வினவினார்கள். அதற்கு கஸ்ரஜ் இனத்தவர்களின் நண்பர்களான யூதர்கள் “இணைவைப்பவர்களுக்கு எதிரான போரில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் நம்முடன் வந்துள்ளார்கள்” என்று கூறப்பட்டது. “அவர்கள் இஸ்லாமைத் தழுவியிருக்கிறார்களா?” என்று நபி (ஸல்) கேட்க, தோழர்கள் “இல்லை” என்றனர். ஆனால், இணைவைப்போருக்கு எதிரான போரில் நிராகரிப்போரை தங்களின் உதவிக்கு அழைத்துச் செல்ல நபி (ஸல்) மறுத்துவிட்டார்கள்.

படையைப் பார்வையிடுதல்

“ஷைகான்” என்ற இடத்தை அடைந்தவுடன் நபி (ஸல்) தனது படையை நிறுத்தி பார்வையிட்டார்கள். அதில் வயது குறைந்தவர்களாகவும் போர் செய்வதற்கு வலிமையற்றவர் களாகவும் இருந்தவர்களை மதீனாவிற்குத் திருப்பி அனுப்பினார்கள். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அப்துல்லாஹ் இப்னு உமர், உஸாமா இப்னு ஜைது, உஸைது இப்னு ளுஹைர், ஜைது இப்னு ஸாபித், ஜைது இப்னு அர்கம், அராபா இப்னு அவ்ஸ், அம்ர் இப்னு ஹஸ்ம், அபூ ஸயீத் அல்குத், ஜைது இப்னு ஹாரிஸா அல்அன்சாரி, ஸஅத் இப்னு ஹப்பா ஆவர். மேலும், இவர்களில் பரா இப்னு ஆஜிபும் இருந்தார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், ஸஹீஹ் புகாரியில் வரும் இவர்களின் ஹதீஸை நாம் கவனிக்கும் போது இவர் போரில் கலந்தார் என தெரியவருகிறது.

ராஃபி இப்னு கதீஜ், ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) ஆகிய இருவரின் வயது குறைவாக இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் போரில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். அதற்குக் காரணம் ராஃபி இப்னு கதீஜ் (ரழி) அம்பெறிவதில் மிகத் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அதனால் அவரைப் போரில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். அப்போது ஸமுரா (ரழி) “ராஃபியை விட நான் பலமிக்கவன். நான் அவரைச் சண்டையிட்டு வீழ்த்துமளவுக்கு ஆற்றலுள்ளவன்” என்றார். நபியவர்கள் அவ்விருவரையும் தனக்கெதிரில் மல்யுத்தம் செய்யப் பணித்தார்கள். அவ்விருவரும் சண்டையிட்ட போது ஸமுரா, ராஃபியை வீழ்த்தினார். இதனால் நபியவர்கள் சமுராவும் போரில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள்.

உஹுதுக்கும் மதீனாவுக்குமிடையில்

மாலை நேரமாகவே நபி (ஸல்) அவர்கள் ஷைகானில் மஃரிப் தொழுதார்கள். பின்பு இஷாவும் தொழுது அங்கேயே இரவை கழித்திட ஏற்பாடு செய்தார்கள். தனது ராணுவத்தைப் பாதுகாப்பதற்காக ராணுவ முகாமைச் சுற்றிலும் ஐம்பது வீரர்களை நியமித்தார்கள். அவர்களுக்குத் தலைவராக கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொலைச் செய்ய சென்ற குழுவுக்கு தளபதியாக இருந்த முஹம்மது இப்னு மஸ்லமாவை நியமித்தார்கள். தக்வான் இப்னு அப்து கைஸ் (ரழி) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.