பக்கம் - 285 -
மனைவியைப் பிரிந்து போர்க்களம் நோக்கி...

அன்றைய தினத்தில் ஆபத்துகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் களத்தில் துணிச்சலுடன் போர் புரிந்த வீரர்களில் ‘அல்கஸீல்’ என்று அழைக்கப்படும் ஹன்ளலா (ரழி) அவர்களும் ஒருவர். இவர் முஸ்லிமல்லாதவர்களால் ‘துறவி’ என்றும் நபி (ஸல்) அவர்களால் ‘பாவி’ என்றும் அழைக்கப் பட்ட அபூ ஆமின் மகனாவார். ஹன்ளலா (ரழி) அன்றுதான் திருமணம் முடித்திருந்தார்கள். தனது மனைவியுடன் தனித்திருந்த இவர்கள், போர்க்களத்தில் இருந்து பலத்த சப்தத்தைக் கேட்டவுடன் அதே நிலையில் போர்க்களத்தை நோக்கி ஓடோடி வந்து இணைவைப்பாளர்களின் அணிக்குள் புகுந்து எதிரிகளைத் தாக்கிய வண்ணம் முன்னேறி சென்றார்கள். இணை வைப்பாளர்களின் தளபதியான ‘அபூ ஸுஃப்யான்’ என்ற ஸக்ர் இப்னு ஹர்பை நெருங்கி அவருடன் கடுமையான போர் புரிந்து அவரைக் கீழே வீழ்த்திக் கொல்வதற்கு நெருங்கிவிட்டார். அல்லாஹ் அவருக்கு வீர மரணத்தை முடிவு செய்யாமல் இருந்திருந்தால் இவர் அபூ ஸுஃப்யானை கொன்றிருப்பார். ஆனால், ஷத்தாத் இப்னு அஸ்வத் என்பவன் முதுகுப் புறத்திலிருந்து ஹன்ளலா (ரழி) அவர்களைத் தாக்கியதால் அவர்கள் வீர மரணமடைந்தார்கள்.

போரில் அம்பெறியும் வீரர்களின் பங்கு

நபி (ஸல்) அவர்கள் மலையின் மீது நிறுத்திய வீரர்கள் இஸ்லாமியப் படைக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தனர். காலித் இப்னு வலீதின் தலைமையின் கீழ், பாவி அபூ ஆமின் உதவியுடன் எதிரிகள் மூன்று முறை இஸ்லாமியப் படையின் இடது பாகத்தை முறியடிக்க முயன்றனர். முஸ்லிம்களின் பின்புறமாகத் தாக்குதல் தொடுத்து அணியில் சேதங்களையும் குழப்பங்களையும் உண்டுபண்ணி, அதைத் தொடர்ந்து பெரும் தோல்வியை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திவிடலாம் என்று மூன்று முறை இம்மலைப் பகுதியின்மீது எதிரிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால், மலை மீதிருந்து அம்பெறியும் வீரர்கள் இவர்களின் மீது அம்பு மழை பொழிந்து இவர்களின் மூன்று தாக்குதல்களையும் முறியடித்தனர். (ஃபத்ஹுல் பாரி)

இணைவைப்பவர்களுக்குத் தோல்வி

இவ்வாறுதான் போர் எனும் திருகை சுழன்றது. சிறியதாக இருந்த இஸ்லாமியப் படை நிலைமை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் இணைவைப்பவர்களின் நம்பிக்கை தளர்ந்தது. அவர்களின் படை வலது, இடது, முன், பின் என நாலா பாகங்களிலும் சிதறி ஓடின. அந்நிலைமை எவ்வாறு இருந்ததென்றால், மூவாயிரம் இணைவைப்பவர்கள் சில நூறு முஸ்லிம்களுடன் அல்ல முப்பதினாயிரம் முஸ்லிம்களுடன் போர் புரிகிறார்கள் என்பதைப் போல் இருந்தது. முஸ்லிம்கள் தமது வீரதீரங்களை, திறமைகளை மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தினர்.

முஸ்லிம்களின் தாக்குதலை தடுக்க இணைவைப்பவர்கள் முழு முயற்சி செய்தும் அது முடியாமல் போனதால், தங்களின் தோல்வியையும் இயலாமையையும் உணர்ந்தனர் துணிவை இழந்தனர். கொடி ஏந்தியிருந்த ‘சூஆப்’ என்பவர் இறுதியாகக் கொல்லப்பட்ட பிறகு அவர்களின் கொடியை எடுத்து நிமிர்த்தி அதைச் சுற்றிலும் தொடர்ந்து போர் புரிவதற்கு யாரும் துணியவில்லை. இதனால் பழிவாங்க வேண்டும் தங்களது கண்ணியத்தையும் மதிப்பையும் நிலைநாட்ட வேண்டும் என்று தங்களுக்குள் பேசி வந்ததையெல்லாம் மறந்துவிட்டு, உயிர் பிழைத்தால் போதுமென்று தலைதெறிக்க தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.

“இவ்வாறு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை அருளினான். தனது வாக்கை அவர்களுக்கு உண்மைப்படுத்தினான். முஸ்லிம்கள் தங்களது வாட்களால் எதிரிகளை வெட்டி வீழ்த்தினர். போர்க்களத்தை விட்டு தப்பி ஓடிய எதிரிகளை வெருண்டோட வைத்தனர். உண்மையில் இணைவைப்பவர்கள் பெரும் தோல்வி கண்டார்கள்.