பக்கம் - 298 -
சண்டாளன் ‘உபை’ கொல்லப்படுதல்

நபி (ஸல்) அவர்கள் மலைக் கணவாயில் தங்களையும் தோழர்களையும் பாதுகாத்துக் கொண்ட போது உபை இப்னு கலஃப் “முஹம்மது எங்கே! அவர் தப்பித்துக் கொண்டால் நான் தப்பிக்க முடியாது” என்று அலறியவனாக நபியவர்களைத் தேடி அலைந்தான். அப்பொழுது அவன் நபியவர்களைப் பார்த்துவிட கொலை வெறியுடன் அவர்களை நோக்கி விரைந்தான். தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் சென்று அவனைத் தாக்கட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) “அவனை விட்டு விடுங்கள். அவன் என்னருகில் வரட்டும்” என்றார்கள். அவன் நபியவர்களுக்கு அருகில் நெருங்கிய போது ஹாரிஸ் இப்னு சிம்மாவிடமிருந்து ஒரு சிறிய ஈட்டியை வாங்கி நபியவர்கள் தனது உடலைச் சிலிர்த்தார்கள். எப்படி ஒட்டகம் சிலிர்க்கும் போது அதனுடைய முதுகிலிருந்து முடி பறக்குமோ, அதுபோன்று மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டு பறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவனை முன்னோக்கி அவன் அணிந்திருந்த கவச ஆடைக்கும் தலைக் கவசத்திற்குமிடையே தெரிந்த அவனது கழுத்தைக் குறி பார்த்து ஈட்டியை எறிந்தார்கள். அந்த ஈட்டி அவனது கழுத்தை உராய்ந்து சென்று சிறிய காயத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதனால் ஏற்பட்ட வலியோ மிகக் கடுமையாக இருந்தது, அவன் ஒட்டகத்தில் அமர முடியாமல் பலமுறை கீழே விழுந்து எழுந்தான். அந்த சிறிய காயத்துடன் குறைஷிகளிடம் திரும்பி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது என்னைக் கொன்று விட்டார்” என்று சப்தமிட்டான். அதற்கு குறைஷிகள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ பயந்துவிட்டாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உனக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் இந்த சிறிய காயத்திற்குப்போய் இப்படி கூச்சல் போடுவாயா? என்று கூறி நகைத்தார்கள். அதற்கு அவன் “முஹம்மது மக்காவில் இருக்கும்போதே நான் உன்னைக் கொல்வேன்! என்று கூறியிருந்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்மீது அவர் துப்பியிருந்தாலும் நான் செத்திருப்பேன்” என்று கூறினான். மாடு அலறுவது போன்று அவன் அலறினான். “எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! எனக்கு இருக்கும் வேதனையை இந்த “தில்மஜாஸிலுள்ள’ அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தால் அவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள்” என்றான். மக்கா செல்லும் வழியில் ‘ஸஃப்’ என்ற இடத்தில் இவன் இறந்தான். (இப்னு ஹிஷாம்)

நபியவர்களுக்கு தல்ஹா தோள் கொடுக்கிறார்

நபி (ஸல்) அவர்கள் மலையை நோக்கி ஒதுங்க முயன்ற போது வழியில் ஒரு பாறை குறுக்கிட்டது. அதன் மீது ஏறிதான் செல்ல வேண்டும் ஆனால், அவர்களால் ஏற முடியவில்லை. காரணம், அவர்களின் உடல் கனமாக இருந்தது இரண்டு கவச ஆடைகள் அணிந்திருந்தார்கள் அத்துடன் பலத்த காயங்களும் ஏற்பட்டிருந்தன. எனவே, தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) பாறைக்குக் கீழ் உட்கார்ந்து கொள்ள, நபியவர்கள் அவர் உதவியால் மேலே ஏறினார்கள். பிறகு, “தல்ஹா (சொர்க்கத்தை) தனக்கு கடமையாக்கிக் கொண்டார்” என்று நபி (ஸல்) அவருக்கு நற்செய்தி கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

இணைவைப்பவர்களின் இறுதி தாக்குதல்

நபி (ஸல்) அவர்கள் கணவாயின் மையப்பகுதியில் நன்கு நிலை கொண்டபோது இணை வைப்பவர்கள் மீண்டும் தாக்கினர். இது முஸ்லிம்களுக்கு சேதம் ஏற்படுத்த வேண்டுமென்று அவர்கள் செய்த இறுதித் தாக்குதலாகும்.

நபியவர்கள் மலைக் கணவாயில் இருந்த போது குறைஷிகளின் ஒரு கூட்டம் மலையின் மீது ஏறி வந்து தாக்க முயற்சி செய்தது. அவர்களுக்கு அபூ ஸுஃப்யானும் காலித் இப்னு வலீதும் தலைமை தாங்கினர். அப்போது நபியவர்கள் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! அவர்கள் எங்களுக்கு மேல் உயரே ஏறிவிடக் கூடாது” என்று பிரார்தித்தார்கள். அப்போது உமர் இப்னு கத்தாபும் (ரழி) அவருடன் முஹாஜிர்களின் ஒரு சிறு கூட்டமும் சென்று அவர்களிடம் சண்டையிட்டு கீழே இறக்கியது. (இப்னு ஹிஷாம்)