பக்கம் - 321 -
ஆனால், உஹுத் போருக்குப்பின் இவர்களுக்கத் துணிவு பிறந்தது. பகைமை மற்றும் மோசடியையும் வெளிப்படையாக செய்யத் துவங்கினர். மக்காவிலுள்ள இணைவைப்பவர்களுடனும், மதீனாவிலுள்ள நயவஞ்சகர்களுடனும் தங்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் குதித்தனர். (ஸுனன் அபூதாவூது)

நபி (ஸல்) இந்த யூதர்கள் குறித்து மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். ஆயினும், ரஜீஃ, பிஃரு மஊன் ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பின் இவர்களுக்கு புது துணிவு பிறந்தது. அதனால் நபியவர்களைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்கள் சிலரை அழைத்துக் கொண்டு இவர்களிடம் வந்தார்கள். “அம்ர் இப்னு உமையா ழம்ரி என்ற தனது தோழரால் தவறுதலாக கொல்லப்பட்ட கிலாப் குலத்தவர்களின் குடும்பத்தவர்களுக்கக் கொடுக்க வேண்டும். அதற்காக தங்களால் ஆன உதவிகளைச் செய்யும்படி” நபியவர்கள் கோரினார்கள். யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இதற்குமுன் செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி நஷ்டஈடு கொடுக்கும் விஷயத்தில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதும் ஒன்று. காலங்காலமாக சூழ்ச்சிக்கு பெயர் போன வஞ்சக யூதர்கள் நபியவர்களிடம் “இங்கு அமருங்கள்! நீங்கள் வந்த தேவையை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” என்றனர். இவர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்து நபியவர்கள் அவர்களின் வீட்டுச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர், உமர், அலீ (ரழி) மற்றும் சில தோழர்களும் இருந்தனர்.

யூதர்கள் தங்களுக்குள் தனிமையில் சந்தித்தனர். அவர்கள் மீது விதிக்கப்பட்ட கேட்டை ஷைத்தான் அவர்களுக்க அலங்கரித்து அதை செய்யத் தூண்டினான். எனவே, அவர்கள் நபியவர்களை கொன்றுவிட சதித்திட்டம் தீட்டினர். திருகைக் கல்லை எடுத்து வீட்டுக் கூரைக்கு மேல் ஏறி முஹம்மதின் தலை மீது போட்டு தலையை நசுக்கி கொன்றுவிடலாம் என் ஒருவன் ஆலோசனைக் கூறினான். அதை அனைவரும் ஆமோதித்தனர். இதைச் செய்ய வழிகேடன் அம்ர் இப்னு ஜஹாஷ் என்ற விஷமி ஆயத்தமானான். ஆனால் ஸலாம் இப்னு மிஷ்கம் என்பவர் “அவ்வாறு செய்ய வேண்டாம்” என்று அவர்களைத் தடுத்தார். மேலும் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் தீட்டும் திட்டம் அவருக்கு அறிவிக்கப்பட்டு விடும். அது நமக்கும் அவருக்குமிடையில் உள்ள உடன்படிக்கையை முறிப்பதாகி விடும்” என்று எச்சரித்தார். எனினும், தங்களது சதிதிட்டத்தை நிறைவேற்றுவதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

அவர்களின் இந்தச் சதித்திட்டத்தை அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அறிவித்தார். உடனடியாக அங்கிருந்து எழுந்து நபியவர்களும் அவர்களது தோழர்களும் மதீனா வந்தடைந்தனர். “நபியே! நீங்கள் எழுந்தது எதற்காக என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவில்லையே” என வினவினார்கள். நபியவர்கள் யூதர்கள் செய்த சதியைத் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.

இச்சம்பவத்திற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் தனது தோழர் முஹம்மது இப்னு மஸ்லமாவை நழீர் இனத்தவரிடம் அனுப்பி, “மதீனாவிலிருந்து வெளியேறிவிடுங்கள்; எங்களுடன் மதீனாவில் நீங்கள் தங்கக் கூடாது; இனி மதீனாவில் வசிக்கக் கூடாது; பத்து நாட்கள் மட்டும் நான் உங்களுக்கு அவகாசம் தருகிறேன்; அதற்கு மேலும் யாராவது மதீனாவில் தங்கியிருந்தால் அவரது கழுத்தை வெட்டி விடுவேன்” என்று கூறும்படி சொன்னார்கள்.