பக்கம் - 325 -
நபி (ஸல்) அவர்கள் 30 தோழர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். யூதர்களும் தங்களது 30 பாதிரிகளுடன் வந்தனர். இரு குழுக்களும் ஒரு திறந்த வெளி மைதானத்திற்கு வந்தவுடன் யூதர்கள் தங்களுக்குள், “இப்போது எப்படி இவரை (முஹம்மதை) நாம் கொல்ல முடியும். இவரைச் சுற்றி 30 தோழர்கள் உள்ளனர். அந்த தோழர்கள் இவருக்காக தங்களது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிந்தவர்களாயிற்றே! எனவே, நாம் இப்போது நமது திட்டத்தை நிறைவேற்றுவது சரியன்று” என்று யோசித்தனர். ஒரு வழியாக வேறு முடிவெடுத்து திரும்ப நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நாம் இப்போது 60 நபர்களாக இருக்கும் போது நீங்கள் கூறுவதை எங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் கூறுவதையும் உங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. எனவே, மூன்று தோழர்களை மட்டும் அழைத்துக் கொண்டு வாருங்கள். நாங்களும் மூன்று அறிஞர்களை மட்டும் அழைத்து வருகிறோம். அந்த அறிஞர்கள் நீங்கள் கூறுபவற்றை கேட்பார்கள். அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டால் நாங்களும் உங்கள் மீது நம்பிக்கை கொள்வோம். உங்களை உண்மையாளர் என்று ஏற்றுக் கொள்வோம்” என்றனர்.

இதற்கும் நபி (ஸல்) அவர்கள் இணங்கி மூன்று தோழர்களை மட்டும் அழைத்துக் கொண்டு சந்திக்கப் புறப்பட்டார்கள். யூதர்கள் தங்களுடன் வீச்சரிவாளை எடுத்துக் கொண்டு நபியவர்களைத் திடீரென பாய்ந்து கொன்றுவிட வேண்டும் என்ற முடிவில் வந்தனர். ஆனால், நழீர் கோத்திரத்தில் உள்ள ஒரு பெண் முஸ்லிமான தன் உறவினர் ஒருவருக்கு சதித்திட்டத்தைப் பற்றி அறிவித்தார். அவர் நபியவர்கள் அங்கு செல்வதற்கு முன் அவர்களைச் சந்தித்து செய்தியைக் கூறினார். இதைக் கேட்டவுடன் நபியவர்கள் போகாமல் பாதி வழியிலேயே திரும்பிவிட்டார்கள்.

அதற்கடுத்த நாள் நபி (ஸல்) அவர்கள் படையுடன் யூதர்களை முற்றுகையிட்டார்கள். அப்போது அவர்களிடம் “நீங்கள் எனக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்காத வரை உங்களுக்கு என்னிடம் எவ்வித பாதுகாப்பும் நிச்சயம் இல்லை” என்று கூறினார்கள். ஆனால், நழீர் யூதர்கள் அதற்கு ஒத்துவரவில்லை. ஆகவே, நபியவர்களும் முஸ்லிம்களும் அன்றைய தினம் அவர்களுடன் போர் புரிந்தனர். பின்பு இரண்டாம் நாள் அவர்களுடன் போர் செய்யாமல் அவர்களை அவர்களின் நிலைமையிலேயே விட்டு அவர்களுக்கருகில் உள்ள குரைளா யூதர்களிடம் நபி (ஸல்) படையுடன் சென்று அவர்களிடம் “நீஙகள் எனக்கு ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொடுத்தால் நான் உங்களுடன் போர் செய்ய மாட்டேன்” என்றார்கள். குரைளா யூதர்களும் அதற்கு இணங்கி நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்.

பின்பு நபி (ஸல்) மீண்டும் நழீர் இனத்தவரிடம் சென்று அவர்களுடன் சண்டையிட்டார்கள். அவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் இறுதியாக நபியவர்களிடம் சரணடைந்ததனர். அதாவது “மதீனாவைவிட்டு வெளியேற வேண்டும் ஆயுதங்களைத் தவிர மற்ற பொருட்களை ஒட்டகம் சுமக்கும் அளவிற்கு எடுத்துச் செல்லலாம்” என்ற நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு போரை முடித்துக் கொண்டனர். பின்பு தங்களின் வீடுகளை நாசப்படுத்தினர். அதை இடித்துத் தள்ளி அதிலிருந்த மரப்பலகைகளையும் எடுத்துக் கொண்டனர். இதுதான் முதன்முறையாக யூதர்களை நாடுகடத்திய சம்பவமாகும். இவர்களை மதீனாவிலிருந்து ஷாம் தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டது. (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக், ஸுனன் அபூதாவது)