பக்கம் - 342 -
நபி (ஸல்) அவர்கள் இந்தக் கடுமையான குளிர் நிறைந்த இரவில் தோழர் ஹுதைஃபாவை எதிரிகளின் செய்திகளைத் தெரிந்து வர அனுப்பினார்கள். எதிரிகள் மக்கா திரும்ப ஆயத்தமாகி இருந்தனர். இச்செய்தியை நபியவர்களிடம் ஹுதைஃபா (ரழி) கூறினார். அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் காலை விடிவதற்குள் தங்களின் இடங்களைக் காலி செய்து கொண்டு ஓடி விட்டனர். அவர்கள் இப்போரின் மூலம் தாங்கள் விரும்பிய எந்த நோக்கத்தையும் அடைய முடியவில்லை. அல்லாஹ் நபியவர்களைப் பாதுகாத்தான். அவனது வாக்கை உண்மைப் படுத்தினான். தனது இஸ்லாமியப் படைக்குக் கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி ராணுவங்களை அவனே தோற்கடித்தான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.

இந்த அகழ் யுத்தம் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதம் நடைபெற்றது. இதுவே மிகச் சரியான கூற்றாகும். எதிரிகள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் முற்றுகையிட்ட காலம் ஏறக்குறைய ஒரு மாதமாகும். பல மூலநூல்களின் கருத்துகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது இப்போர் ஷவ்வால் மாதம் தொடங்கி துல்கஅதா மாதத்தில் முடிவுற்றது எனத் தெரிய வருகிறது. அறிஞர் இப்னு ஸஅது, “நபியவர்கள் அகழ் போர் முடிந்து துல்கஅதா பிறை 23 புதன்கிழமை மதீனா திரும்பினார்கள்” என்று கூறுகிறார்:

இந்த அகழ்ப்போல் பெரும் நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதில் கடுமையான மோதலும், சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போராக விளங்குகிறது. இப்போரின் இறுதியில் இணைவைப்பவர்கள் நிராசையாகி, தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விட்டனர். இணைவைப்பவர்கள் எவ்வளவு பெரிய பலமுல்ல ராணுவங்களை ஒன்று திரட்டி மதீனாவில் வளர்ந்து வரும் இந்த சிறிய இஸ்லாமிய ராணுவத்தை அழித்துவிட முயன்றாலும் அது ஒருக்காலும் முடியாது என்பது இப்போரிலிருருந்து நன்கு தெரியவந்தது. இம்முறை இப்போருக்கு அரபிகள் ஒன்றுதிரட்டி வந்த படைகளைப் போல் இனி ஒருக்காலும் அவர்களால் ஒன்று திரட்டிவர முடியாது. ஆகவேதான் எதிரிகளை அல்லாஹ் வெளியேற்றிய பின் “இனிமேல் நாமே அவர்கள் மீது போர் தொடுப்போம். அவர்கள் நம்மீது போர் தொடுக்க முடியாது. நாமே அவர்களிடம் செல்வோம்” என்று நபி (ஸல்) அவர்கள் “கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)