பக்கம் - 359 -
மேலும், இவனும் இவனது தோழர்களும் அகழ் போரில் இறைநம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பல குழப்பங்களையும், திடுக்கங்களையும், சஞ்சலங்களையும் ஏற்படுத்தினர். இதைப் பற்றி அத்தியாயம் அஹ்ஸாபில் 12லிருந்து 20 வரையிலுள்ள வசனங்களில் அல்லாஹ் தெளிவாக கூறுகின்றான்.

இஸ்லாமின் எதிரிகளான யூதர்கள், நயவஞ்சகர்கள், இணைவைப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் இஸ்லாமின் வெற்றிக்கு என்ன காரணமென்பது நன்கு தெரிந்திருந்தது. அதாவது, இஸ்லாமின் வெற்றி பொருளாதாரப் பெருக்கத்தினாலோ, ஆயுதங்கள், படைகள் மற்றும் போர் சாதனங்கள் ஆகியவை அதிகமாக இருந்ததினாலோ அல்ல. மாறாக, இஸ்லாமியச் சமுதாயத்திடமும் மற்றும் இஸ்லாமில் இணைந்த ஒவ்வொருவரிடமும் இருக்கும் உயர்ந்த பண்புகளும், நற்குணங்களும், முன்மாதிரியான தன்மைகளும்தான் இஸ்லாமின் வெற்றிக்குக் காரணமாக இருக்கின்றன என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்துடன் இந்த அனைத்து தன்மைகளுக்கும் காரணமாகவும் ஊற்றாகவும் விளங்கக்கூடியவர் நபி (ஸல்) அவர்கள்தான் என்பதும் இவர்களுக்குத் தெரியும். அதுபோன்றே இந்த மார்க்கத்தை ஆயுதங்களாலும் ஆற்றலாலும் அழிக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டதால் நேரடிப் போருக்குத் துணிவின்றி மறைமுகச் சூழ்ச்சிப் போருக்கு வித்திட்டனர். இம்மார்க்கத்தின் பண்பாடு மற்றும் கலாச்சார ரீதியாக இம்மார்க்கத்திற்கு எதிராகப் பொய் பிரச்சாரங்களை பரப்ப வேண்டும் இந்த பொய் பிரச்சாரத்திற்கு முதல் இலக்காக நபி (ஸல்) அவர்களை ஆக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். முஸ்லிம்களின் அணியில் நயவஞ்சகர்களும் கலந்திருந்ததுடன் அந்த நயவஞ்சகர்கள் மதீனாவாசிகளாகவும் இருந்ததால் முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிட்டு விளையாடுவது எதிரிகளுக்குச் சாத்தியமாக இருந்தது. எனவே, இந்தப் பொய் பிரச்சாரத்தைப் பரப்புவதற்குரிய பொறுப்பை நயவஞ்சகர்களே ஏற்றுக் கொண்டனர். இதில் இவர்களின் தலைவனாக இருந்த இப்னு உபை முக்கியப் பங்கு வகித்தான்.

இவர்களது இந்தத் திட்டம் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது. அதாவது, நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் ஜைதுப்னு ஹாரிஸா (ரழி) தன் மனைவி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களைத் தலாக் விட்டதற்குப் பின் அவரை நபி (ஸல்) திருமணம் செய்து கொண்டார்கள். அரபுகள் தங்களின் கலாச்சாரப்படி வளர்ப்பு மகனைப் பெற்ற மகனைப் போல் கருதினர். மகனின் மனைவியைத் தலாக்கிற்குப் பின் தந்தை மணம் முடிப்பது எவ்வாறு குற்றமான செயலாக கருதப்பட்டு வந்ததோ அதேபோல் வளர்ப்பு மகனின் மனைவியையும் வளர்ப்புத் தந்தை திருமணம் முடிப்பதை குற்றமாகவே கருதினர். ஆகவே, நபி (ஸல்) ஜைனபை திருமணம் முடித்துக் கொண்டதும் நயவஞ்சகர்கள் நபியவர்களுக்கெதிராக சர்ச்சையைக் கிளப்புவதற்கு இரண்டு வழிகளைக் கையாண்டனர்.

முதலாவது: நபி (ஸல்) அவர்களின் இத்திருமணம் ஐந்தாவது திருமணமாக இருந்தது. குர்ஆன் நான்கு பெண்களை மட்டும் திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்று அனுமதித்திருக்க நபி (ஸல்) எப்படி ஐந்தாவது திருமணம் செய்தார்கள்?

இரண்டாவது: ஜைனப் (ரழி) நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனின் மனைவியாக இருந்தார். எனவே அரபுகளின் கலாச்சாரப்படி ஜைனபைத் திருமணம் முடித்தது மாபெரும் குற்றமாகும்.