பக்கம் - 361 -
1) நயவஞ்சகர்களின் கூற்று:

நாம் மதீனாவிற்குத் திரும்பினால் இழிவானவர்களைக் கண்ணியமானவர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் போர் முடித்துத் திரும்பும் போது ‘உரைஸிஃ’ என்ற இடத்தில் தங்கியிருந்தார்கள். அப்போது தண்ணீர் நிரப்பிக் கொள்ளும் ஓர் இடத்தில் முஹாஜிர்களில் ஜஹ்ஜாஹ் அல் கிஃபா என்பவரும், அன்சாரிகளில் கினான் இப்னு வபர் அல் ஜுஹ்னி என்பவரும் சண்டை செய்து கொண்டனர். அப்போது ஜுஹ்னி “அன்சாரிகளின் கூட்டமே! உதவிக்கு வாருங்கள்” என்றார். ஜஹ்ஜாஹ் “முஹாஜிர்களின் கூட்டமே! உதவிக்கு வாருங்கள்” என்றார். இக்கூச்சலைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போது இவ்வாறு அறியாமைக்கால வார்த்தைகளையா பயன்படுத்துகிறீர்கள்? இதை விட்டு விடுங்கள். அது மிக அசுத்தமானது!” என்று எச்சரித்தார்கள்.

இந்தச் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூலுக்கு எட்டியது. இதனால் அவன் கோபமடைந்தான். அவனுடன் அவனது இனத்தவரில் சிலர் இருந்தனர். அவர்களில் மிகச் சிறிய வயதுடைய ஜைதுப்னு அர்கம் என்பவரும் இருந்தார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை “இப்படியா அவர்கள் செய்தார்கள்! நமக்கு வெறுப்பூட்டி விட்டார்கள். நமது ஊருக்கு வந்த வந்தேறிகள் நம்மையே மிகைத்து விட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நமக்கும் அவர்களுக்குமுள்ள உதாரணம்: ‘உனது நாயை நல்ல கொழுக்க வளர்ப்பாயாக! அது இறுதியில் உன்னையே தின்றுவிடும்’ (வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது) என்பதுதான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியமானவர்கள் இழிவானவர்களை அங்கிருந்து வெளியேற்றியே ஆக வேண்டும்” என்று கூறினான். மேலும், தனக்கு முன் இருந்தவர்களை (அன்சாரிகளை) நோக்கி, “பார்த்தீர்களா! இது நீங்கள் உங்களுக்கே தேடிக் கொண்டது. அவர்களை உங்கள் ஊரில் தங்க வைத்து உங்களது பொருட்களை பங்கு வைத்துக் கொடுத்தீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்” என்று கூறினான்.

ஜைது இப்னு அர்கம் தனது தந்தையின் சகோதரரிடம் இச்செய்தியைக் கூற, அவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அங்கு உமரும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இதைக் கேட்ட உமர் (ரழி) அவர்கள் “நபியே! அப்பாத் இப்னு பிஷ்ருக்குக் கட்டளையிடுங்கள். அவர் அவனைக் கொன்று விடட்டும்” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உமரே! அப்படி எவ்வாறு செய்ய முடியும்? முஹம்மது தமது தோழர்களைக் கொல்கிறார் என்று மக்கள் பேசுவார்கள். எனவே, அவ்வாறு செய்யக் கூடாது. நீர் அனைவரையும் இங்கிருந்து புறப்படுவதற்கு அறிவிப்புச் செய்!” என்று கூறினார்கள்.

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் பயணிக்க மாட்டார்கள். மக்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க பயணத்தைத் தொடங்கினர். அப்போது உஸைது இப்னு ஹுழைர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து வாழ்த்துக் கூறி, “நபியே! நீங்கள் வழக்கத்துக்கு மாற்றமான நேரத்தில் பயணிக்கிறீர்களே!” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “இப்னு உபை கூறிய செய்தி உமக்கு தெரியாதா?” என்று கேட்டார்கள். அதற்கு உஸைது (ரழி), “அவன் என்ன கூறினான்?” என்று கேட்டார். “அவன் மதீனாவிற்குத் திரும்பினால் அதிலுள்ள கண்ணியவான்கள் இழிவானவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.