பக்கம் - 38 -
ஸாபியிய்யா: இது நட்சத்திரங்களை வணங்கும் மதம். அதாவது, கோள்களும் நட்சத்திரங்களும் தான் இவ்வுலகை இயக்கி வருகின்றன என்று நம்பிக்கை கொள்ளும் மதமாகும். இராக் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியும், தொல்பொருள் ஆராய்ச்சியும் இது இப்றாஹீம் (அலை) அவர்களின் கல்தானி இனத்தவர் மதமாக இருந்தது என தெவிக்கின்றன. முற்காலத்தில் ஷாம் மற்றும் யமன் நாடுகளில் அதிகமானவர்கள் இம்மதத்தையே பின்பற்றினர். எனினும், யூத மற்றும் கிறிஸ்துவ மதங்கள் தோன்றி வலிமை பெற்றபோது ஸாபியிய்யா மதத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்து, அதன் வளர்ச்சி பெரிதும் குன்றியது. எஞ்சியிருந்த இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் மஜூஸிகளுடன் கலந்து வாழ்ந்தனர். அல்லது அரபிய வளைகுடா பகுதிகளிலும் இராக்கிலும் வாழ்ந்து வந்தனர். யமன் நாட்டிலுள்ள ஹீரா பகுதியின் வழியாக இம்மதத்தை பின்பற்றியவர்களின் கலாச்சாரம் அரபியர்களிடமும் பரவியது. அவ்வாறே பாரசீகர்களுடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் மதக் கலாச்சாரம் குறைஷியர்களில் சிலரிடமும் காணப்பட்டது.

சமயங்களின் நிலைமைகள்

இஸ்லாமியப் பேரொளி பிரகாசிக்கத் தொடங்கியபோது இம்மதங்களையே அரபியர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இம்மதங்கள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. ‘நாங்களே நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தில் நிலைத்திருக்கிறோம்’ என வாய்ப்பந்தல் கட்டியிருந்த முஷ்ரிக்குகள் உண்மையில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கச் சட்ட ஏவல்களையும் விலக்கல்களையும் பின்பற்றுவதிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தனர். அவர்கள் கற்றுத் தந்த நற்பண்புகளை முழுதும் புறக்கணித்து வாழ்ந்தனர். அவர்களிடையே குற்றங்கள் மலிந்து, சிலை வணங்கிகளிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளும் வழிகேடுகளும் கால ஓட்டத்தில் அவர்களின் மதச் சடங்குகளாக மாறின. இச்சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் அவர்களது சமய, சமூக, அரசியல் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.

யூத மதம் முற்றிலும் முகஸ்துதியாகவும், சர்வாதிகாரமாகவும் மாறியிருந்தது. அம்மதத் துறவிகளும் அதன் தலைவர்களும் கடவுளர்களாக விளங்கினர். மார்க்க சட்டங்கள் என்ற பெயரால் வாழ்க்கையை நெருக்கடியாக்கி தங்கள் விருப்பத்திற்கேற்ப மக்களைக் கசக்கிப் பிழிந்தனர். மக்களிடையே இறை நிராகரிப்பும், சமூகச் சீர்கேடுகளும் பரவிக் கிடந்தாலும், நேரிய மார்க்கம் சிதைக்கப்பட்டு சீர்கெட்டிருந்தாலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் செல்வங்களை சேகரிப்பதிலுமே கவனம் செலுத்தினார்கள். எத்தகைய உயர் போதனைகளைக் கற்று அதனைப் பின்பற்றி வாழ வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டிருந்தானோ அவையனைத்திற்கும் சமாதி கட்டினர்.

கிறிஸ்துவ மதம் சிலைவணங்கும் மதமாக மாறியது. அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்குமிடையே புதுமையானதொரு கலப்படத்தை கிறிஸ்துவ மதம் போதித்தது. அந்த மதத்தைப் பின்பற்றிய அரபியிடம் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அதன் போதனைகள் வாழ்க்கை நெறிக்கு ஏற்றதாக இருக்கவில்லை. அம்மக்களுக்கு அதிலிருந்து விலகுவதும் சிரமமாக இருந்தது.

அரபியர்களின் ஏனைய மதக்கோட்பாடுகள் சிலைவணங்கிகளின் மதக்கோட்பாடுகளுக்கு ஒத்திருந்தன. அவர்களின் இதயங்கள், கொள்கைகள், மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கூட ஒன்றுபட்டிருந்தன.