பக்கம் - 39 -

இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

சமுதாய அமைப்பு

அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி போர் செய்யவும் அவர்கள் துணிந்திருந்தனர்.

ஓர் ஆண் தனது கொடைத்தன்மை, வீரம், வலிமையைக் கூறி தன்னைப் புகழ்ந்துக்கொள்ள நினைக்கும்போது தனது கவிதைகளில் பெண்ணை விளித்து பேசுவது போல பேசுவார். சில சந்தர்ப்பங்களில் பெண் விரும்பினால் தங்களது குலத்தாரிடையே காணப்படும் பிளவுகளை சரிசெய்து அமைதி நிலவச் செய்திடுவாள். அவள் நினைத்தால் மக்களிடையே போர் நெருப்பை மூட்டிவிடுவாள். எனினும், எவ்விதக் கருத்து வேறுபாடுமின்றி ஆண் குடும்பத் தலைவனாக விளங்கினான். அவனே முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தான். அவர்களிடையே ஆண், பெண் தொடர்பு என்பது அப்பெண்களுடைய காப்பாளர்களின் அனுமதி பெற்று திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டது. தங்கள் குடும்ப ஆண்களை மீறி செயல்பட, பெண்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தார்கள்.

ஆனால், கீழ்மட்ட மக்களிடத்தில் ஆண், பெண் இணைந்து வாழ்வதற்கு பல்வேறு நடைமுறைகள் காணப்பட்டன. அவை அனைத்தும் வெட்கமற்ற இழிவான ஈனத்தனமான பழக்க வழக்கங்களாகவே இருந்தன. இது குறித்து அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:

திருமணங்கள் அறியாமைக் காலத்தில் நான்கு வகைகளாக இருந்தன.

முதல் வகை: இன்று மக்களிடையே நடைமுறையிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

இரண்டாம் வகை: ஒருவர் தம் மனைவியிடம் “நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன் இன்ன நபருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்!” என்று கூறி அனுப்பி விடுவார். அதன்பின் அந்த மனிதர் மூலம் கர்ப்பமானது தெரியும்வரை அவர் தன் மனைவியுடன் சேராமல் விலகி இருப்பார். அந்த மனிதர் மூலம் அவள் கர்ப்பமாகி விட்டாளெனத் தெரியவந்தால் தன் விருப்பத்திற்கேற்ப கணவர் அவளுடன் சேர்ந்து கொள்வார். திடகாத்திரமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலேயே இவ்வாறு செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ழாவு’ என்று அரபியில் பெயர் கூறப்படும்.

மூன்றாம் வகை: பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணுடன் உறவு கொள்வார்கள். அவள் கர்ப்பமாகி குழந்தை பிரசவித்த சில நாட்களுக்குப் பின் அவர்கள் அனைவரையும் தன்னிடம் வரச் சொல்வாள். அவர்கள் அனைவரும் எவ்வித மறுப்புமின்றி அவளிடம் ஒன்று கூடுவார்கள். அவர்களிடம் அவள்: “நீங்கள் செய்தது உங்களுக்குத் தெரிந்ததே! (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்து விட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) “இது உன் குழந்தையே” என தான் விரும்பியவன் பெயரைக் குறிப்பிடுவாள். அக்குழந்தை அந்த நபரிடம் ஒப்படைக்கப்படும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.