பக்கம் - 390 -
இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு நபியவர்கள் ஹாதிப் இப்னு அபூ பல்தஆவை தேர்வு செய்தார்கள். ஹாதிப் (ரழி) அங்கு சென்றவுடன் அம்மன்னரைப் பார்த்து இவ்வாறு கூறினார்: “நிச்சயமாக உமக்கு முன் தன்னை மிக உயர்ந்த இறைவன் என்று சொல்லி வந்த ஒருவன் இங்கு இருந்தான். அல்லாஹ் அவனை நிரந்தரத் தண்டனையைக் கொண்டு தண்டித்தான். அல்லாஹ் அவனைக் கொண்டு பிறரையும், பின்பு அவனையும் தண்டித்தான். எனவே, நீ பிறரைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள். பிறர் உன்னைக் கொண்டு படிப்பினை பெறும்படி நடந்து கொள்ளாதே!”

இதைக் கேட்ட முகவ்கிஸ் “நிச்சயமாக எங்களுக்கென்று ஒரு மார்க்கம் இருக்கிறது. நாங்கள் அம்மார்க்கத்தை விடமாட்டோம். ஆனால், அதைவிட சிறந்த ஒரு மார்க்கம் கிடைத்தால் விட்டு விடுவோம்” என்று கூறினார். அப்போது ஹாதிப் (ரழி) அதற்கு பின்வரும் பதிலை கூறினார்:

நாங்கள் உம்மை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறோம். இதைத் தவிர மற்ற மார்க்கங்களின் தேவை இனி அறவே இருக்காது. இதுவே அனைத்திற்கும் போதுமான, பரிபூரணமான மார்க்கமாகும். நிச்சயமாக இந்த நபி மக்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். அம்மக்களில் குறைஷிகள் அவருடன் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். யூதர்கள் அவரைப் பகைத்தனர். கிறிஸ்துவர்கள் அவருடன் நட்பு கொண்டனர்.

சத்தியமிட்டுக் கூறுகிறேன்! நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி நபி மூஸா (அலை) அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். அவ்வாறே நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி நபி ஈஸா (அலை) அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். உம்மை நாங்கள் குர்ஆனின் பக்கம் அழைப்பது நீங்கள் தவ்றாத் வேதமுடையவர்களை இன்ஜீலின் பக்கம் அழைப்பதைப் போன்றுதான். ஒவ்வொரு நபி அனுப்பப்படும் போதும் அவரது காலத்திலுள்ள மக்களெல்லாம் அந்த நபியின் சமுதாயமாகக் கருதப்படுவார்கள். எனவே, அம்மக்கள் அந்த நபிக்கு கீழ்ப்படிந்து நடப்பது கடமையாகும். நீங்கள் இந்த நபி அனுப்பப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். (எனவே நீர் அவரை பின்பற்றியாக வேண்டும்) ஈஸாவின் மார்க்கத்தைப் பின்பற்றுவதிலிருந்து நாங்கள் உம்மைத் தடுக்கவில்லை. மாறாக, நாங்களும் உமக்கு அதைத்தான் ஏவுகிறோம்.”

இந்தப் பதிலைக் கேட்ட முகவ்கிஸ், “இந்த நபியின் விஷயத்தில் நான் சிந்தித்து விட்டேன். அவர் வெறுப்பானவற்றை ஏவவில்லை, அல்லது விருப்பமான ஒன்றை தடுக்கவுமில்லை. வழிகெட்ட சூனியக்காரராகவோ, பொய் சொல்லும் குறிகாரராகவோ நான் அவரைக் கருதவில்லை. மறைவாக பேசப்படும் இரகசியங்களை வெளிப்படுத்தும் நபித்துவத்தின் அடையாளம் அவரிடம் இருக்கக் கண்டேன். இருந்தாலும் நான் மேலும் யோசித்துக் கொள்கிறேன்” என்று ஹாத்திபுக்கு பதில் கூறினார். பின்பு, நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை யானை தந்தத்தில் வைத்து மூடி முத்திரையிட்டு தனது அடிமை பெண்களிடம் கொடுத்து பாதுகாத்து வைக்கச் சொன்னார். பின்பு அரபியில் எழுதும் தனது எழுத்தாளரை அழைத்து நபியவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதுமாறு கூறினார்.

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் எழுதுகிறேன். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுக்கு கிப்திகளின் அரசர் முகவ்கிஸ் எழுதுவது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டுமாக! நான் உங்களது கடிதத்தைப் படித்தேன். அதில் நீங்கள் கூறியிருப்பதையும், நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீரோ அதையும் நான் புரிந்து கொண்டேன். ஒரு நபி மீதமிருக்கிறார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர் ஷாம் தேசத்திலிருந்து வருவார் என்றுதான் எண்ணியிருந்தேன். நான் உங்களது தூதரைக் கண்ணியப்படுத்தினேன். மதிப்பும் மரியாதையுமிக்க இரண்டு அடிமைப் பெண்களையும் சில ஆடைகளையும் நான் உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நீங்கள் வாகனிப்பதற்காக ஒரு கோவேறு கழுதையையும் அன்பளிப்பாக அளிக்கிறேன். உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக.”