பக்கம் - 401 -
அப்து: அம்ரே! இலைதழைகளைத் தின்று தண்ணீரைக் குடித்து வாழும் எங்களது கால்நடைகளிலுமா (தர்மம்) ஏழைவரி வசூலிக்கப்படும்?

அம்ர்: ஆம்! அவ்வாறுதான்.

அப்து: எனது கூட்டத்தினர் உங்களை விட்டும் தூரமாக இருக்கிறார்கள். அவர்களிடம் படைபலமும் அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் இதற்குக் கட்டுப்படுவார்கள் என்று நான் எண்ணவில்லை.

அம்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் அப்துடைய வீட்டில் இவ்வாறு பல நாட்கள் தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாளும் அவர் தனது சகோதரரிடம் சென்று என்னிடம் கேட்ட செய்தியைக் கூறுவார். பின்பு ஒரு நாள் அப்தின் சகோதரர் என்னை அழைக்க நான் அவரிடம் சென்றேன். அவரது பணியாட்கள் எனது புஜத்தைப் பிடித்தவர்களாக நின்றனர். “அவரை விட்டு விடுங்கள்” என்று அவர் கூற, அவர்கள் என்னை விட்டு விட்டனர். அங்கிருந்த இருக்கையில் அமரச் சென்ற போது அந்தப் பணியாட்கள் என்னை உட்கார விடாமல் தடுத்தனர். சரிஎன, நான் அப்தை நோக்கினேன். அவர் என்னிடம் “உமது தேவை என்னவென்று சொல்” என்றார்.

நான் அப்தின் சகோதரரிடம் முத்திரையிடப்பட்ட கடிதத்தைக் கொடுத்தேன். அதை வாங்கி முத்திரையைப் பிரித்து இறுதி வரை படித்தார். பின்பு தனது சகோதரரிடம் கொடுக்கவே அவரும் அவ்வாறே படித்துப் பார்த்தார். ஆனால், அவரை விட அவன் சகோதரர் அப்துதான் மிகவும் இரக்கமுள்ளவராக இருந்தார்.

பின்பு அப்தின் சகோதரர் என்னிடம் “குறைஷிகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று என்னிடம் சொல்ல மாட்டாயா?” என்றார். அதற்கு நான் “குறைஷிகள் அவரைப் பின்பற்றி விட்டனர். மார்க்கத்தில் ஆசையுடன் சிலர் அவரை ஏற்றுக் கொண்டனர். எதிர்த்தவர்கள் வாளினால் அடக்கப்பட்டனர்” என்றேன். அதற்கவர் “அவருடன் யார் இருக்கிறார்கள்?” என்றார். அப்போது நான் மக்களெல்லாம் இஸ்லாமை விரும்பியே ஏற்றிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த நேர்வழியாலும், பகுத்தறிவாலுமே இதுவரை தாங்கள் வழிகேட்டில்தான் இருந்து வந்ததை அறிந்து கொண்டனர்.

“இப்போதுள்ள இந்தச் சிரமமான நிலையில் உன்னைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீர் இன்று இஸ்லாமை ஏற்று அவரைப் பின்பற்றவில்லை என்றால் நபி (ஸல்) அவர்களின் வீரர்கள் நாளை ஒரு நாள் உன்னிடம் வந்து சேருவார்கள். உமது ஆட்சியெல்லாம் அழியத்தான் போகிறது. எனவே, நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்! ஈடேற்றம் அடைவாய்! நபி (ஸல்) உனது கூட்டத்தினருக்கு உன்னையே ஆளுநராக நியமிப்பார்கள். குதிரைகளும் வீரர்களும் உம்மிடம் வரமாட்டார்கள்” என்று கூறினேன். அப்போது அவர் “என்னை இன்று விட்டுவிடு நாளை என்னிடம் திரும்ப வா” என்றார்.

இதற்குப் பின் நான் அப்திடம் சென்றேன். அவர் “அம்ரே! எனது சகோதரருக்கு ஆட்சி மோகம் இல்லையென்றால் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்வார் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார். மறுநாள் நான் அப்தின் சகோதரரிடம் சென்றேன். ஆனால், அவர் எனக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டார். எனவே, நான் திரும்ப அப்திடம் வந்து “என்னால் உனது சகோதரரிடம் செல்ல முடியவில்லை” என்றேன். அவர் என்னை அவன் சகோதரரிடம் நேரடியாக அனுப்பி வைத்தார்.