பக்கம் - 403 -


தூகரத் (அ) காபா போர்

நபி (ஸல்) அவர்களின் சினையுள்ள ஒட்டகங்களை ஃபஸாரா கிளையினர் கொள்ளை அடித்துச் சென்றனர். அவர்களை விரட்டிப் பிடிப்பதற்காக நபி (ஸல்) புறப்பட்டார்கள்.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு நடந்த ஹுதைபிய்யா ஒப்பந்தம், மேலும் ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு நடந்த கைபர் போர் ஆகிய இரண்டிற்குமிடையில் நடந்த சம்பவம்தான் இந்த ‘தூகரத்’ என்பது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இப்போரைப் பற்றிக் குறிப்பிடும் போது “கைபர் போருக்கு மூன்று மாதங்களுக்கு முன் இது நடைபெற்றது” என்று குறிப்பிடுகிறார்கள். இமாம் முஸ்லிமும் (ரஹ்) ‘ஸலமா இப்னு அக்வா“வின் மூலம் அறிவிக்கும் ஹதீஸின் ஆதாரத்துடன் இவ்வாறே குறிப்பிடுகிறார்கள். ஆனால், அதிகமான வரலாற்றாசிரியர்கள், “இந்தப் போர் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்தது” என்று குறிப்பிடுகிறார்கள். அது சரியல்ல! மாறாக, இமாம் புகாரியும் இமாம் முஸ்லிமும் கூறியிருப்பதுதான் மிகவும் ஆதாரப்பூர்வமானது.

இப்போரின் முக்கிய வீரரான ஸலமா இப்னு அக்வா (ரழி) அவர்கள் இப்போரைப் பற்றி கூறுவதாவது: நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குச் சொந்தமான சினை ஒட்டகங்களை மேய்ப் பதற்காக அதன் மேய்ப்பாளருடன் தனது அடிமை ரபாஹாவையும் அனுப்பி வைத்தார்கள். அபூ தல்ஹாவின் குதிரையில் நானும் ரபாஹாவுடன் சென்றேன். மறுநாள் காலையில் ஃபஸாரா கிளையைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவன் அனைத்து ஒட்டகங்களையும் கொள்ளையடித்துக் கொண்டதுடன், அதனை மேய்த்துக் கொண்டிருந்தவரையும் கொன்று விட்டான்.

இதைப் பார்த்த நான் உடனே, “இந்தக் குதிரையை அபூ தல்ஹாவிடம் கொடுத்து விட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தியை அறிவித்து விடு” என்று ரபாஹாவிற்கு கூறினேன். பிறகு அங்கிருந்த ஒரு குன்றின் மீது ஏறி, மதீனாவை நோக்கி ‘யா ஸபாஹா“” என்று மூன்று முறை சப்தமிட்டேன். அதற்குப் பின் அங்கிருந்து கொள்ளையர்களை அம்பால் எறிந்து கொண்டே பின்தொடர்ந்தேன்.

“இந்தா வாங்கிக்கொள்! நான் அக்வயின் மைந்தன்.
இன்று தாய்ப் பால் குடித்தோர் நாள்
அல்லது அற்பர்கள் ஓடும் நாள்.”

என்ற பாடியவாறே அவர்களை நான் தாக்கினேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அம்பெறிந்து கொண்டே அவர்களை தப்பித்து முன்னேறுவதிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒரு வீரன் என்னை நோக்கி திரும்பி வந்ததால் நான் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டு அம்பெய்து அவனைக் காயப்படுத்துவேன். இதே நிலையில் அவர்கள் மலைகளுக்கிடையில் உள்ள ஒரு நெருக்கமான பாதையில் சென்றார்கள். நான் மலையின் மீது ஏறி அவர்களைக் கற்களால் எறிந்தேன். ஒட்டகங்களை ஒவ்வொன்றாக அனைத்தையும் அவர்கள் விட்டுவிட்டார்கள். மேலும், நான் அவர்களைக் கற்களால் எறிந்து கொண்டே பின்தொடர்ந்தேன். தங்களது சுமைகளின் பலுவை குறைப்பதற்காக முப்பதிற்கும் அதிகமான போர்வைகளையும் ஈட்டிகளையும் கீழே போட்டு விட்டு ஓடினார்கள்.