பக்கம் - 411 -
இதற்குப் பின் மர்ஹபின் சகோதரன் யாசிர் “என்னுடன் சண்டை செய்பவன் யார்?” என்று கொக்கரித்தவனாக படைக்கு முன் வந்தான். ஜுபைர் (ரழி) அவனை எதிர்க்கத் தயாரானார். அதைப் பார்த்த அன்னாரின் தாயார் ஸஃபியா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது மகனைக் கொன்று விடுவானே” என்று கலங்கினார். அதற்கு நபி (ஸல்) “இல்லை உமது மகன் தான் அவனைக் கொல்வார்” என்று கூறினார்கள். அவ்வாறே ஜுபைர் (ரழி) அவனைக் கொன்றார்கள். இவ்வாறு அன்று முழுவதும் நாயிம் கோட்டையைச் சுற்றிக் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. யூதர்களின் பல தலைவர்கள் கொல்லப்பட்டதால் அவர்களின் வீரம் குறைந்து துவண்டு விட்டனர். எனினும், போர் மிகக் கடுமையாக பல நாட்கள் நீடித்தது. இறுதியில் முஸ்லிம்களை எதிர்க்க முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொண்ட யூதர்கள் அந்தக் கோட்டையிலிருந்து இரகசியமாக வெளியேறி ‘ஸஅப்’ என்ற கோட்டையில் நுழைந்து கொண்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் நாயிம் கோட்டையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தார்கள்.

ஸஅப் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

நாயிம் கோட்டைக்கு அடுத்து இக்கோட்டை மிகவும் பலமுள்ளதாக, வலிமை மிக்கதாக இருந்தது. அல் ஹுபாப் இப்னு அல் முன்திர் அல் அன்ஸா (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் இக்கோட்டையை முஸ்லிம்கள் மூன்று நாட்கள் முற்றுகையிட்டனர். மூன்றாவது நாள் இக்கோட்டையை வெற்றி கொள்வதற்காக நபி (ஸல்) தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்தார்கள்.

இதைப் பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) விவரிக்கிறார்:

அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஸஹ்ம் கிளையினர் நபியவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மிகச் சிரமத்திற்குள்ளாகி விட்டோம். எங்களது கையில் ஒன்றுமே இல்லை” என்று முறையிட்டார்கள். அதாவது, தங்களது இயலாமையையும், பசியையும் இவ்வாறு நபியவர் களிடம் வெளிப்படுத்தினார்கள். இந்த கிளையினர்தான் கோட்டையை வெற்றி கொள்வதற்காக அனுப்பப்பட்ட படைகளில் முக்கியப் பங்காற்றினார்கள். அவர்களின் இந்த கோரிக்கைக்கிணங்க “அல்லாஹ்வே! நிச்சயமாக இவர்களின் நிலைமையை நீ நன்கு அறிந்திருக்கிறாய். அவர்களிடம் எவ்வித ஆற்றலும் இல்லையென்பதையும், அவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை என்பதையும் நீ நன்கறிந்திருக்கிறாய். எனவே, கைபரின் கோட்டைகளில் அதிக செல்வமும் உணவுப் பொருட்களும் நிறைந்த கோட்டையை வெற்றி கொள்ள இவர்களுக்கு உதவுவாயாக” என நபி (ஸல்) பிரார்த்தனை புரிந்தார்கள். நபியவர்களின் இப்பிரார்த்தனைக்குப் பின்பு முஸ்லிம்கள் அக்கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். கைபரிலுள்ள கோட்டைகளில் ‘ஸஅப்’ கோட்டையில்தான் அதிகச் செல்வங்களும் உணவுகளும் இருந்தன.

நபி (ஸல்) இக்கோட்டையின் மீது தாக்குதல் நடத்த முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி அழைத்துச் சென்றார்கள். இதில் அஸ்லம் கிளையினர், படைக்கு முதல் வரிசையில் இருந்தனர். கோட்டைக்கு வெளியில் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடுமையான தாக்குதல் மாலை வரை நீடித்தது. இறுதியாக, சூரியன் மறைவதற்கு சற்று முன் அக்கோட்டையை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர். அக்கோட்டையில் இருந்த மின்ஜசனீக்” கருவிகளையும், இக்கால பீரங்கி போன்ற கருவிகளையும் முஸ்லிம்கள் கைப்பற்றினர். இப்போரில் ஏற்பட்ட கடுமையான பசியின் காரணமாக படையில் இருந்த சில வீரர்கள் கழுதையை அறுத்து சமைப்பதற்கு அடுப்பை மூட்டினர். இதை அறிந்த நபி (ஸல்) “நாட்டுக் கழுதைகளை அறுக்க வேண்டாம்” என தடை விதித்தார்கள்.