பக்கம் - 415 -
கனீமத்தை பங்கு வைக்கப்படுதல்

நபி (ஸல்) யூதர்களைக் கைபரிலிருந்து வெளியேற்றி நாடு கடத்தத் திட்டமிட்டார்கள். ஆனால் அவர்கள், “முஹம்மதே எங்களை இப்பூமியில் தங்கவிடுங்கள் நாங்கள் இப்பூமியை சீர்படுத்து கிறோம் உங்களைவிட இந்த பூமியைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.” என்று கூறினார்கள். நபியவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் இப்பூமியைச் சீர்செய்வதற்கு அடிமைகள் யாரும் இல்லை. சீர் செய்வதற்கு ஓய்வோ அவகாசமோ இவர்களுக்கும் இல்லை. எனவே, விவசாயத்திலும் தோட்டங்களிலும் மகசூலில் ஒரு பகுதியைத் தர வேண்டும் என்ற நிபந்தனையிலும், நபி (ஸல்) கூறும் காலம் மட்டுமே இங்கு தங்கவேண்டும் என்ற நிபந்தனையிலும் கைபர் பூமியை நபி (ஸல்) யூதர்களிடம் கொடுத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) கைபருடைய விளைச்சல்களின் கண்காணிப்பாளராக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கைபர் பூமியை 36 பங்காகப் பிரித்தார்கள். பின்பு ஒவ்வொரு பங்கையும் 100 பங்காகப் பிரித்தார்கள். ஆக மொத்தம் 3600 பங்குகளாயின. அதிலிருந்து சமப்பாதி பங்கு நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகும். அதாவது 1800 பங்குககளில் மற்ற முஸ்லிம்களுக்குக் கிடைப்பதைப் போன்றே நபியவர்களுக்கும் ஒரு பங்கு என்று முடிவானது. மீதமுண்டான 1800 பங்குகளைப் பொதுவாக முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் நபி (ஸல்) தனியாக ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) இதை 1800 பங்குகளாக ஆக்கியிருந்ததற்குக் காரணம்: இந்த கைபரின் வெற்றி அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டவர்களுக்காக வழங்கப்பட்டதாகும். அவர்கள் இங்கு இருப்பினும் ச, இல்லை என்றாலும் ச. ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 1400 நபர்களாவர். இவர்களில் 200 பேர் குதிரை வீரர்கள். ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பங்குகள், குதிரை வீரருக்கு ஒரு பங்கு என மொத்தம் மூன்று பங்குகள் கொடுக்கப்பட்டன. அதாவது 600 பங்குகள் 200 குதிரை வீரர்களுக்கும், 1200 பங்குகள் 1200 காலாட்படை வீரர்களுக்கும் வழங்கப்பட்டன. (ஜாதுல் மஆது)

ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ள இப்னு உமரின் அறிவிப்பின் மூலம் கைபரில் அதிகம் கனீமத்து பொருட்கள் கிடைக்கப் பெற்றன என்று தெரிய வருகிறது.

இப்னு உமர் (ரழி) கூறினார்கள்: “கைபரை வெற்றி கொள்ளும் வரை நாங்கள் வயிறாற உண்டதில்லை. கைபர் வெற்றி கொள்ளப்பட்டதற்கு பிறகுதான் நாங்கள் வயிறாற பேரீத்தம் பழம் சாப்பிடுகிறோம்.” (ஸஹீஹுல் புகாரி)

முஹாஜிர்களுக்குக் கைபரில் பேரீத்த மரங்களும், சொத்துகளும் கிடைத்துவிட்டதால் மதீனா திரும்பியவுடன் அன்சாரிகள், முஹாஜிர்களுக்குக் கொடுத்திருந்த பேரீத்த மரங்களையெல்லாம் அவர்களிடமே நபியவர்கள் திரும்பக் கொடுத்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

ஜஅஃபர் மற்றும் அஷ்அரி கிளையினர் வருகை

இப்போர் முடிந்த பின்னர் ஜஅஃபர் (ரழி) அவர்களும், அபூமூஸா அல்அஷ்அரி (ரழி) அவர்களும் தங்கள் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

இதைப் பற்றி அபூமூஸா (ரழி) கூறுகிறார்கள்: “நாங்கள் யமனில் வசித்து வந்தோம். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த செய்தியை நாங்கள் அறிந்தோம். நானும் எனது சகோதரர்களும், 50க்கும் மேற்பட்ட எங்களது கூட்டத்தினரும் நபியவர்களைச் சந்திக்கப் புறப்பட்டோம். ஆனால், எங்களது கப்பல் திசைமாறி ‘ஹபஷா’ சென்று விட்டது. அங்கு நஜ்ஜாஷியிடம் ஜஅஃபர் (ரழி) அவர்களும் அவரது தோழர்களும் இருக்கக் கண்டோம். அவர் எங்களை இங்கு தங்குமாறு “நபி (ஸல்) அனுப்பி இருக்கிறார்கள். எனவே, நீங்களும் எங்களுடன் தங்குங்கள்” என்று கூறினார். நாங்களும் அவருடன் தங்கியிருந்தோம்.