பக்கம் - 42 -
சுருங்கக்கூறின் சமூக அமைப்பு தரங்கெட்டு உருக்குலைந்து இருந்தது. மூட நம்பிக்கைகள் மிகைத்திருந்தன. அறியாமை அவர்களை ஆட்டிப் படைத்தது. மனிதர்கள் கால்நடைகளாக வாழ்ந்தனர். பெண்கள் விற்பனைப் பொருளாக்கப்பட்டு ஜடமாகவே பாவிக்கப்பட்டனர். சமூகங்களுக்கிடையில் உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குடிமக்களைச் சுரண்டி தங்களது கருவூலங்களை நிரப்பிக்கொள்வது அல்லது எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.

பொருளாதாரம்

சமூக நிலைமைக்கேற்ப பொருளாதாரம் அமைந்திருந்தது. அரபியர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்யும்போது இக்கருத்து நமக்குத் தெரியவரும். அவர்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பெரும் துணையாக இருந்தது. அமைதியும் பாதுகாப்பும் இருந்தால்தான் வியாபாரப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே! ஆனால், அரபிய தீபகற்பத்தில் புனித மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் அந்த அமைதியும் பாதுகாப்பும் இருக்கவில்லை. இப்புனித மாதங்களில்தான் உக்காள், தில்மஜாஸ், மஜன்னா போன்ற அரபியர்களின் பெயர் போன வியாபாரச் சந்தைகள் நடைபெற்றன.

அரபியர்களிடம் தொழில் துறைகளைப் பற்றிய அறிவு காணப்படவில்லை. துணி நெய்தல், தோல் பதனிடுதல் போன்ற சில தொழில் யமன், ஹீரா மற்றும் ‘மஷாஃபுஷ் ஷாம்’ ஆகிய பகுதிகளில் மட்டும் காணப்பட்டன. அரபிய தீபகற்பத்தின் உட்புறத்தின் சில பகுதிகளில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நடைபெற்று வந்தன. அரபியப் பெண்கள் அனைவரும் நெசவுத் தொழில் செய்தனர். எனினும், அனைத்து செல்வங்களும் போர்களில் செலவழித்து வீணடிக்கப்பட்டன. அவர்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அணிவதற்கான ஆடைகள் கூட இல்லாமல் தவித்தனர்.

பண்பாடுகள்

அக்கால மக்களிடையே செம்மையான சிந்தனையோ பகுத்தறிவோ இல்லை என்பதால் அக்காலத்தை “அறியாமைக்காலம்” என வருணிக்கப்பட்டது. ஏற்க இயலாத செயல்பாடுகளும் இழிவான நடத்தைகளும் குடி கொண்டிருந்தன. அதே நேரத்தில் வியக்கத்தக்க சில அரிய பண்புகளும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன.

அவையாவன:

1) கொடைத் தன்மை மற்றும் தயாளத்தன்மை: அவர்கள் கொடைத் தன்மையில் ஒருவரையொருவர் போட்டியிட்டனர். இந்தக் கொடைத் தன்மையைக் கொண்டே தங்களது பெரும்பாலான கவிகளில் தங்களையும் பிறரையும் புகழ்ந்து கொண்டனர்.

கடுமையான குளிரும் பஞ்சமும் நிலவி வரும் காலத்தில் ஒருவரிடம் விருந்தினர் ஒருவர் வருகிறார். அம்மனிதரிடம் தனது குடும்பத்தின் தேவைக்காக இருக்கும் ஓர் ஒட்டகையைத் தவிர வேறொன்றுமில்லாத நிலையிலும் அந்த ஒட்டகையை அறுத்து விருந்தினரை உபசரிக்க அவரைத் தூண்டுமளவு அவர்களிடம் விருந்தோம்பல் குணம் மிகைத்திருந்தது.

அவ்வாறே அவர்களில் இயலாத ஒருவர் நஷ்டஈடு வழங்க வேண்டியிருந்தால் அது தங்களது சக்திக்கு மீறியதாக இருப்பினும் அந்தத் தொகையைத் தான் தருவதாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இதனால், பிறர் உயிர் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தார்கள். இதைத் தங்களுக்குப் பெருமையாகக் கருதினார்கள்.