பக்கம் - 422 -
அபூ மூஸா அஷ்அ (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இப்போருக்காக புறப்பட்டோம். ஓர் ஒட்டகத்தில் ஆறு நபர்கள் வீதம் மாறி மாறி சவாரி செய்தோம். இதனால் எங்களது கால்கள் வெடித்து விட்டன. எனது கால்களிலும் வெடிப்பு ஏற்பட்டு நகங்கள் எல்லாம் பெயர்ந்து விட்டன. அதனால் துண்டுத் துணிகளை எடுத்து எங்களது கால்களைச் சுற்றிக் கொண்டோம். எனவேதான் இப்போருக்குப் பெயர் ‘தாதுர் கா’ (துண்டுத் துணிகள் உடையது) என்று அழைக்கப்பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘தாத்துர் கா’ போருக்கு சென்றிருந்தோம். ஓர் அடர்த்தியான நிழல் தரும் மரத்தருகில் வந்த போது அதில் நபி (ஸல்) ஓய்வு எடுப்பதற்காக ஏற்பாடு செய்தோம். மக்கள் பிரிந்து சென்று ஆங்காங்கிருந்த மற்ற மர நிழல்களில் ஓய்வெடுக்க, நபி (ஸல்) அவர்கள் ஒரு மரநிழலில் தங்கினார்கள். அம்மரத்தில் தனது வாளைத் தொங்க விட்டுவிட்டு அதன் நிழலில் தூங்கினார்கள். நாங்களும் சிறிது தூங்கினோம். ஒரு முஷ்ரிக் அங்கு வந்து நபியின் வாளை உருவிக் கொண்டார். நபி (ஸல்) கண் விழித்து பார்த்தபோது “நீ எனக்குப் பயப்படுகிறாயா?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) “இல்லை” என்றார்கள். அவர் “யார் உன்னை என்னிடமிருந்து பாதுகாக்க முடியும்!” என்றார். நபியவர்கள் “அல்லாஹ்” என்றார்கள். இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் நபியவர்களிடம் சென்ற போது அங்கு கிராமவாசி ஒருவர் உட்கார்ந்திருந்தார். நபியவர்கள் “நான் தூங்கிக் கொண்டிருந்த போது எனது வாளை இவர் எடுத்துக் கொண்டார். நான் விழித்துப் பார்த்தபோது அது அவரது கையில் உருவப்பட்ட நிலையில் இருந்தது. இவர் “உன்னை என்னிடமிருந்து யார் பாதுகாப்பார்?” என்று கேட்டார். “அல்லாஹ்” என்று நான் கூறினேன். இதோ... அவர் உட்கார்ந்து இருக்கிறார் என்று நபி (ஸல்) கூறினார்கள். அவரைத் தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். (முக்தஸர் ஸீரத்திர்ரஸூல்)

இச்சம்பவத்தைப் பற்றி வரும் மற்றொரு அறிவிப்பில் வருவதாவது, “அல்லாஹ்” என்று நபி (ஸல்) பதில் கூறியவுடன் அவரது கையிலிருந்து வாள் வீழ்ந்துவிட்டது. அதை நபி (ஸல்) எடுத்துக் கொண்டு “என்னிடமிருந்து உன்னை யார் பாதுகாப்பார்?” என்று கேட்டார்கள். அவர் “வாளை எடுத்தவர்களில் சிறந்தவராக நீங்கள் இருங்கள்” என்றார். “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சான்று கூறுவாயா?” என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டார்கள். அவர் “நான் உங்களிடம் போர் செய்யவோ, உங்களிடம் போர் புரியும் கூட்டத்தினருடன் சேரவோ மாட்டேன் என்று நான் உங்களிடம் ஒப்பந்தம் செய்கிறேன்” எனக் கூறினார். நபி (ஸல்) அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். அவர் தனது கூட்டத்தனரிடம் சென்று “நான் மக்களில் சிறந்தவரிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறினார். (ஃபத்ஹுல் பாரி, முக்தஸர் ஸீரத்திர்ரஸூல்)

“இந்த கிராமவாசியின் பெயர் கவ்ரஸ் இப்னு ஹாரிஸ்” என்று ஸஹீஹுல் புகாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிஞர் வாகிதியின் நூலில் “இந்த கிராமவாசியின் பெயர் துஃஸூர் இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்து வேற்றுமைக்கு ஸஹீஹுல் புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர் “இரண்டும் வெவ்வேறு நிகழ்ச்சிகளாக இருக்கலாம்” என்று விளக்கம் அளிக்கிறார். அல்லாஹ்வே மிக அறிந்தவன். (ஃபத்ஹுல் பாரி)