பக்கம் - 427 -
ஹஜுனுக்கு அருகிலுள்ள மலைக் கணவாயின் வழியாக நபி (ஸல்) மக்காவுக்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் வரிசையாக நின்று கொண்டு நபியவர்களை வேடிக்கை பார்த்தனர். நபி (ஸல்) தல்பியா கூறிக்கொண்டே பள்ளிக்குள் நுழைந்து தனது தடியால் ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட்டுவிட்டு தவாஃபைத் தொடங்க, முஸ்லிம்களும் தங்களது தவாஃபைத் தொடங்கினார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) பின்வரும் கவிகளைப் பாடிக்கொண்டு வாளேந்தியவர்களாக நபியவர்களுக்கு முன் சென்று கொண்டிருந்தார்கள்.

“இறைமறுப்போரின் பிள்ளைகளே!அகன்றுபோய் வழிவிடுங்கள்!
இறைத்தூதரிடத்தில் நன்மைகள் அனைத்தும் இருக்கின்றன.
வழிவிடுங்கள்! திட்டவட்டமாக ரஹ்மான் அவன் தன் திருமறையில்...
தனது தூதருக்கு ஓதிக்காட்டப்படும் ஏடுகளில் இறக்கினான்.
இறைவா! அவர் கூற்றை ஏற்கிறேன்.
அவரை ஏற்பதில் உண்மைதனை நிச்சயம் நான் பார்க்கிறேன்.
வெட்டுவதில் சிறந்த வெட்டு இறைப்பாதையில் நிகழ்வதுதான்
இறைமறை கட்டளை, இன்று உங்களை வெட்டுவோம்
அது தலை தனி, முண்டம் தனி ஆக்கிடும் வெட்டு
அது நண்பனை விட்டு நண்பனைப் பிரித்திடும் வெட்டு.

உமர் (ரழி), “ஏ! ரவாஹாவின் மகனே! அல்லாஹ்வின் தூதருக்கு முன், அதுவும் அல்லாஹ்வின் புனிதப் பள்ளிக்குள் நீ கவிதை பாடுகிறாயா?” என்று அதட்டினார்கள். அதற்கு நபியவர்கள் “உமரே! அவரை விட்டுவிடுங்கள். அம்பால் எறிவதைவிட இந்தக் கவிதை குறைஷிகளுக்கு மிக விரைவாக ரோஷத்தை ஊட்டக் கூடியது” என்று கூறினார்கள். (ஜாமிவுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் முதல் மூன்று சுற்றுகளை (முன் கூறியவாறு) ரமல் செய்தவர்களாகச் சுற்றினார்கள். இதை பார்த்து ஆச்சரியமடைந்த இணைவைப்பாளர்கள் “என்ன! மதீனாவின் காய்ச்சல் இவர்களை மிகப் பலவீனப்படுத்தி விட்டது என்றல்லவா எண்ணியிருந்தோம். ஆனால், இவர்களோ இவ்வளவு வீரமுள்ளவர்களாக இருக்கிறார்களே” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் முதலில் தவாஃபை முடித்தார்கள். அதற்குப் பின் ‘ஸஃபா, மர்வா’ என்ற இரு மலைகளுக்கு மத்தியில் ‘ஸயீ“” செய்தார்கள். அதற்குப் பின் மர்வா மலைக்கு வந்தார்கள். அங்குதான் நபியவர்களின் ஒட்டகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நபியவர்கள் “இந்த இடத்திலும் குர்பானி பிராணியை அறுக்கலாம். மக்காவின் அனைத்து தெருக்களிலும் குர்பானி பிராணியை அறுக்கலாம்” என்று அனுமதி வழங்கிவிட்டு, தங்களது குர்பானியை மர்வாவில் வைத்து அறுத்தார்கள். அதற்குப் பின் தங்களது தலைமுடியை சிரைத்து (மொட்டை அடித்து)க் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி முஸ்லிம்களும் அவ்வாறே செய்தார்கள். உம்ராவை முடித்த தோழர்களில் சிலரை ஆயுதங்களை வைத்துவிட்டு வந்த ‘யஃஜுஜ்’ என்ற இடத்திற்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்தவர்களை மக்கா வந்து உம்ராவை நிறைவேற்ற அழைத்தார்கள். நபியவர்களின் சொல்லுக்கிணங்க இக்கூட்டத்தினர் அங்குச் சென்று ஆயுதங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட, அங்கிருந்தவர்கள் மக்கா வந்து உம்ரா செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். குறைஷிகள் நான்காவது நாள் காலையில் அலீயிடம் வந்து, “தவணை முடிந்துவிட்டது. உமது தோழரை வெளியேறும்படி சொல்” என்று கூறினர். நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறி ‘ஸஃப்’ என்ற இடத்தில் தங்கினார்கள்.