பக்கம் - 446 -
அதற்கு நபியவர்கள் “அபூ ஸுஃப்யானே! உமக்கு என்ன கேடு நேர்ந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ தெரிந்து கொள்வதற்கு இன்னுமா உனக்கு நேரம் வரவில்லை?” என்றார்கள். “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி. நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள் உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள், ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது” என்று அபூ ஸுஃபயான் கூறினார். இதைக் கேட்ட அப்பாஸ் (ரழி) “உனக்கென்ன கேடு! நீ கொல்லப்படுவதற்கு முன் இஸ்லாமை ஏற்றுக்கொள். லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் என்று சாட்சி சொல்லிவிடு!” என்று கூறினார். அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு ஏகத்துவ சாட்சியும் மொழிந்தார்.

மக்கா நோக்கி இஸ்லாமியப் படை

அன்றைய காலைப் பொழுதில், அதாவது ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 17 செவ்வாய்க் கிழமை காலையில் நபி (ஸல்) மர்ருள் ளஹ்ரானிலிருந்து மக்கா நோக்கிப் புறப்படலானார்கள். வழி குறுகலாக உள்ள ‘கத்முல் ஜபல்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானை நிறுத்தி வை. அல்லாஹ்வின் படை அவரைக் கடந்து செல்வதைப் பார்க்கட்டும் என்று நபி (ஸல்) அப்பாஸுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அப்பாஸும் அவ்வாறே செய்தார். தங்களிடமுள்ள கொடிகளுடன் ஒவ்வொரு கோத்திரத்தாரும் அபூஸுஃப்யானைக் கடந்து சென்றபோதெல்லாம் இவர்கள் யாரென்று அப்பாஸிடம் விசாரிப்பார். அப்பாஸ் (ரழி) (உதாரணமாக) “சுலைம்” என்று கூறுவார். அதற்கு அபூஸுஃப்யான் “எனக்கும் சுலைம் கோத்திரத்தாருக்கும் என்ன உறவு இருக்கிறது?” என்று கூறுவார். இவ்வாறே ஒவ்வொரு கோத்திரத்தாரையும் அபூஸுஃப்யான் விசாரிக்க அதற்கு அப்பாஸ் (ரழி) பதில் கூறிக்கொண்டிருந்தார்கள்.

இறுதியாக நபியவர்கள் தனது அடர்ந்த படையில் முஹாஜிர் அன்சாரிகளுடன் சென்றார்கள். நபி (ஸல்) மத்திம்லிருக்க தோழர்கள் நபியைச் சுற்றி ஆயுதமேந்தியிருந்தார்கள். அக்கூட்டத்தில் ஆயுதங்களைத் தவிர வேறொன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. இக்காட்சியைப் பார்த்த அபூஸுஃப்யான் ஆச்சரியமடைந்து “ஸுப்ஹானல்லாஹ்! அப்பாஸே! இவர்கள் யார்?” என்று கேட்டார். “இக்குழுவில் அல்லாஹ்வின் தூதர் தனது முஹாஜிர் மற்றும் அன்சாரி தோழர்களுடன் செல்கிறார்கள்” என்று அப்பாஸ் (ரழி) பதிலளித்தார். இதைக் கேட்ட அபூஸுஃப்யான் “நிச்சயமாக இவர்களை யாராலும் எதிர்க்க முடியாது. ஓ அபுல் ஃபழ்லே! உமது சகோதரர் உடைய மகனின் ஆட்சி இன்று கொடி கட்டிப் பறக்கிறதே!” என்று கூறினார். அதற்கு அப்பாஸ் (ரழி) “அபூ ஸுஃப்யானே! இதுதான் நபித்துவமாகும் (சாதாரண அரசாங்கமல்ல)” என்று கூறினார். “ஆம்! சதான்” என்று அபூஸுஃப்யான் (ரழி) கூறினார்.

ஸஅது இப்னு உபாதா (ரழி) அன்சாரிகளின் கொடியை ஏந்தியிருந்தார். அவர் அபூ ஸுஃப்யானுக்கு அருகில் வந்தபோது “இன்றைய தினம் கடுமையான போராட்ட நாளாகும் இன்றைய தினம் மானமரியாதை எடுக்கப்படும் இன்றைய தினம் அல்லாஹ் குறைஷிகளைக் கேவலப்படுத்தி விட்டான்” என்று கூறினார். இந்த வார்த்தை அபூஸுஃப்யானுக்குப் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. அபூஸுஃப்யானுக்கு அருகில் நபி (ஸல்) வந்தபோது “அல்லாஹ்வின் தூதரே! ஸஅது என்ன கூறினார் என்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட வில்லையா?” என்று கேட்டார். “அவர் என்ன கூறினார்?” என்று நபி (ஸல்) கேட்க, “இன்னின்னதை அவர் பேசினார்” என அபூ ஸுஃப்யான் (ரழி) விளக்கினார்.