பக்கம் - 46 -
நபியவர்களின் குடும்பம்

பாட்டனாரான ஹாஷிம் இப்னு அப்து மனாஃபின் பெயருடன் இணைத்து நபி (ஸல்) அவர்களின் குடும்பம் ஹாஷிமி குடும்பம் என அழைக்கப்பட்டது. ஆகவே, இங்கு ஹாஷிம் மற்றும் அவருக்குப் பின்னுள்ளோரைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

1. ஹாஷிம்

அப்துத் தார் மற்றும் அப்து மனாஃப் குடும்பங்கள் சிறந்த பொறுப்புகளை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டபோது ஹாஜிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் கொடுப்பதும் அப்து மனாஃபின் மகனான ஹாஷிமுக்கு கிடைத்ததை முன்பு கூறினோம். இவர் மக்களிடையே பெரும் மதிப்பு மிக்க செல்வந்தராக இருந்தார். இவர்தான் முதன் முதலாக மக்காவில் ஹாஜிகளுக்கு ஸரீத் (திக்கடி) எனும் உயர்தரமான உணவை வழங்கியவர். இவரது பெயர் அம்ரு. எனினும், ஸரீதை தயாரிப்பதற்காக ரொட்டிகளை சிறுசிறு துண்டுகளாக ஆக்கியதால் இவருக்கு ‘ஹாஷிம்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவ்வாறே கோடை காலத்திற்கும் குளிர் காலத்திற்கும் என இரண்டு வியாபாரப் பயணங்களைக் குறைஷியடையே அறிமுகப்படுத்தியதும் இவரே.

அதுபற்றி ஒரு கவிஞர் குறிப்பிடுகிறார்:

அம்ரு! இவர்தான் பஞ்சத்தில் அடிபட்டு மெலிந்துபோன தனது சமூகத்தினருக்கு ரொட்டிகளை ஆனத்தில் (குழம்பு) பிய்த்துப் போட்டு உண்ண வழங்கியவர். இவரே குளிர், கோடை காலங்களின் வியாபாரப் பயணங்களைத் தோற்றுவித்தவர். (இப்னு ஹிஷாம்)

ஹாஷிம் வியாபாரத்திற்காக ஷாம் சென்று கொண்டிருந்தபோது மதீனாவை வந்தடைந்தார். அங்கு நஜ்ஜார் கிளையின் ‘அம்ர்’ என்பவரின் மகள் ஸல்மாவை மணந்து சில காலம் அங்கேயே தங்கிவிட்டு ஷாம் புறப்பட்டார். ஸல்மா தனது குடும்பத்தாரிடம் தங்கியிருந்தார். அவர் அப்துல் முத்தலிபை கர்ப்பத்தில் சுமந்து கொண்டிருந்த நிலையில் ஹாஷிம் ஃபலஸ்தீனில் ‘கஸ்ஸா’ (காஸா) எனுமிடத்தில் மரணமடைந்தார். ஸல்மா கி.பி. 497 ஆம் ஆண்டு அப்துல் முத்தலிபை பெற்றெடுத்தார். குழந்தையின் தலையில் நரை இருந்ததால் ‘ஷைபா’ (நரைத்தவர்) என அதற்கு பெயரிட்டனர். (இப்னு ஹிஷாம்)

அக்குழந்தையை ஸல்மா மதீனாவிலிருந்த தனது தந்தையின் வீட்டிலேயே வளர்த்து வந்ததால் மக்காவிலிருந்த ஹாஷிமின் குடும்பத்தினர் எவரும் அவரது மகன் (ஷைபா) அப்துல் முத்தலிபைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஹாஷிமுக்கு அப்துல் முத்தலிபைத் தவிர அஸத், அபூஸைஃபீ, நழ்லா என்ற மூன்று ஆண் மக்களும் ஷிஃபா, காலிதா, ழயீஃபா, ருகைய்யா, ஜன்னா என்ற ஐந்து பெண் மக்களும் இருந்தனர். (இப்னு ஹிஷாம்)