பக்கம் - 461 -
துரைத் மாலிக்கை வரவழைத்து, “ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று விளக்கம் கேட்க “ஒவ்வொரு படை வீரன் பின்னணியிலும் இவர்கள் இருந்தால்தான் குடும்பத்தையும் பொருளையும் பாதுகாக்க தீவிரமாகப் போர் செய்வார்கள்” என்றான் தளபதி மாலிக். அதற்குத் துரைத், “ஆட்டு இடையனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒருவன் தோற்று புறமுதுகிட்டு ஓட ஆரம்பித்தால் எதுதான் அவனைத் தடுத்து, திரும்ப போர்க்களத்திற்கு கொண்டு வரும்? சரி! இப்போரில் உனக்கு வெற்றி கிடைத்தால் அதில் ஒரு வீரனின் ஈட்டி மற்றும் வாளால்தான் கிடைக்க முடியும். உனக்குத் தோல்வி ஏற்பட்டால் அதில் உன் குடும்பத்தினர் முன்னே இழிவடைவதாகும். உனது செல்வங்களையெல்லாம் இழந்து நிர்க்கதியாகி விடுவாய்” என எச்சரித்து விட்டு சில குடும்பத்தினரையும் தலைவர்களையும் குறிப்பாக விசாரித்தார்.

அதன் பின் மாலிக்கிடம் “ஹவாஜின் கிளையினரின் குழந்தைகளைப் போர் மைதானத்தில் நேரடியாக பங்கு கொள்ள வைப்பது முறையான செயலல்ல பயன்தரத் தக்கதுமல்ல. குடும்பங்களைப் பாதுகாப்பான உயரமான இடங்களில் இருக்க வை. அதன்பின் குதிரை மீது அமர்ந்து மதம் மாறிய இந்த எதிரிகளிடம் போரிடு. உனக்கு வெற்றி கிட்டினால் குடும்பத்தினர் உன்னிடம் வந்து சேர்ந்து விடுவார்கள். நீ தோல்வியைத் தழுவினால் அது உன்னோடு முடிந்துவிடும். உனது குடும்பமும் பொருளும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்படும்” என்றார்.

ஆனால், துரைதுடைய இந்த ஆலோசனையைத் தளபதியான மாலிக் நிராகரித்து விட்டான். மேலும் “நீ சொல்வது போல் அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒருபோதும் செய்ய முடியாது. நீயும் கிழடாகி விட்டாய். உனது அறிவுக்கும் வயசாகி விட்டது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த ஹவாஜின் கிளையினர் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் இந்தக் கூர்மையான வாளின் மீது வீழ்வேன் அது என் முதுகிலிருந்து வெளியேறட்டும்” என்றான். இப்போரில் துரைதுக்கு பேரும் புகழும் கிடைத்து விடுவதை வெறுத்ததன் காரணமாகவே அவன் இவ்வாறு சொன்னான். இதனைக் கேட்ட ஹவாஜின் சமூகத்தார் “நாம் உனக்கு கட்டுப்படுகிறோம் கீழ்ப்படிகிறோம்” என்றனர். துரைத் கவலையுடன் “இந்த நாளைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? இதில் நான் கலந்து கொள்ளவுமில்லை விலகிப் போகவுமில்லை” என்றான்.

மாலிக் முஸ்லிம்களின் பலத்தை அறிய ஒற்றர்களை அனுப்பியிருந்தான். அவர்களோ முஸ்லிம்களின் நிலைகளை அறிந்து முகம் சிவந்து, நரம்புகள் புடைக்க, முகம் இருள் கவ்வ திரும்பி வந்தனர். மாலிக் பதறிப்போய், “உங்களுக்கு என்ன கேடு! உங்களுக்கு என்ன நிகழ்ந்தது?” என்றான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! கருப்பும் வெண்மையும் கலந்த குதிரைகள் மீது வெண்மை நிற வீரர்களைக் கண்டோம். அதனைக் கண்ட எங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை” என்றனர்.

நபியவர்களின் உளவாளி

எதிரிகள் புறப்பட்டு விட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அபூ ஹத்ரத் அஸ்லமி (ரழி) என்பவரிடம் “நீ எதிரிகளுடன் கலந்து அங்குள்ள நிலைமைகளை முழுவதுமாக அறிந்து வந்து என்னிடம் தெரிவிக்கவும்” என்று நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அவ்வாறே அவரும் சென்று வந்தார்.