பக்கம் - 463 -
அதிகாலை நேரத்தில் நபி (ஸல்) தங்களது படையைத் தயார் செய்து அவற்றுக்குரிய சிறிய பெரிய கொடிகளை வீரர்களுக்கு வழங்கினார்கள். அதிகாலையில் சற்று மங்கலான நேரத்தில் முஸ்லிம்கள் ஹுனைன் பள்ளத்தாக்கினுள் நுழைய ஆரம்பித்தார்கள். ஹுனைன் பள்ளத்தாக்கில் எதிரிகள் மறைந்திருப்பதை முஸ்லிம்கள் அறவே அறிந்திருக்கவில்லை. திடீரென எதிரிகள் அவர்களை நோக்கி அம்புகளை எறிந்தனர். பின்பு எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே பாய்ச்சலாக பாய்ந்து முஸ்லிம்களைத் தாக்கினர். இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்த்திராத முஸ்லிம்கள் சமாளிக்க முடியாமல் அங்கும் இங்குமாக ஓடினர். இது மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. புதிதாக இஸ்லாமை ஏற்றிருந்த அபூஸுஃப்யான் இப்னு ஹர்ஃப் இக்காட்சியைப் பார்த்து “இவர்கள் செங்கடல் வரை ஓடிக்கொண்டே இருப்பார்கள் போல் தெரிகிறதே!” என்றார். மேலும், ஜபலா இப்னு ஹன்பல் அல்லது கலதா இப்னு ஹன்பல் என்பவன் “பாருங்கள்! இன்று சூனியம் பொய்யாகி விட்டது” என்று ஓலமிட்டான்.

நபி (ஸல்) பள்ளத்தாக்கின் வலப்புறமாக ஒதுங்கிக் கொண்டு “மக்களே! என் பக்கம் வாருங்கள். நான் அல்லாஹ்வின் தூதர். நான்தான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்” என்று அழைத்தார்கள். இந்த இக்கட்டான நிலையில் முஹாஜிர் மற்றும் அன்சாரிகளில் வெகு குறைவானவர்களே நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இவர்கள் ஒன்பது நபர்கள் என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். இமாம் நவவீ (ரஹ்) பன்னிரெண்டு நபர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், கீழ்க்காணும் அஹ்மது மற்றும் முஸ்தத்ரக் ஹாகிமில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களின் அறிவிப்பில் வந்திருக்கும் எண்ணிக்கையே சரியானது:

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: ஹுனைன் போலே நானும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நபி (ஸல்) அவர்களை விட்டு மக்கள் ஓடிவிட்ட நிலையில், முஹாஜிர் மற்றும் அன்சாரிகளைச் சேர்ந்த எண்பது நபர்கள் மட்டும் நபியவர்களுடன் உறுதியாக நின்றனர். புறமுதுகுக் காட்டி ஓடவில்லை. (முஸ்தத்தரகுல் ஹாகிம், முஸ்னது அஹ்மது)

மேலும், இப்னு உமர் (ரழி) கூறுகிறார்கள். ஹுனைன் சண்டையின் போது மக்களெல்லாம் புறமுதுகுக் காட்டி ஓடிவிட்டனர். அன்றைய தினத்தில் ஏறக்குறைய நாங்கள் நூறு நபர்களுக்குக் குறைவானவர்களே நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (ஜாமிவுத் திர்மிதி)

அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் நிகரற்ற வீரம் வெளிப்பட்டது. “நானே நபியாவேன் அதில் எந்தப் பொய்யுமில்லை நான் அப்துல் முத்தலிபின் மகனாவேன்.” என்று கூறிக் கொண்டே தங்களது கோவேறுக் கழுதையை எதிரிகள் நோக்கி ஓட்டினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் விரைந்து முன்னேறி விடாமலிருக்க அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் (ரழி) கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார். அப்பாஸ் (ரழி) அதன் இருக்கையைப் பிடித்துக் கொண்டார். இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் கோவேறுக் கழுதையிலிருந்து கீழே இறங்கி, “அல்லாஹ்வே! உனது உதவியை இறக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

முஸ்லிம்கள் களம் திரும்புதல், போர் உக்கிரமாகுதல்

மக்களை சப்தமிட்டு அழைக்கும்படி நபி (ஸல்) அவர்கள் அப்பாஸை பணித்தார்கள். அவர் உரத்த குரலுடையவராக இருந்தார். இதைப் பற்றி அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நான் மிக உயர்ந்த சப்தத்தில் ‘அய்ன அஸ்ஹாபுஸ் ஸமுரா’ (ம்ஸமுரா’ மரத் தோழர்கள் எங்கே?) என்று அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டவுடன் மாடு தனது கன்றை நோக்கி ஓடி வருவது போல் தோழர்கள் ஓடி வந்தனர். எனது அழைப்புக்கு ‘யா லப்பைக், யா லப்பைக்’ (ஆஜராகி விட்டோம்) என்று பதிலளித்தனர். (ஸஹீஹ் முஸ்லிம்)

சிலர், வேகமாக ஓடிக் கொண்டிருந்த தனது ஒட்டகத்தைத் திருப்ப முயன்று அது முடியாமல் ஆனபோது அதிலிருந்த தங்களது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கீழே குதித்து சப்தம் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர். இவ்வாறு புதிதாக நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒன்று சேர்ந்தவுடன் எதிரியை நோக்கி முன்னேறிச் சண்டையிட்டனர்.