பக்கம் - 47 -
2. அப்துல் முத்தலிப்

ஹாஷிமிடமிருந்த பொறுப்புகளான ஹாஜிகளுக்கு உணவளிப்பதும் தண்ணீர் கொடுப்பதும் அவரது மரணத்திற்குப்பின் அவரது சகோதரர் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் வசம் வந்தது. இவர் தனது சமூகத்தில் கண்ணியமானவராகவும் பெரும் மதிப்புமிக்கவராகவும் விளங்கினார். அவரது வள்ளல் தன்மையை மெச்சி ‘ஃபைய்யாழ்’ (வாரி வழங்கும் வள்ளல்) என்று குறைஷியர்கள் அவரை அழைத்தனர். ஹாஷிமின் மகன் ஷைபா 7 அல்லது 8 வயதானபோது அவரைப் பற்றி கேள்விப்பட்ட முத்தலிப், அவரைத் தேடி மதீனா வந்தார். ஷைபாவைக் கண்டதும் வாரியணைத்து கண்ணீர் சொரிந்தார். ஷைபாவை தனது வாகனத்தில் அமர்த்திக் கொண்டு தன்னுடன் வருமாறு அழைத்தார். அவர் தனது தாயாரின் அனுமதியின்றி வர மறுத்துவிட்டார். முத்தலிப் ஷைபாவின் தாயார் ஸல்மாவிடம் அனுமதி கேட்க அவர் மகனை அனுப்பி வைக்க மறுத்துவிட்டார். இறுதியாக முத்தலிப் ஸல்மாவிடம் “இவரை எதற்காக அழைத்துச் செல்கிறேன்? அவரது தந்தையின் சொத்துகளுக்காகவும் அல்லாஹ்வின் இல்லம் அமைந்துள்ள புனித பூமிக்காகவும் தானே அழைத்துச் செல்கிறேன்” என்று கூறிய பின்னரே அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்.

முத்தலிப் தனது ஒட்டகையில் ஷைபாவை அமர்த்தி மக்காவுக்கு அழைத்து வந்தார். இக்காட்சியைக் கண்ட மக்காவாசிகள் ஷைபாவை பார்த்து இவர் (அப்துல் முத்தலிப்) “முத்தலிபின் அடிமை” என்றனர். அதற்கு முத்தலிப் கோபத்துடன் “உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! இவர் எனது சகோதரர் ஹாஷிமின் மகனார்” என்றார். மக்காவில் முதன் முதலாக மக்கள் அழைத்த அப்துல் முத்தலிப் என்ற அப்பெயலேயே ஷைபா பிரபலமானார். வாலிபமடையும் வரை முத்தலிபிடம் ஷைபா வளர்ந்தார். முத்தலிப் யமன் நாட்டில் ‘ரதுமான்’ என்ற ஊரில் மரணமடைந்த பின் அவரது பொறுப்பை அப்துல் முத்தலிப் ஏற்றார். மக்காவிலேயே தங்கி தங்களது முன்னோர் செய்து வந்த பணியைத் தொடர்ந்தார். தனது முன்னோரில் எவரும் பெற்றிராத மதிப்பையும் மரியாதையையும் பெற்றார். அவரை மக்கள் பெரிதும் நேசித்தனர். (இப்னு ஹிஷாம்)

முத்தலிபின் மரணத்திற்குப் பின் அப்துல் முத்தலிபிடமிருந்த கஅபாவின் உடமைகளை நவ்ஃபல் பறித்துக் கொண்டார். அப்துல் முத்தலிப், குறைஷியர்கள் சிலரிடம் சென்று இதில் தனக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டதற்கு அவர்கள் “உமக்கும் உமது தந்தையின் சகோதரருக்குமிடையே உள்ள பிரச்சனையில் நாங்கள் தலையிட மாட்டோம்” எனக் கூறி உதவ மறுத்துவிட்டனர். இதனால் அப்துல் முத்தலிப் நஜ்ஜார் கிளையினரான தனது தாய்மாமன்களுக்கு கடிதம் எழுதி உதவி தேடினார். அக்கடிதத்தில் தனது நிலைமைகளை உள்ளங்களை உருக்கும் கவிதைகளாக வடித்திருந்தார். உடனே அவரது மாமாவான அபூ ஸஅது இப்னு அதீ, எண்பது வீரர்களுடன் புறப்பட்டு மக்காவிலுள்ள ‘அப்தஹ்’ எனுமிடத்தில் தங்கினார். அப்துல் முத்தலிப் அவரிடம் சென்று “நீங்கள் எனது வீட்டில் தங்குங்கள் என வேண்டிக் கொண்டபோது அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நவ்ஃபலை சந்திக்காமல் வரமாட்டேன்” எனக் கூறிவிட்டார். அதன் பிறகு நவ்ஃபலிடம் அபூ ஸஅது வந்தார். அவர் ஹஜருல் அஸ்வத் அருகே சில குறைஷி பெரியவர்களுடன் அமர்ந்திருந்தார். அபூ ஸஅது வாளை உருவிய நிலையில் “இந்த இல்லத்தின் இறைவன் மீதாணையாக! நீர் எனது சகோதரியின் மகனுடைய உடமைகளைத் திருப்பியளிக்க வில்லை என்றால் இந்த வாளை உமது உடலுக்குள் பாய்ச்சி விடுவேன்” என்று கோபக்கனலுடன் கூறினார். அதற்கு நவ்ஃபல் “சரி! கொடுத்து விடுகிறேன்” என்று கூறி அதற்கு அங்கிருந்த குறைஷி பெரியவர்களைச் சாட்சிகளாக்கினார். அதன் பின்னரே அபூ ஸஅது அப்துல் முத்தலிபின் வீடு சென்று மூன்று நாட்கள் தங்கி, பின்னர் உம்ராவை முடித்து மதீனா திரும்பினார்.