பக்கம் - 472 -
நபி (ஸல்) அந்த ஆண்டு முஹர்ரம் மாதத்திலேயே மேற்கூறப்பட்ட அனைத்து குழுக்களையும் அனுப்பிவிடவில்லை. அவர்களில் சில கோத்திரத்தார்கள் தாமதமாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால், அற்குப் பிறகே நபி (ஸல்) தோழர்களை அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால், இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நபி (ஸல்) தங்களது தோழர்களை அனுப்பி வைத்தது ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதத்தில்தான் ஆரம்பமானது. இதிலிருந்து ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாமிய அழைப்புப் பணி எந்தளவு வெற்றி அடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. அவ்வாறே, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின் மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர்.

படைப் பிரிவுகள்

ஜகாத் வசூல் செய்வதற்குப் பல கோத்திரத்தாரிடம் தங்களது தோழர்களை அனுப்பியவாறே சில படைகளையும் பல பகுதிகளுக்கு நபி (ஸல்) அனுப்பினார்கள். அரேபியத் தீபகற்பம் முழுவதிலும் முழு அமைதியை நிலை நாட்டுவதே அதன் நோக்கமாகும். அவ்வாறு அனுப்பப்பட்ட படைகளின் விவரம் வருமாறு:

1) உயைனா இப்னு ஹிஸ்ன் படைப் பிரிவு: தமீம் கிளையினர் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய கிளையினரைத் தூண்டி வந்ததுடன், முஸ்லிம்களுக்குச் செலுத்த வேண்டிய ஜிஸ்யா வரியையும் கொடுக்க விடாமல் தடுத்து வந்தனர். எனவே, உயைனா இப்னு ஹிஸ்ன் அல்பஸாயின் தலைமையில் ஐம்பது குதிரை வீரர்களை ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதத்தில் பனூ தமீம் கிளையினரிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படையில் முஹாஜிர் மற்றும் அன்சாரிகளில் எவரும் இருக்கவில்லை. அனுப்பப்பட்ட அனைவரும் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களே.

உயைனா தனது படையுடன் இரவில் பயணிப்பதும் பகலில் மறைவதுமாக தமீமினரை நோக்கிச் சென்றார். ஒரு பாலைவனத்தில் ஒன்று கூடியிருந்த அந்த தமீம் கிளையினர் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். முஸ்லிம்களின் படையைச் சமாளிக்க முடியாமல் அக்கூட்டத்தினர் அங்குமிங்கும் ஓடினர். பதினொரு ஆண்கள், இருபத்தொரு பெண்கள், முப்பது சிறுவர்களைக் கைதிகளாக்கி உயைனா மதீனா அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் ரம்லா பின்த் அல்ஹாரிஸின் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தமீமினன் தலைவர்களில் பத்து முக்கிய நபர்கள் தங்களின் கைதிகளை விடுவிப்பதற்காக மதீனா வந்தனர். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க அவர்களின் இல்லம் வந்து “முஹம்மதே! எங்களிடம் வாருங்கள்” என்று கூவி அழைத்தனர். நபி (ஸல்) வந்தவுடன் அவர்கள் நபியவர்களை பற்றிக் கொண்டனர். நபி (ஸல்) சிறிது நேரம் பேசிவிட்டு ளுஹ்ர் தொழுகைக்காகச் சென்று விட்டார்கள். தொழுகை முடித்து பள்ளியின் முற்றத்தில் அமர்ந்தபோது அக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “வாருங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பெருமையைப் பற்றி விவாதிப்போம்” என்று கூறினர்.