பக்கம் - 477 -


இதற்கு முன் நிகழ்ந்த மக்கா போர் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதைப் பிரித்தறிவித்து விட்டது. முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதைப் புரிய வைத்துவிட்டது. எனவே, காலநிலை முற்றிலும் மாறி மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் வரத் தொடங்கினர் என்பதை இதற்குப் பின் “குழுக்கள்” என்ற தலைப்பில் வரும் விவரங்களிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையிலிருந்தும் இதை நன்கு அறிந்து கொள்ளலாம். ஆக, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின் முஸ்லிம்களின் உள்நாட்டுப் பிரச்சனைகளும் சிரமங்களும் முற்றிலுமாக முடிவுற்றது. அல்லாஹ்வின் மார்க்கச் சட்டங்களைக் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு முழுமையான அவகாசம் கிடைத்தது.

போருக்கான காரணம்

எனினும், ஒரே ஒரு சக்தி மட்டும் எவ்விதக் காரணமுமின்றி முஸ்லிம்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தது. அதுதான் ரோமானியப் பேரரசு. ரோமர்கள் அக்காலத்தில் உலகத்தில் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்தார்கள். இதற்கு முன் ஒரு சம்பவத்தை நாம் பார்த்திருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் புஸ்ரா மன்னருக்கு அனுப்பிய கடிதத்தை எடுத்துச் சென்றிருந்த ‘ஹாரிஸ் இப்னு உமைர் அஸ்தி’ என்ற தூதரைப் புஸ்ராவின் கவர்னராக இருந்த ‘ஷுரஹ்பீல் இப்னு அம்ர் கஸ்ஸானி’ என்பவன் வழிமறித்துக் கொன்று விட்டான். அதற்குப் பழிவாங்குவதற்காக நபி (ஸல்) ஜைது இப்னு ஹாரிஸாவின் தலைமையில் படை ஒன்றை அனுப்பினார்கள். இவர்கள் ‘முஃதா’ என்ற இடத்தில் ரோமர்களுடன் கடுமையாகச் சண்டையிட்டனர். முழுமையாக அந்த அநியாயக்காரர்களைப் பழிவாங்க முடியவில்லை. இருப்பினும் முஸ்லிம்களின் ஒரு சிறு படை ஒரு மாபெரும் வல்லரசை எதிர்த்துச் சண்டையிட்டது. அரபியர்களின் உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. முஃதாவின் அருகிலுள்ள அரபியர்களுக்கு மட்டுமல்லாமல் வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும் கூட முஸ்லிம்களைப் பற்றிய அதே பாதிப்பை இது ஏற்படுத்தியது.

இப்போனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நன்மையையும் இதற்குப் பின் தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரபுக் கோத்திரங்கள், தன் கட்டுப்பாட்டை விட்டு விலகி, முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்வதையும் கைஸர் மன்னனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தனது எல்லையை நெருங்கி வரும் ஆபத்தாக உணர்ந்தான். அரபியர்களுக்கு அருகிலிருக்கும் தனது ஷாம் நாட்டுக் கோட்டைகளை ஆட்டம் காண வைக்கும் ஒரு செயலாகக் கருதினான். முஸ்லிம்களின் இந்த எழுச்சி அழிக்க முடியாத அளவுக்கு வலிமைப் பெறுவதற்கு முன்னதாகவே அடக்கி அழித்துவிட வேண்டும் ரோம் நாட்டை சுற்றியிருக்கும் அரபு பகுதிகளில் முஸ்லிம்கள் கிளர்ச்சியை உண்டாக்குவதற்கு முன்னதாகவே அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட வேண்டும் என அவன் எண்ணினான்.

முஃதா போர் முடிந்து ஒரு வருடம் ஆவதற்குள் தனது இந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக பெரும் படையொன்றைத் திரட்டி, அதில் ரோமர்களையும் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்த கஸ்ஸான் கிளையைச் சேர்ந்த அரபியர்களையும் சேர்த்துக் கொண்டு தீர்க்கமான ஒரு போருக்குத் தயாரானான்.