பக்கம் - 478 -
ரோமர்களும், கஸ்ஸானியர்களும் போருக்கு வருகின்றனர்

முஸ்லிம்களைத் தாக்குவதற்கு மாபெரும் போருக்குரிய முனைப்புடன் ரோமர்கள் வருகிறார்கள் எனும் செய்தி மதீனாவில் பரவலாகப் பேசப்பட்டது. இதனால் மதீனாவாசிகள் அச்சத்திலும் திடுக்கத்திலும் காலத்தைக் கழித்தனர். வழக்கத்திற்கு மாற்றமான ஏதாவது இரைச்சலைக் கேட்டுவிட்டால் ரோம் நாட்டுப் படை மதீனாவிற்குள் நுழைந்து விட்டதோ என எண்ணினர். உமர் இப்னு கத்தாப் (ரழி) தங்களைப் பற்றி கூறுவதிலிருந்து இதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) தங்கள் மனைவிகளிடம் ஒரு மாதத்திற்குச் சேரமாட்டேன் என்று அந்த ஆண்டு சத்தியம் செய்து விலகி தங்கள் வீட்டுப் பரணியில் தங்கிக் கொண்டார்கள். உண்மை நிலவரத்தை அறியாத நபித்தோழர்கள் நபி (ஸல்) தங்கள் மனைவியரைத் தலாக் சொல்லி விட்டார்கள் என்பதாக விளங்கிக் கொண்டார்கள். இது நபித்தோழர்களுக்குப் பெரும் துக்கத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியைப் பற்றி உமர் (ரழி) கூறுகிறார்கள்:

“எனக்கு அன்சாரி நண்பர் ஒருவர் இருந்தார். நான் எங்காவது சென்று விட்டால் அன்று நடந்த செய்திகளை என்னிடம் வந்து கூறுவார். அவர் எங்காவது சென்றிருந்தால் நான் அவருக்கு விவரிப்பேன். நாங்கள் இருவரும் மதீனாவின் மேற்புறத்தில் வசித்து வந்தோம். நாங்கள் முறைவைத்து மாறி மாறி நபி (ஸல்) அவர்களின் அவையில் கலந்து கொள்வோம். கஸ்ஸான் நாட்டு மன்னன் எங்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி பரவியிருந்ததால் எப்போதும் நாங்கள் பயத்தில் ஆழ்ந்திருந்தோம். ஒருநாள் திடீரென அன்சாரி தோழர் எனது வீட்டிற்கு ஓடிவந்து “திற! திற!!” எனக் கூறிக் கொண்டு கதவை வேகமாகத் தட்டினார். நான் கதவைத் திறந்து “என்ன கஸ்ஸானிய மன்னனா வந்து விட்டான்?” எனக் கேட்டேன். அதற்கவர் “இல்லை! அதைவிட மிக ஆபத்தான ஒன்று நடந்து விட்டது நபி (ஸல்) தங்கள் மனைவியரை விட்டு விலகி விட்டார்கள்” என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

மற்றும் ஓர் அறிவிப்பில் வருவதாவது, உமர் (ரழி) கூறுகிறார்கள்: கஸ்ஸான் கிளையினர் எங்களிடம் போர் புரிவதற்குப் படையை ஒன்று திரட்டுகின்றார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்ததிலிருந்து அதைப் பற்றியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாள் எனது அன்சாரி நண்பர் நபி (ஸல்) அவர்களின் அவையில் கலந்து கொண்ட பின், இஷா நேரத்தில் என் வீட்டு வாசல் கதவைப் பலமாகத் தட்டி “என்ன அவர் தூங்குகிறாரா?” என்று கேட்டார். நான் திடுக்கிட்டு எழுந்து அவரிடம் வந்தபோது அவர் “மிகப்பெரிய விஷயம் ஒன்று நிகழ்ந்து விட்டது” என்று கூறினார். அதற்கு நான் “என்ன? கஸ்ஸானின் படை வந்துவிட்டதா?” என வினவினேன். அதற்கவர் “அதைவிடப் பெரிய விஷயம் ஒன்று நடந்து விட்டது. நபி (ஸல்) தங்கள் மனைவியரைத் தலாக் சொல்லி விட்டார்கள்” என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து ரோமர்களின் படையெடுப்பைப் பற்றி முஸ்லிம்கள் மத்தியில் எந்தளவு அச்சம் நிலவியிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். ரோமர்கள் மதீனாவைத் தாக்கப் புறப்படுகின்றனர் என்ற செய்தி கிடைத்ததிலிருந்து மதீனாவில் இருந்த நயவஞ்சகர்கள் பல சதித்திட்டங்களில் ஈடுபட்டனர். எல்லாப் போர்களிலும் நபி (ஸல்) அவர்களே வெற்றியடைகிறார்கள். அவர்கள் உலகில் எந்த சக்தியையும், அரசர்களையும் பயப்படுவதில்லை. மாறாக, நபியவர்களின் வழியில் குறுக்கிடும் தடைகள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகின்றன என்பதை இந்த நயவஞ்சகர்கள் நன்றாக விளங்கியிருந்தும் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தங்கள் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த கெட்ட எண்ணங்கள் நிறைவேற வேண்டுமென்று ஆசைப்பட்டனர்.