பக்கம் - 489 -


ஒன்பதாவது ஆண்டு துல்ஹஜ் அல்லது துல்கஅதா மாதத்தில் முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜை தலைமையேற்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களை மக்கா அனுப்பினார்கள்.

மதீனாவிலிருந்து அபூபக்ர் (ரழி) புறப்பட்ட பின்பு அத்தியாயம் தவ்பாவின் முதல் வசனங்கள் இறக்கப்பட்டன. அதில் முஷ்ரிக்குகளுடன் இருந்த உடன்படிக்கைகளை முறித்துவிட வேண்டும் என அல்லாஹ் ஆணையிட்டான். தன் சார்பாக இதனை மக்களிடம் தெரிவிக்க மதீனாவிலிருந்து அலீ இப்னு அபூதாலிபை நபி (ஸல்) மக்கா அனுப்பி வைத்தார்கள். புறப்பட்ட அலீ (ரழி) ‘அர்ஜ் அல்லது ழஜ்னான்’ என்ற இடத்தில் அபூபக்ரை சந்திக்கிறார்கள். “தாங்கள் (அமீர்) தலைவராக வந்தீர்களா? அல்லது தலைவன் கீழ் செயல்பட வந்தீர்களா?” என்று அபூபக்ர் (ரழி) கேட்க, அதற்கு “நான் தங்களுடைய தலைமையில் பணியாற்றவே வந்திருக்கிறேன்” என்று அலீ (ரழி) கூறினார்கள். பிறகு இருவரும் ஒன்றாக மக்கா சென்றனர்.

அபூபக்ர் (ரழி) மக்களுக்கு ஹஜ் கடமைகளை நிறைவேற்றித் தந்தார்கள். ஹஜ் பிறை 10ல் ஜம்ரா அருகில் நின்று கொண்டு, மக்களுக்கு நபி (ஸல்) கூறியவற்றைச் சொல்லி “ஒப்பந்தங்கள் அனைத்தும் இன்றுடன் முடிந்து விட்டன” என்று அறிவித்தார்கள். மேலும், அவர்களுக்கு நான்கு மாதங்கள் தவணையளித்தார்கள். ஒப்பந்தமில்லாதவர்களுக்கும் நான்கு மாதத் தவணைக் கொடுத்தார்கள். உடன்படிக்கை செய்தவர்கள் அதனை மீறாமலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பிறருக்கு உதவி செய்யாமலும் இருந்தால் அவர்களது ஒப்பந்தக் காலம் முடியும் வரை தவணையளிக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.

அபூபக்ர் (ரழி) தங்களது ஆட்களை அனுப்பி “இந்த ஆண்டிற்குப் பிறகு முஷ்ரிக்குகள் யாரும் மக்கா வரக்கூடாது. நிர்வாணமாக கஅபாவை யாரும் வலம் வரக்கூடாது” என்று அறிவிப்புச் செய்தார்கள். இது “அரபுலகம் முழுவதும் சிலை வணக்கம் ஒழிந்தது இனி அது தலைதூக்க முடியாது” என்று அறிவிப்பதற்குச் சமமாக இருந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)