பக்கம் - 495 -
3) ஃபர்வா இப்னு அம்ருடைய தூதர்

ஃபர்வா மிகச் சிறந்த போர் தளபதியாக விளங்கினார். அவர் ரோம் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த அரபியர்களுக்கு ஆளுநராக இருந்தார். அவரது முக்கியத் தலம் ‘மஆன்’ மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஷாம் நாட்டுப் பகுதிகளாகும். ஹிஜ்ரி 8, முஃதா போரில் முஸ்லிம்கள் ரோமர்களை எதிர்த்துத் துணிவுடன் போராடினர். முஸ்லிம்களின் இந்த வீர தீரத்தையும் மன உறுதியையும் பார்த்து ஆச்சரியமடைந்து இஸ்லாமால் அவர் கவரப்பட்டார். தான் முஸ்லிமானதைத் தெரிவிப்பதற்காக ஒரு தூதரை அனுப்பினார். நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக ஒரு கோவேறு கழுதையையும் அனுப்பி வைத்தார். இவர் முஸ்லிமான செய்தி கேட்ட ரோமர்கள் அவரைச் சிறையிலடைத்து துன்புறுத்தி, “மார்க்கமா? அல்லது மரணமா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்!” என்றனர். அவரோ மார்க்கத்தை தேர்ந்தெடுத்தார். ஃபலஸ்தீனில் ‘அஃபரா’ என்ற கிணற்றுக்கருகே ரோமர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து தலையைக் கொய்தனர். (ஜாதுல் மஆது)

4) சுதா குழுவினர்

ஹிஜ்ரி 8ல் ஜிஃரானாவிலிருந்து (ஹுனைன் போர் முடிந்து) நபி (ஸல்) மதீனா திரும்பிய பின் இக்குழுவினர் வந்தனர். இதன் விவரமாவது: யமன் தேசத்தில் சுதா கிளையினர் வசிக்கும் பகுதிக்குச் செல்லுமாறு நபி (ஸல்) நானூறு வீரர்களை அனுப்பினார்கள். இவர்கள் ‘கனாத்’ பள்ளத்தாக்குடைய முற்பகுதியில் தங்கினர். முஸ்லிம்களின் வருகையை அறிந்த சுதா சமூகத்தைச் சார்ந்த ஜியாத் இப்னு ஹாரிஸ் என்பவர், நபி (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் எனக்குப் பின்னால் இருக்கும் எனது சமூகத்தார் சார்பாக வந்துள்ளேன். நான் எம் சமூகத்தாருக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தங்களுடைய படையைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

நபி (ஸல்) தங்களது படையை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். ஜியாத் தமது சமூகத்தாரிடம் வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்கு ஆர்வமூட்டினார். அவர்களில் பதினைந்து நபர்கள் தயாராகி நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க மதீனா வந்தனர். நபி (ஸல்) அம்மக்களுக்கு இஸ்லாமை எடுத்துக் கூற, அவர்கள் முஸ்லிம்களாயினர். அதன் பின் தமது சமூகத்தாரிடம் வந்து இஸ்லாமிய அழைப்புப் பணி மேற்கொண்டதால் அம்மக்களில் பலர் முஸ்லிம்களாயினர். நபி (ஸல்) இறுதி ஹஜ்ஜுக்காக வந்த போது அவர்களில் நூறு பேர்கள் நபி (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டனர்.

5) கஅப் இப்னு ஜுஹைர் வருகை

அரபியரின் பிரபலமான கவிக் குடும்பத்தில் பிறந்தவரான இவரும் புகழ்பெற்ற கவிஞராகத் திகழ்ந்தார். இவர் நபி (ஸல்) அவர்களைத் தன் கவிகள் மூலம் காயப்படுத்திக் கொண்டிருந்தார். நபி (ஸல்) ஹிஜ்ரி 8ல், தாயிஃப் போர் முடிந்து மதீனா திரும்பிய பின் கஅப் இப்னு ஜுஹைருக்கு அவரது சகோதரர் ஃபுஜைர் இப்னு ஜுஹைர் கடிதம் ஒன்று எழுதினார். அதில், “தன்னை இகழ்ந்து கவிபாடி நோவினை தந்த பலரை மக்காவில் நபி (ஸல்) கொன்று விட்டார்கள். நபியவர்களை இகழ்ந்து வந்த குறைஷிகளில் பலர், தப்பித்தோம்! பிழைத்தோம்! என பல இடங்களுக்கு வெருண்டோடினர். உனக்கு உயிர் மேல் ஆசையிருந்தால் நபி (ஸல்) அவர்களிடம் உடனே செல்! மன்னிப்புக் கோரி வருபவரை நபி (ஸல்) கொல்ல மாட்டார்கள். அவ்வாறில்லையெனில் நீ பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிடு!” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கஅப் பதில் எழுத, அதற்கு அவரது சகோதரர் பதில் தர இவ்வாறு கடிதத் தொடர்பு இருந்து கொண்டிருந்தது. கஅப் தனது சகோதரன் கடிதங்களால் நெருக்கடியை உணர்ந்தார். அவருக்கு உயிர் மீது பயம் வந்தது. உடனே மதீனா சென்று ஜுஹைனா கிளையிலுள்ள ஒருவரிடம் விருந்தாளியாகத் தங்கினார். அவருடன் சென்று ஸுப்ஹ் தொழுகையை நிறைவேற்றிய பின் அவரது ஆலோசனைக்கிணங்க நபி (ஸல்) அவர்களிடம் சென்றமர்ந்து தனது கரத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்துடன் வைத்துப் பேசினார்.