பக்கம் - 500 -
லாத்தை உடைப்பதற்காக நபி (ஸல்) தங்களின் தோழர்கள் பலரைக் காலித் இப்னு வலீது (ரழி) தலைமையில் அனுப்பினார்கள். இக்குழுவில் இடம்பெற்ற முகீரா இப்னு ஷுஃபா (ரழி) ஒரு கோடரியை எடுத்துக் கொண்டு “நான் இப்பொழுது ஸகீஃப் கிளையினரால் உங்களை சிரிப்பில் ஆழ்த்துகிறேன் பாருங்கள்” என்று கூறி லாத் சிலை இருந்த பீடத்தை இடித்து விட்டுத் தானாக வேண்டுமென்றே கீழே வீழ்ந்தார். அதைக் கண்ட கூட்டத்தார் “அல்லாஹ் முகீராவை நாசமாக்கி விட்டான். எங்களது (பெண் கடவுள்) இறைவி முகீராவைக் கொன்று விட்டது” என்று துடியாய் துடித்தனர். அதனைக் கேட்ட முகீரா வெகுண்டெழுந்து “அல்லாஹ் உங்களை நாசமாக்குவானாக! இது என்ன? கல்லும் மண்ணும் சேர்ந்த கலவைதானே?” என்று எள்ளி நகையாடி லாத்தை உடைத்தெறிந்து அதன் மதில் மேல் ஏறினார். அவரைத் தொடர்ந்து முஸ்லிம்களும் பாய்ந்து ஏறி இடித்துத் தள்ளினர். பீடங்களைத் தோண்டி, அங்கிருந்த செல்வங்களை அள்ளிக் கொண்டு காலித் (ரழி) தலைமையில் முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தனர். இந்நிகழ்ச்சி ஸகீஃப் கிளையினருக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. இவ்வெற்றிக்காக நபி (ஸல்) அல்லாஹ்வை புகழ்ந்து துதி செய்தார்கள். பின்னர் தோழர்கள் கொணர்ந்த கனீமா பொருட்களை அவர்களுக்கே பங்கு வைத்துக் கொடுத்தார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

9) யமன் நாட்டு அரசர்களின் கடிதங்கள்

நபி (ஸல்) தபூக் போரிலிருந்து மதீனா வந்த பின் யமன் நாட்டு ஹிம்யர் பகுதி அரசர்களின் கடிதம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது. அந்த அரசர்களின் பெயர்கள் வருமாறு:

1) அல்ஹாரிஸ் இப்னு அப்து குலால், 2) நுஅய்ம் இப்னு அப்து குலால், 3) நுஃமான், 4) கைலு தீருஅய்ன், 5) ஹம்தான், 6) முஆஃபிர்.

இவர்கள் மாலிக் இப்னு முர்ரா ரஹாவியை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி நாங்கள் இணைவைத்தலையும் இணைவைப்பவர்களையும் விட்டு விலகி இஸ்லாமை ஏற்றோம் என்று தெரிவித்தனர்.

நபி (ஸல்) அந்த அரசர்களின் இஸ்லாமிய வருகையை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் முஸ்லிம்களின் சலுகைகள், அவர்களின் கடமைகள் முதலியவற்றை விவரித்தார்கள். ஒப்பந்தக்காரர்கள் ஜிஸ்யா வரியை முறையாக செலுத்தும் வரை அல்லாஹ் உடைய, அவனது தூதருடைய பாதுகாவல் உண்டு என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். மேலும், முஆத் இப்னு ஜபல் (ரழி) தலைமையில் தம் தோழர்களை மார்க்கக் கல்விப் பணிக்காக அம்மக்களிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். மேலும், யமனின் மேற்புறத்தில் உள்ள ‘அத்ன்’ பகுதியிலுள்ள சுகூன், சகாஸிக் என்ற இரு ஊர்களுக்கு இடையிலுள்ள இடங்களுக்கும் பொறுப்பாளியாக்கினார்கள். முஆத் அவர்கள் நீதிபதியாகவும், தலைமை ராணுவ அதிகாரியாகவும், ஜகாத், ஜிஸ்யா ஆகியவற்றை வசூல் செய்யும் அதிகாரியாகவும், மக்களுக்குத் தொழுகை நடத்தும் இமாமாகவும் தலைசிறந்து விளங்கினார்கள்.

அபூமூஸா அஷ்அயை யமனின் கீழ்புறத்தில் உள்ள ஜுபைத், மஃரப், ஜமா, ஸால் ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பாளியாக்கினார்கள். “நீங்கள் இருவரும் எளிமையாக்குங்கள் கடினமாக்காதீர்கள். நற்செய்தி நவிலுங்கள் வெறுப்பூட்டாதீர்கள். இணக்கமாக இருங்கள் பிணங்கிக் கொள்ளாதீர்கள்” என நபி (ஸல்) அழகிய அறிவுரை கூறியனுப்பினார்கள். நபி (ஸல்) மரணிக்கும் வரை முஆத் (ரழி) யமனிலேயே தங்கிவிட்டார்கள். அபூமூஸா அஷ்அ (ரழி) நபியவர்களுடன் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொண்டார்கள்.