பக்கம் - 516 -
இறுதிப் படை

தற்பெருமையும் அகம்பாவமும் கொண்ட ரோமானியர்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களின் வாழ்க்கைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரைக் கொன்றனர். ரோமர்களின் ஆளுநராக மஆன் பகுதியிலுள்ள ஃபர்வா இப்னு அம்ர் ஜுதாமி இஸ்லாமை ஏற்றபோது அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்ற நிகழ்ச்சியை முன்னர் விவரித்துள்ளோம்.

ரோமர்களின் இந்த அடக்குமுறைகளையும் அத்துமீறலையும் முடிவுக்கு கொண்டுவர பெரும் படை ஒன்றை ஹிஜ்ரி 11ல் நபி (ஸல்) தயார்படுத்தினார்கள். ரோமன் கட்டுப்பாட்டிலுள்ள ஃபலஸ்தீன் பகுதியின் ‘பல்கா“, ‘தாரூம்’ எல்லைகள் வரைச் சென்று எதிரிகளை எச்சரித்து வருமாறு அந்தப் படைக்கு ஆணையிட்டார்கள்.

எல்லைகளில் வசித்து வந்த அரபியர்களின் உள்ளங்களில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது நம்பிக்கையை வரவைப்பதற்காகவும், கிறிஸ்துவ ஆலயங்களின் ஆதிக்கத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற நம்பிக்கையை தகர்ப்பதற்காகவும், இஸ்லாமை ஏற்றுக் கொள்வது ஆபத்துகளையும் மரணத்தையும் தேடித் தரும் என்று எவரும் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவும் இப்படை அனுப்பப்பட்டது.

இப்படையின் தளபதி வயது குறைந்தவராக இருப்பதைக் குறித்து மக்கள் பலவாறாகப் பேசினர். அவருடன் புறப்படத் தயங்கினர். இதைக் கண்ட நபி (ஸல்) “அவரது தலைமையை இடித்துரைத்தீர்கள் என்றால் இதற்கு முன் அவரது தந்தையின் தலைமையையும் இடித்துரைத் திருப்பீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் தலைமைக்கு ஏற்றவரே! தகுதியானவரே! மக்களில் எனக்கு மிக நேசமானவர்களில் அவரும் ஒருவரே. அவருக்குப் பின் நிச்சயமாக இவரும் எனக்கு நேசமானவர்களில் ஒருவரே. (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு மக்களெல்லாம் உஸாமாவின் படையில் சேர்வதற்கு ஆர்வத்துடன் குழுமினர். உஸாமா (ரழி) படையை முழுமையாக ஒழுங்குபடுத்திக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு 8 கி.மீ. தூரத்திலுள்ள ‘ஜுர்ஃப்’ என்ற இடத்தில் தங்கினார். இத்தருணத்தில் நபி (ஸல்) நோய்வாய்ப்பட்டார்கள் என்ற துக்கமான செய்தி கிடைத்தது. அல்லாஹ்வின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்வதற்காக சற்றுத் தாமதித்தார். இப்படை அபூபக்ர் (ரழி) ஆட்சியின் போது புறப்பட வேண்டிய முதல் ராணுவப்படையாக அமைய வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்து விட்டது. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)