பக்கம் - 520 -
அன்றைய தினம் நபி (ஸல்) மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்:

1) யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

2) இங்கு வருகை தரும் மக்களை நான் கவனித்து உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல் செய்ய வேண்டும்.

3) மூன்றாவது விஷயத்தை அறிவிப்பாளர் மறந்துவிட்டார். அது இம்மூன்றில் ஒன்றாக இருக்கலாம்: 1) அல்லாஹ்வின் வேதத்தையும் நபி வழியையும் நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள். 2) உஸாமாவின் படையை அனுப்பி விடுங்கள். 3) தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் பேணுங்கள்.

தனக்கு நோய் கடினமாக இருந்தும் அன்றைய தினத்தின் (மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன் வியாழக்கிழமை) தொழுகை அனைத்தையும் நபி (ஸல்) அவர்களே தொழ வைத்தார்கள். அன்றைய தினத்தின் மஃரிபு தொழுகையில் ‘வல் முர்சலாத்தி உர்ஃபன்’ என்ற சூராவை ஓதித் தொழ வைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அன்றைய தினம் இஷா நேரத்தில் மேலும் நோயின் வேகம் அதிகமானது. நபி (ஸல்) அவர்களால் பள்ளிக்கு வரமுடியவில்லை. இந்நிலையைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதைக் கேட்போம். “மக்கள் தொழுதார்களா?” என நபி (ஸல்) கேட்டார்கள். “இல்லை இறைத்தூதரே! தங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்றோம். எனக்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள் எனக் கூற, நாங்கள் தண்ணீர் வைத்தோம். நபி (ஸல்) குளித்து விட்டு செல்வதற்கு முனைந்தார்கள். ஆனால், அவர்களை மயக்கம் ஆட்கொண்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்து “மக்கள் தொழுதார்களா?” என்றார்கள். நாங்கள் முதலில் கூறியது போல் இம்முறையும் பதில் கூறினோம். மீண்டும் தண்ணீர் வரவழைத்து முன்னர் போல குளித்தார்கள். பிறகு, நபி (ஸல்) அபூபக்ரை தொழ வைக்கும்படி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அப்போதிலிருந்து பதினேழு நேர தொழுகைகளை நபி (ஸல்) நோயுடன் இருக்கும் போது அபூபக்ர் (ரழி) மக்களுக்குத் தொழ வைத்தார்கள். (வியாழன் இஷாவிலிருந்து திங்கட்கிழமை ஃபஜ்ரு தொழுகை வரை) “இந்நாள்களில் அபூபக்ர் (ரழி) அவர்களைத் தொழ வைக்க சொல்ல வேண்டாம், காரணம், மக்கள் அதைத் துர்குறியாக எடுத்துக் கொள்வர்” என ஆயிஷா (ரழி) மூன்று அல்லது நான்கு முறை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அதனை மறுத்து விட்டார்கள். “நீங்கள் தானே யூசுஃபுடைய அந்தத் தோழிகள். அபூபக்ரே மக்களுக்கு தொழ வைக்கட்டும்” என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மூன்று நாட்களுக்கு முன்பு...

நபி (ஸல்) இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற, தான் கேட்டதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.” (தபகாத் இப்னு ஸஅது, முஸ்னத் அபூதாவூது, முஸ்னத் அபூ யஃலா)