பக்கம் - 523 -
பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.

நபி (ஸல்) அப்போது “இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்...

அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)

கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

கவலையில் நபித்தோழர்கள்

நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி “நபி (ஸல்) எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி (ஸல்) மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான நாளை நான் கண்டதில்லை” என அனஸ் (ரழி) கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)

ஃபாத்திமா (ரழி) “எனது தந்தையே! அழைத்த இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின் தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே” எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உமரின் நிலை

உமர் (ரழி) எழுந்து நின்று “சில நயவஞ்சகர்கள் நபி (ஸல்) இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை மூஸா இப்னு இம்ரான் (அலை) அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தனது சமூகத்தாரை விட்டு மறைந்து இருந்த போது மக்கள் மூஸா மரணித்து விட்டார் என எண்ணினார்கள். ஆனால், மூஸா (அலை) திரும்பி வந்தார்கள். அவ்வாறே நபியவர்களும் தன் இறைவனைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) நிச்சயம் திரும்ப வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுவார்கள்?” எனக் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)